2026: பொங்கல் தினத்தன்று தவறாமல் செய்யவேண்டிய முக்கியமான பரிகாரங்கள்
தமிழர் திருநாளான தைத்திருநாள் தமிழ்நாட்டில் மிக விசேஷமாக கொண்டாடப்படக்கூடிய பண்டிகை ஆகும். இந்த நாளில் எல்லோரும் வீட்டின் வாசலில் வண்ண நிறங்களில் கோலம் போட்டு, அதிகாலை குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அது மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளில் நிறைய விளையாட்டு போட்டிகள் இந்த பொங்கல் தினத்தை ஒட்டி நடைபெறும்.
அப்படியாக அந்த பொங்கல் தினம் அன்று நாம் ஆன்மீக ரீதியாக முக்கியமாக செய்ய வேண்டிய சில பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

பொங்கல் என்றாலே அன்றைய தினம் குலதெய்வ வழிபாடு நாம் அவசியம் செய்ய வேண்டும். அது மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய பெரியவர்கள் பெற்றோர்கள் இவர்களிடத்தில் நாம் ஆசிர்வாதம் வாங்குவது மிக மிக முக்கியம்.
அதைப்போல் சூரிய பகவானை இந்த நாளில் தண்ணீர் படைத்து மற்றும் விளக்கேற்றி வழிபாடு செய்வது நமக்கு ஒரு மிகச்சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும். மேலும் பொங்கல் தினத்தன்று நாம் அன்னதானம் செய்து வழிபாடு செய்வது என்பது நம்முடைய பாவங்களை போக்க கூடியதாக இருக்கிறது.
குறிப்பாக கோவிலில் நடக்கக்கூடிய அன்னதான நிகழ்வுக்கு நம்மால் முடிந்த உணவுப் பொருட்களை நாம் வாங்கி கொடுக்கலாம்.
குறிப்பாக ஒருவர் வீட்டில் அதிக அளவிலான திருஷ்டி இருக்கிறது என்றால் அவர்கள் காய்ந்த மிளகாய் கோவிலுக்கு வாங்கி கொடுக்கும் பொழுது அவர்களுடைய திருஷ்டியெல்லாம் முற்றிலுமாகக் கழிந்து விடும்.

அதேபோல் சீரகம், மிளகு போன்ற பொருட்களையும் நாம் கோவிலுக்கு தானம் செய்யலாம். இவை எல்லாம் நமக்கு ஒரு மிகச்சிறந்த புண்ணியத்தைப் பெற்றுக் கொடுக்கும். ஆக, தை திருநாள் ஆன பொங்கல் பண்டிகையில் நம்முடைய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நம்முடைய வழிபாடுகள் இருக்க வேண்டும்.
நம்முடைய முன்னோர்கள் என்பதும் நம்முடைய குலதெய்வம் தான். குலதெய்வத்தில் துவங்கி நம்முடைய பாட்டன், பூட்டன் என்கின்ற அனைவரையும் மனதில் நினைத்து அன்றைய தினம் அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது நிச்சயம் அந்த தைத்திருநாளை சிறப்பாக அமையச் செய்யும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |