ஏமாற்றத்தால் அவதி படுபவர்கள் ஒரு முறை சென்று வழிபட வேண்டிய ஆலயம்
மனிதர்கள் பூமியில் வாழும் இந்த குறைந்த நாட்களில் எல்லாம் தனக்கு தான் என்று ஆசையில் பிறரை துன்பத்திற்குள் ஆளாக்கி விடுகிறார்கள். மனதில் இரக்கமே இல்லாமல், சக உயிர்களை வாட்டி வதைக்கிறார்கள்.
அவ்வாறு ஒருவர் நமக்கு செய்யும் துன்பத்தையும் துரோகத்தையும் தாங்கி கொள்ள முடியாமல் மனம் ஓர் இடத்தை தேடி அலையும். அது தான் இறைவனின் சந்நிதி. அப்படியாக, வாழ்க்கையில் மீளவே முடியாத துன்பத்தில் சிக்கி தவிப்பவர்கள் ஒரு முறை இருட்டுக்கல் முனியப்பன் கோயில் சென்று வழிபாடு செய்து வர அவர்கள் வாழ்க்கையில் நல்ல தெளிவையும் நல்ல திருப்பங்களையும் காண முடியும்.
சேலம் மாவட்டம் மூக்கனேரி ஏரியை ஒட்டி அமைந்த சாலையில் சென்றால் மன்னார்பாளையம் என்ற கிராமம் வரும். அதை கடந்து சென்றால் டி.பெருமாபாளையம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது தீராத துயர் தீர்க்கும் இருட்டுக்கல் முனியப்பன் கோயில்.
கோயிலுக்கு கோபுரம் என்று எதுவும் கிடையாது, ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கிழ் அமைந்த ஸ்ரீ இருட்டு கல் முனியப்பன் சுவாமி அருகே இருப்பக்கமும் காவல் தெய்வங்கள் இருக்கிறார்கள். திரு உருவ சிலையின் பாதத்தில் சுயம்பு வடிவத்திலும் காட்சிதருகிறார் நம் ஸ்ரீ இருட்டு கல் முனியப்பன்.
இந்த கோயிலில் முக்கிய விஷேசமாக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை மதியம் பன்னிரண்டு மணிக்கு நடைபெறும் "பிசாசாடல்"நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதாவது, எதிர்மறை சக்திகளால் சூழப்பட்டு துன்பப்படுபவர்கள் இந்த கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து இந்த பிசாசாடல்" பூஜையில் கலந்து கொண்டால் நல்ல தீர்வை பெறலாம் என்கிறார்கள்.
மேலும், எத்தனை மருத்துவர்களையும் பார்த்தும் குழந்தை பாக்கியம் தாமதம் ஆகும் நபர்களும் இங்கு வந்து முனியப்பன் சுவாமியை வேண்டிக்கொண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் பெறுவார்கள். அவ்வாறு வேண்டுதல் வைக்கும் பொழுது, ஆணாக இருந்தால் ஆண் சிலையும்,பெண்ணாக இருந்தால் பெண் சிலையும் வைத்து நேர்த்திகடன் செலுத்தி செல்கிறார்கள்.
அதனடிப்படையில் நூற்றுக்கணக்கான குழந்தை சிலைகள் கோயிலை சுற்றி இருப்பதை நம்மால் காணமுடியும். கோயிலுக்கு அருகிலேயே சிவன்,பார்வதி,விஷ்ணு,முருகன் போன்ற தெய்வங்களும் அழகாக காட்சி தருகின்றனர்.
கோயிலருகே உள்ள மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுவதும், தங்கள் வேண்டுதலை சீட்டில் எழுதி கட்டி வைப்பதும் உண்டு. அதே போல் சிலரை பொன், பொருள், நிலம் என்று ஆசைக்காக வாழ விடாமல் துன்புறுத்துவார்கள்.
அவர்கள் இந்த ஆலயம் வந்து முட்டை வைத்து அல்லது உயிருடன் கோழி வாங்கி கெட்டி பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு துன்பம் கொடுப்பவர் தடம் தெரியாமல் தொலைந்து விடுவார்கள் என்பது நம்பிக்கை.
அதோடு, நீண்ட நாட்களாக குடி பழக்கத்தால் அவதி படுபவர்கள் இந்த கோயிலுக்கு வந்து அவர்கள் கொடுக்கும் மருந்தை சாப்பிட்டால் அவர்கள் மறுபடியும் அந்த குடி பழக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |