இந்த உலகத்தில் காரணமே இல்லாமல் யாரும் இங்கு யாரையும் சந்திப்பதே இல்லை
இந்த உலகத்தில் நிறைய விஷயங்கள் வியக்கத்தக்கதாகத் தான் இருக்கும். ஆனால், ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். நம்முடைய மனத் தேடுதலுக்கான விடை கட்டாயம் எங்கிருந்தாலும் அது நம்மை வந்து அடையும் அல்லது நம்மை அந்த இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.
அப்படியாக, பலருக்கும் பல நேரங்களில் நான் மனதில் நினைத்தது அவ்வாறே நடந்து விட்டதே என்கின்ற ஒரு ஆச்சரியம் வருவது உண்டு. இந்த சின்ன இடத்தில் தான் இறைவன் நிறைந்து இருக்கிறார்.

பல ஜென்ம தொடர்புகள்:
இந்த பிரபஞ்சம் பல்லாயிரம் ஆண்டு காலம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் நாம் எத்தனை முறை பிறந்து இறந்திருக்கின்றோம் என்று தெரியாது. அவ்வாறு நாம் பிறந்து இறந்து இருந்தால் இந்த பூமியில் தான் அவை நடந்து இருக்கக்கூடும். அந்த தொடர்ச்சியால் பல விஷயங்களை நான் முன்பே பார்த்தது போல் போன்ற அனுபவம் பெறுகின்றோம்.
இதைத்தான் பல நேரங்களில் நாம் கர்ம வினை என்று சொல்கின்றோம். இதையே தான் நாம் பல நேரங்களில் நாம் உள்ளுணர்வு என்று சொல்கின்றோம். அப்படி இருக்க இந்த பூமியில் நடக்கும் எந்த சந்திப்பும் சாதாரணமாக நடப்பதே இல்லை. ஒவ்வொரு சந்திப்பிற்கு பின்னாலும் நம் கர்மவினைகளும், ஒரு பாடமும், ஒரு ஆறுதலும், பல தேடுதலுக்கான விடையும் உள்ளது.

சந்திப்புகள் சாதாரணமாக நிகழ்வது அல்ல:
இந்த உலகத்தில் நம்முடைய ஒவ்வொரு சந்திப்புகளும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு அவமானங்களும், ஒவ்வொரு வெற்றியும், ஒவ்வொரு தோல்விக்கு பின்னாலும் பல காரணங்கள் புதைந்து கிடக்கின்றது. அப்படியாக, சந்திப்புகள் எப்பொழுதும் சாதாரணமாக இருப்பதில்லை என்பதற்கான ஒரு உண்மை கதையை பார்க்கலாம்.
ஒரு ஊரில் ஒரு எழுத்தாளர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் ஜோதிடரும் கூட. ஆனால், நெருங்கியவருக்கு மட்டுமே கணிப்புகள் சொல்வது உண்டு. அப்படியாக, அந்த எழுத்தாளரை சந்திக்க ஒரு நபர் வருகிறார்.
அவர் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர். இரண்டரை வருடம் முன்பு இந்த எழுத்தாளர் அந்த தொழில் அதிபரை நெருங்கியவரின் அறிமுகத்தோடு ஒரு ஆலோசனைக்காக்க சந்தித்து இருக்கிறார்.
இப்படி இருக்க சுமார் இரண்டரை ஆண்டு கழிந்தது. இருவரும் மிகப்பெரிய அளவில் சந்திப்பதோ அல்லது பேசிக்கொண்டதோ இல்லை. ஆனால், ஒரு நாள் அந்த தொழிலதிபர் அந்த எழுத்தாளரின் ஊரை கடந்து செல்ல நேரும் பொழுது அவர் மனதிற்குள் இந்த எழுத்தாளரை சந்தித்துவிட்டு சென்றால் என்ன? என்பது போல் ஒரு எண்ணம் தோன்றி இருக்கிறது.
அவர் முன்பு பலமுறை அந்த ஊரை கடந்து சென்று இருக்கிறார். ஆனால், ஏன்? அந்த நாள் மட்டும் அவருக்கு இந்த எழுத்தாளர் வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது? இங்கு தான் அந்த தொழில் அதிபருக்கு பிரபஞ்சம் காட்டிய வழி.

