2026: ஹயக்ரீவர் ஜெயந்தி: குழந்தைகள் கல்வியில் சிறக்க வழிபாடு செய்யும் முறை
ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி மிக முக்கியம். படிப்பு தான் ஒரு மனிதன் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்த விதி. அந்த வகையில், நாம் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வது உண்டு.
ஆனால், அந்த சரஸ்வதி தேவிக்கே குருவாக விளக்கக் கூடியவர் ஹயக்ரீவர். இவர் செல்வம், ஞானத்தை போற்றும் கடவுளாக போற்றப்படுகிறார். ஹய என்றால் குதிரை என்றும், க்ரீவா என்றால் கழுத்து என்றும் பொருள்.
அதாவது, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஞானம் மற்றும் அறிவை உயர்த்தி அதன் வழியாக வாழ்க்கையில் எல்லா விதமான நலன்களையும் வாரி வழங்கி, குதிரையை போல் கம்பீரமாக வாழவைக்க கூடிய தன்மை வாய்ந்தவர் ஹயக்ரீவர்.

இவரை வழிபாடு செய்ய பிரம்ம முகூர்த்தம், ஏகாதசி, நவமி திதிகள், புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகியவை மிக உகந்த நாளாகும். மேலும், அந்த தினங்களில் அவருக்குரிய மந்திரங்களை 9, 11,108,1008 எண்ணிக்கையில் உச்சரிக்க வேண்டும்.
குறிப்பாக இந்த மந்திரங்களை கிழக்கு நோக்கி பாராயணம் செய்யும் பொழுது அளவற்ற நன்மைகள் கிடைக்கும். இந்த ஆண்டு ஹயக்ரீவ ஜெயந்தி ஆகஸ்ட் 27 ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று வேதங்களையும் நாம் வழிபட செய்ய வேண்டும். பிரம்ம தேவர் இந்த தினத்தில் தான் வேதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதாக ஐதீகம்.
அதனால், ஆவணி மாத பெளர்ணமி நாளில் பிரமாணர்கள் வேதங்களை படிக்க துவங்குவதற்கான நாளாக வைத்துள்ளனர்.
கல்வியில் சிறக்க வழிபாடு :
ஒருவர் கல்வியில் சிறந்த விளங்கவும் கல்வி தொடர்பான தடை, தோஷம் விலகவும் சரஸ்வதி தேவிக்கே குருவாக விளங்கக் கூடியவர் ஹயக்ரீவரை வழிபாடு செய்ய நல்ல முன்னேற்றம் உண்டு. மேலும், பெருமாளின் அவதாரமாக விளங்கக் கூடியவர் தான் இந்த ஹயக்ரீவர். இவர் குதிரை முகமும், மனித உடலும் தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார்.

ஹயக்ரீவர் அவதாரம் ஏன்?
குதிரை முகம் கொண்ட மது, கைடபன் எனும் அசுரர்களுக்கு தங்களுடைய படைக்கும் தொழில் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. இதன் விளைவாக படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் இருந்து வேதங்களை திருடிக் கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டார். இதனால் உலகத்தில் படைக்கும் தொழில் முற்றிலும் முடங்கியது.
இதனால் மிகுந்த கவலை கொண்ட பிரம்மா பெருமாளை சரண் அடைகிறார். இதனால் பெருமாள் குதிரை முக அரக்கர்களுடன் போரிடுவதற்காக குதிரை முக வடிவெடுத்து, பாதாள உலகம் சென்று, அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார் திருமால். குதிரை முகமும், மனித உடலும் கொண்ட இந்த ரூபத்தையே நாம் ஹயக்ரீவர் ரூபம் என்கிறோம்.
வேதங்களை புனிதமாக்கிய ஹயக்ரீவர் :
இவ்வாறு அசுரர்களை வதம் செய்த பிறகும் ஹயக்ரீவரின் உக்கிரம் தனியவே இல்லை. அவருடைய உக்கிரத்தை தணிப்பதற்காக மகாலட்சுமி தேவி அவருடைய மடியில் சென்று அமர்ந்த உடன் அவர் கோபம் தணிந்து சாந்தமாக தோன்றிய இந்த வடிவத்தை தான் லட்சுமி ஹயக்ரீவ வடிவமாக போற்றி வழிபாடு செய்கின்றோம்.
மேலும், அசுரர்கள் வேதங்களை எடுத்து சென்றதால் அதனுடைய புனித தன்மை போய்விட்டதாக வேதங்கள் வருந்தியது. ஆதலால், ஹயக்ரீவர் தன்னுடைய மூச்சுக்காற்றால் அவற்றை புனிதமாக்கினார்.
இவ்வாறு வேதங்களை மீட்டு அவற்றினுடைய கலங்கத்தை போக்கியதால் இவர் ஞானத்தின் வடிவமாகவும் லட்சுமி உடன் காட்சி தருவதால் இவர் செல்வத்திற்கு அதிபதியாகவும் விளங்குகிறார்.

ஹயக்ரீவர் வழிபாடு :
இவருக்கு ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய திருவோண நட்சத்திர திருநாளன்று ஏலக்காய் மாலை சமர்ப்பித்து தேன் படைத்தும் புத்தகம் பேனா போன்றவற்றை படைத்தும் வழிபாடு செய்வதால் கல்வி தொடர்பான எல்லா தடைகளும் நீங்குகிறது.
மேலும், மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள் என்றால் கவலை கொள்ளாமல் பெற்றோர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து ஹயக்ரீவரை வழிபாடு செய்ய நிச்சயம் அவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.
அதோடு பெற்றோர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து அவருடைய மந்திரங்களை பாராயணம் செய்யும்பொழுது குழந்தைகளுடைய மந்த நிலை விலகி அவர்களுக்கு ஒரு தெளிவும் ஞானமும் பிறக்கும்.
ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம் :
"ௐ தத் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்
ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் :
ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே
இந்த மந்திரத்தை புதன்கிழமைகளிலும் அல்லது சனிக்கிழமைகளிலும் பெருமாள் அல்லது ஹயக்ரீவர் படத்திற்கு முன்பாக அமர்ந்து பாராயணம் செய்து வர நிச்சயம் வெகு விரைவில் நீங்கள் நினைத்த கல்வி வாய்ப்புகளும், கல்வியில் சிறந்த மதிப்பெண்களும் மதிப்பும் மரியாதையும் பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |