ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நேரமாகும்.
நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் இருக்கிறது. அதில் ராகு கேதுவிற்கு ஹோரை கிடையாது. மீதமுள்ள ஏழு கிரகங்களுக்கும் ஹோரை உள்ளது.
அதன்படி பார்க்கும்பொழுது ஒவ்வொரு ஹோரை என்பது ஒரு மணி நேரமாகும். இந்த உலகம் 24 மணி நேரம் என்று கணக்கை கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜோதிடத்தில் தினமும் காலை 6 மணி முதல் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 24 மணி நேரமாக அதை எடுத்துக் கொள்வார்கள். பொதுவாக காலை 6 மணி என்பதை நாம் சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரை பார்க்க தொடங்குகின்றோம். அதாவது ஹோரை தொடங்கும் காலம் என்பது அந்த நாளினுடைய காலை 6 மணி என்பது ஆகும்.
மேலும் அந்தந்த கிழமைகளுக்கு உரிய அதிபதிகள் தான் அந்த ஹோரை நாளில் காலை 6 மணிக்கு தொடங்கும் கிரகமாகும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை எடுத்துக் கொண்டால் ஞாயிற்றுக்கிழமையின் அதிபதி சூரிய பகவான். அவருடைய ஹோரை என்பது காலை 6 மணிக்கு தொடங்குகிறது. அதுவே புதன்கிழமையை எடுத்துக் கொண்டால் அவருடைய அதிபதி புதன் பகவான் ஆவார். அப்பொழுது அந்த நாளுக்குரிய ஹோரை புதன். அவை காலை 6 மணியில் இருந்து தொடங்குகிறது.
மேலும் இந்த ஏழு கிரகங்களில் நாம் புதன் குரு சுக்கிரன் ஆகிய மூன்று ஹோரைகளில் நல்ல காரியங்களை தொடங்கலாம். அதைப்போல் வளர்பிறை சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்கள் செய்வதற்குரிய நேரம் ஆகும். ஆனால் சூரியன் செவ்வாய் சனி ஆகிய மூன்று ஹோரையும் அசுப ஹோரையாக கருதப்படுகிறது. ஆதலால் இந்த ஹோரையில் நாம் முக்கியமான விஷயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.



