குழந்தை பாக்கியம் வேண்டுமா?பில்லி சூனியம் அகல வேண்டுமா?அப்போ ஒருமுறை இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க
திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ ஒருமுறை திருவள்ளூரில் அமைந்துள்ள புட்லூர் அங்காளம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. நிச்சயமாக அங்காளம்மன் உங்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவாள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய புட்லூர் அங்காளம்மன் கோயில் வரலாற்றையும் சிறப்புகளையும் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர்.
சென்னையில் இருந்து இங்கு செல்ல வேண்டும் என்றால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயிலில் செல்லலாம். புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் புட்லூர் அங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
தல வரலாறு 1:
பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையில் இருந்து மீண்டு வர மகிசுரன் என்பவனிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார். ஆனால் பொன்மேனியால் நிலத்தை திருப்பவே முடியவில்லை.
கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தான். பொன்மேனியால் கொடுக்க முடியாமல் போகவே மகிசுரனுக்கு கோபம் வந்தது. இதனால் கோபமடைந்த மகிசுரன் ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு பொன்மேனிக்கு கட்டளையிட்டான்.
ஒரே இரவில் இதை அனைத்தையும் செய்ய முடியுமா என யோசித்தவாறே பொன்மேனி பூங்காவனத்திற்கு சென்றான். அன்றைய நாள் சிவராத்திரி என்பதால் அய்யோ கோயிலுக்கு சென்று சிவனை வழிபட முடியவில்லையே என பொன்மேனி மிகவும் வருந்தினான்.
அவனுடைய இஷ்ட தெய்வமான கருமாரியை வணங்கியவாறு இரவில் நிலத்தை உழத் தொடங்கினான். அப்போது ஏர் கலப்பை ஏதோ ஒன்றின் மீது மோதுவது போல அவனுக்கு தோன்றியது. என்னவென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே ரத்தம் பீறிட்டுக்கொண்டு வழிந்துக் கொண்டிருந்தது. அதை கண்ட பொன்மேனியின் கண்கள் இருட்டி கொண்டு வர அப்படியே மயங்கி விழுந்தான். அப்போது அவனுக்கு ஒரு குரல் கேட்டது. “நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார்.
நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். (அதனால் தான் இந்த ஊர் புற்றூர் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி புட்லூர் ஆகிவிட்டது). அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய்.
அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது. வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன்.” என அந்த குரல் ஒலித்தது.இவை நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பூங்காவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பொன்மேனியிடம் ஒரு ஆணும் ஒரு கர்ப்பிணியும் தண்ணீர் கேட்டனர்.
தண்ணீர் எடுத்து திரும்பி வந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் அங்கே இல்லை. தொடர்ந்து பொன்மேனி அவன் வேலையை பார்க்க தொடங்கி இருந்தான். அப்போது தான் மேற்கூறிய நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், “கவலைப் படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை.
நீ நல்லதையே செய்திருக்கிறாய். என்னை இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்து விட்டாய்” என அந்த குரல் கூறியது. பொன்மேனி சுய உணர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியுடைய குரல் என்பதை புரிந்து பரவசமடைந்தான்.
அவனது மகிழ்விற்கு எல்லையே இல்லை என்றே கூற வேண்டும். தொடர்ந்து இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்தனர்.
அவ்வாறே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்ற சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தல வரலாறு 2:
ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலையனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது களைப்படைந்த பார்வதி தேவி வேப்ப மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். தாகமாக இருப்பதாக கூறி சிவபெருமானிடம் தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டார்.
அருகில் இருந்த கூவம் நதியில் இருந்து சிவபெருமான் புனித நீர் எடுத்து வந்தார். அப்போது பெய்த கனமழையால் சிவபெருமானால் உடனடியாக பார்வதியிடம் வர இயலவில்லை. பசி தாகத்துடன் இருந்த பார்வதி தேவி மயங்கி தரையில் படுத்து விட்டார்.
அவரை சுற்றி மண் குவிந்து புற்றாக மாறி விட்டது. புற்றுக்குள் இருந்த பார்வதி தேவியை கண்ட சிவபெருமான் அங்கேயே நின்று விட்டார். அங்கேயே தாண்டவமும் ஆடினார். அதனால் அங்குள்ள சிவபெருமான் தாண்டவராயன் என அழைக்கப்படுகிறார். பார்வதி தேவியை கண்டு கவலையுற்றதால் புட்லூரில் உள்ள சிவபெருமான் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை காணலாம்.
தலத்தின் சிறப்புகள்:
புட்லூரில் இருக்கும் புற்று இன்றைய நாள் வரையிலும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. தன்னை தேடி வரும் பக்தர்களில் சிலருக்கு பாம்பாகவும் சிலருக்கு மூதாட்டியாகவும் இன்னும் சிலருக்கு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போலவும் காட்சியளக்கிறார்.
இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது. எனவே தான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தல அமைப்பு:
கோயிலின் கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக வானத்தை பார்த்தப்படி பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறார். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்தப்படி பார்வதி தேவி அருள்பாலிக்கிறார்.
அந்த சன்னதியில் கால் வைத்த அடுத்த நொடியே உடம்பில் ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும்.மண்புற்று தேவிக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம் பழ மாலைகளுடனும் பூ அலங்காரங்களுடனும் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள்.
சன்னதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேப்பம் மரம் இருப்பதை பார்க்கலாம். அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் மற்றுமொரு மண்புற்று உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அமுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படுகிறது.
இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். அவ்வாறு முடிச்சிடுவதன் மூலம் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.
தல அற்புதங்கள்:
அம்மனின் சன்னதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும். வாழ்வில் இருக்கும் அனைத்து தடைகளும் விலகும். இத்தலத்தின் நாயகியான புட்லூர் அங்காள பரமேசுவரி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறார்.
தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங்களையும் விரட்டுகிறார். பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் வந்து சேரும்.
குழந்தை வரம் கிடைக்கும் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.
கோயில் நேரம்:
இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காளபரமேஸ்வரி கோயிலில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை வழிபாடு நடைபெறும். மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |