2025 கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 முக்கியமான பாடங்கள்
ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தி நம்மை வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க தூண்டுகிறது. ஒரு நாள் நள்ளிரவில் மதுராவில் அவதரித்த கிருஷ்ண பகவான் மனிதர்களுடைய வாழ்க்கை அவர்கள் எண்ணி வாழும் நடைமுறை சரியானது அல்ல, எங்கு எல்லாம் அதர்மம் தலை தூக்கி தர்மம் தோற்கின்றதோ அங்கு தர்மத்தை நிலைநாட்ட நான் எப்பொழுதும் அவதரிப்பேன் என்று உணர்த்தி நம்மை காக்க அவதரித்தவர்.
மேலும், கிருஷ்ணர் அருளிச் செய்த பகவத் கீதை துறவிகளுக்கும் ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமே அல்ல அவை நமக்காக சாதாரண மனித பிறப்பிற்காக சொல்லப்பட்டது.
குருசேத்திர போரில் குழப்பத்திலிருந்து தன் நண்பனான அர்ஜுனனுக்காக வாழ்க்கையின் உண்மை நிலையை கற்பித்து வழி நடத்தி சொல்லப்பட்ட அற்புத படைப்பு. அப்படியாக பகவத்கீதையில் இருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1. கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு எந்த காலகட்டத்திலும் கடமையை செய்வதிலிருந்து தவறக்கூடாது என்கிறார். அவை கடினமாக இருந்தாலும் சரி சுலபமாக இருந்தாலும் சரி நமக்கான கடமையை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் கிருஷ்ண பகவான்.
இதை நம் நடைமுறை வாழ்க்கைக்கு எடுத்துக் கொண்டால் கனவுகள் நோக்கி ஓடுவோம், அதற்கான முயற்சியை செய்வோம். நிச்சயம் விடாப்பிடியான முயற்சியும், கடமை தவறாமல் இருக்கும் நிலையும் ஒரு நாள் வெற்றியை தேடி கொடுக்கும்.
2. கிருஷ்ணர் சொல்லுகிறார் ஒருவர் செய்யக்கூடிய கடமையானது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது நான் இதை செய்வதனால் நாளை எனக்கு என்ன கிடைக்கப் போகின்றது என்ற பதிலை எதிர்பார்த்துக் கொண்டு செய்தால் அது நிச்சயம் கடமையாகாது.
கடமை என்பது நம்முடைய வேலை. அதை செய்தாக வேண்டியது நம்முடைய கட்டாயம். ஆதலால் அதற்கு நிச்சயம் நம் பலனை எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும். செய்யும் கடமை சரியாக இருக்க அதற்கான பலனை கட்டாயம் இந்த பிரபஞ்சம் கொடுக்கும்.
3. வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அதாவது ஒரு நாள் வெற்றி நம் வசமாகலாம். மறுநாள் அதே வெற்றி மற்றொருவர் கைகளுக்கு போகலாம். நிரந்தரம் இல்லாதது இந்த வாழ்க்கை என்பதால், வெற்றியோ தோல்வியோ எதற்கும் மனம் கலங்காமல் சமநிலையோடு வாழ வேண்டும் என்கிறார்.
4. கிருஷ்ண பகவான் எப்பொழுதும் அவருடைய குரலை உயர்த்தி நான் வலிமையானவன் என்று காட்டிக் கொள்ளவில்லை. மாறாக அவருடைய செயல்பாடுகள் சொல்லியது. அவர் யார் எவ்வளவு வலிமையானவர் என்று.
அதேபோல் தான் நாமும் அன்றாட வாழ்க்கையில் தேவையில்லாத விஷயங்களுக்கு கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் மன அமைதியுடனும் உறுதியுடன் போராட வேண்டும்.
5. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான துன்பங்கள் இருக்கிறது. கிருஷ்ண பகவானை எடுத்துக் கொண்டால் அவருடைய பிறப்பிலும் துன்பம் இருந்தது . அதனால் துன்பத்தைக் கண்டு வருந்தாமல் நம் முன்னிருக்கும் நீளமான பாதையை எவ்வளவு அழகான பாதையாக மாற்றி வெற்றி காண முடியும் என்று நாம் யோசித்து செயல்பட வேண்டும் என்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