அங்கு நடந்த சந்திப்பு நிச்சயம் சாதாரணமானதல்ல. இப்படியாக சந்திப்புகளும் நிகழ்ந்து விட்டது. இருவரும் பல்வேறு விஷயங்கள் பேசிக்கொண்டு இருக்கின்ற பொழுது எழுத்தாளர் சொல்கிறார் நானும் ஜாதகம் பார்ப்பது உண்டு என்று.
உடனே அந்த தொழில் அதிபரும் எனக்கும் ஜோதிடத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. நான் வீட்டிற்கு சென்று என்னோட ஜாதகம் அனுப்புகின்றேன். கட்டாயம், நீங்கள் பார்த்த சொன்னால் வழிகாட்டுதலாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டு கிளம்பி விடுகிறார்.
அந்த தொழில் அதிபரும் வீட்டிற்கு சென்று வாட்ஸப்பில் அவர் ஜாதகம் அனுப்ப, அதை பார்த்த பிறகு தான் எழுத்தாளர் உணர்கிறார் அன்று நடந்த சந்திப்பு நிச்சயம் சாதாரண சந்திப்பு இல்லை என்று.
அந்த தொழில் அதிபருக்கு தெரியாது அவருடைய வாழ்க்கையில் எவ்வளவு ஒரு முக்கியமான கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறார்? இன்னும் சொல்லப்போனால் அவர் வாழ்க்கையில் மீண்டும் நிச்சயம் அப்படி ஒரு கடினமான ஒரு காலக்கட்டம் இனி அவர் சந்திக்க போவது இல்லை. இரண்டரை வருடம் முன்பாக சந்திப்புகள் நிகழ்ந்து இருந்தாலும் அதன் உண்மை காரணம் இப்பொழுதே வெளிப்பட தொடங்குகிறது என்று எழுத்தாளர் உணரந்துக்கொள்கிறார்.
அப்பொழுது, அந்த எழுத்தாளர் முடிவு செய்தார் இவருக்கு தான் நம் துணை இப்பொழுது தேவை. அவர் கடினமான காலங்களில் அவருக்கு உடன் இருந்து வழிகாட்டி விட்டால் பிறகு அவர் வாழ்க்கையில் இனி பிரச்சனை வரப்போவது இல்லை எல்லாம் மாறிவிடும்.
ஆக, அங்கு காலம் கொடுத்த கடமையால் ஒரு நட்பு உருவாகியது. அந்த நட்பு அவரின் பாரத்தை பகிர்ந்துக்கொள்ள நிச்சயம் கடவுளால் அனுப்பப்பட்டது. இன்று அந்த தொழில் அதிபர் கடின காலத்தை கடந்து மகிழ்ச்சியாக உள்ளார்.
அந்த தொழில் அதிபர் இதுவரை வாழ்க்கையில் எவ்வளவோ இன்னல்கள் சிக்கல்கள் கடந்து வந்திருக்கலாம். ஆனால், அன்றைய காலம் அந்த எழுத்தாளர் அவருடன் கடின காலங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்பது விதி.
ஆக, துன்பம் மற்றும் போராட்டம் கொடுக்கும் கடவுள் அதை கடந்து செல்ல நல்ல மனிதரையும் கொடுப்பார். அதைவிட முக்கியமாக அந்த எழுத்தாளரும் வாழ்க்கையின் சந்தித்த பல சூழ்ச்சி, துன்பம் காரணமாக அவரை அறிந்துக் கொள்ள ஜோதிடம் கற்றுக் கொள்ள தொடங்கியவர்.
அவர் வாழ்க்கை துன்பத்தின் எல்லையில் இருந்த பொழுது உதவிய சில ஜோதிடரும் கற்றுக் கொடுத்த ஆசிரியருமே கண் முன் வந்து சென்றனர். கடின காலங்களில் நமக்கு ஒருவர் இருந்தார்கள், அதைபோல் இன்று நாம் இன்னொருவருக்கு.
அதோடு எழுத்தாளர் கடினமான காலத்தில் இருந்த பொழுது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இரவு பகல் பாராமல் அவருடன் இருந்து ஆறுதல் சொல்லியவர் பலர். ஆக, அவர் அதை ஓரு கடமையின் தொடர்ச்சியாகவும் காலத்தின் கணக்கையும் நன்கு உணர்ந்து அவருடன் பயணிக்க தொடங்குகிறார்.

இது தான் காலத்தின் அழகு. நமக்கு வாழ்க்கையில் எப்பொழுது என்ன கொடுக்க வேண்டும்? எப்பொழுது யாரை சந்திக்க வேண்டும்? என்று காலமே முடிவு செய்கிறது. ஆதலால், நம் கடமை செய்வோம், மனதில் நல்லதை நினைப்போம். அதுவே நம்மை சரியான மனிதரின் சந்திப்பதை ஏற்படுத்திக் கொடுக்கும்.
ஆக, பிரச்சனை நம் முன் வருகிறது என்றால் அதற்கான ஆறுதலும் பதில்களும் நம் பின்னாலே காலத்தால் அனுப்படும். எதற்கும் கலங்க வேண்டாம். இந்த உலகம் அதிசயமும் அற்புதமும் நிறைந்தது. நம்பிக்கையோடு பயணம் செய்தால் நிச்சயம் நாம் அதை உணரலாம்.
எல்லாம் கடந்து போகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |