காசி யாத்திரை செல்ல நாம் கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்
சிவபக்தர்கள் அனைவர்க்கும் மிக பெரிய கனவாக காசி யாத்திரை செல்லவேண்டும் என்று இருக்கும்.அப்படியாக காசிக்கு செல்லும் முன் சில விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் அப்பொழுது தான் நாம் காசிக்கு சென்ற முழு பயனை பெற முடியும்.
அந்த வகையில் காசி யாத்திரை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.ஒருவர் காசிக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
அதாவது ராமேஸ்வரத்தில் உள்ள 21 தீர்த்தங்களில் முறையாக நீராடி ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.அதோடு அக்னி தீர்த்தத்தில் நீராடி எடுத்த மணலை பத்திரமாக பூஜை செய்து, காசி யாத்திரை ஆரம்பித்த பின்னர் முதலில் பிரயாகை திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு சென்ற மணலை கரைக்க வேண்டும்.
மேலும்,காசியில் கங்கை தீப ஆராதனை உலகப்புகழ் பெற்றது.ஆக காசியில் ஓடும் கங்கையில் நீராடி பிறகு , காசி விஸ்வேஸ்வரர், அன்னபூரணி, விசாலாட்சி மற்ற தெய்வங்களை தரிசித்து கடைசியாக காலபைரவரை தரிசித்து ஆசி பெற்று விடை பெற வேண்டும்.
பிறகு அங்கு இருந்து கயாவிற்கு சென்று மறைந்த மூதாதையர்களுக்கு சிரார்த்தங்களை செய்து மீண்டும் திரிவேணி சங்கமம் வந்து கங்கையில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு பின்னர் ராமேஸ்வரம் சென்று ராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.
பொதுவாக காசி செல்ல வேண்டும் நினைப்பவர்கள் இவ்வாறு செய்தால் தான் அவர்களின் புனித யாத்திரை நிறைவடையும்.ஆனால் இன்று அவசர காலத்தில் பலராலும் இதை செய்யமுடியவில்லை.
இருந்தாலும் ஒருவருக்கு பாவம் நீங்கி மோட்சம் கிடைக்க இந்த முறையில் காசி யாத்திரை செய்து வர அவர்களுக்கு சிவபெருமான் அருளால் கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |