காஞ்சி காமாட்சியையும் அண்ணாமலையாரையும் வழிபட்ட பலன் தரும் ஆலயம்
சென்னையில் பல்வேறு கோயில்கள் இருந்தாலும், அனைவரும் கட்டாயம் ஒரு முறையாவது சென்று தரிசிக்கவேண்டிய கோயில் ஒன்று இருக்கிறது. அது தான் காளிகாம்பாள் ஆலயம். இந்த கோயில் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என்று சொல்கிறார்கள்.
இது தமிழ்நாட்டின் மிகவும் பழமையான கோயில் மட்டும் அல்லாமல் வரலாற்று சிறப்புடைய கோயில் ஆகும். இந்த கோயிலில்ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால் இங்கு வைக்கும் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்என்பது ஐதீகம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் உண்டு, அதில் பாரிமுனை காளிகாம்பாள் ஆலயம் சென்று அன்னையை தரிசித்து குங்குமம் வைத்து கொள்ள நம் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையை பெற்று வாழ்க்கையில் வெற்றியும் மோட்சமும் கிடைக்கும் என்கிறார்கள்.
இங்கு அன்னை காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால், இங்கு சென்று அன்னையை வழிபாடு செய்ய தீய குணங்கள் அனைத்தும் விலகி விடும்.
அதே போல் அன்னையை வழிபட்டு ஆன்மீகத்தில் சிறப்பு பெயர் பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர். மேலும், காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்து காமாட்சி அம்மனாகும்.
இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை மிகவும் சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் "சுவாசினி சங்கம்'' அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னை காளிகாம்பாள் திருத்தலத்தில் இரு பிரகாரங்கள் இருக்கிறது.
அதில் உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன.
வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.
"உள்ளம் உருகுதய்யா முருகா'' என்ற முருக பாடலுக்கு உருகாதவர் யாரும் இல்லை. அந்த பாடலை பாடிய டி.எம்.சவுந்தராஜன் 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னை காளிகாம்பாளை மனம் உருகி தியானம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு செல்வம் பெருகி நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
அன்னையிடம் உரிமையோடு வழிபாடு செய்தால் அன்னை நம்மை பக்குவம் ஆக்குவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அது மட்டுமல்லாமல் மராட்டிய மன்னன் சிவாஜி ஸ்ரீ காளிகாம்பாளை வழிபட்ட பின்னர் தான் தன்னை சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டாரார்.
மகாகவி சுப்ரமண்ய பாரதி வழிபட்டு, ‘யாதுமாகி நின்றயாய் காளி’ என காளிகாம்பாள் குறித்து பாடலை எழுதியுள்ளார்.ஆக சென்னை செல்பவர்கள் கட்டாயம் ஒருமுறை அன்னையை தரிசனம் செய்ய வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள், திரும்பும் திசை எல்லாம் வெற்றி கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |