நவகருட சேவை நடக்கும் தென் திருப்பேரை பெருமாள் கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் தென் திருப்பேரை என்ற ஊரில் உள்ள மகர நெடுங்குழைக்காதர் கோவில் நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றாகும். பேரை என்றால் காதணி என்று பொருள். இதற்கு ஏற்ப ஒரு புராண கதையும் வழங்குகின்றது.
இக்கோவில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் ஆழ்வார் திருநகரியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நம்மாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யசேத்திரமாகும்.
இக் கோயிலில் நடைபெறும் நவ கருட சேவை வேறெந்தக் கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். நவ திருப்பதியில் இக்கோவில் சுக்கிர ஸ்தலம் ஆகும்.
கோயில் அமைப்பு
தென்திருப்பேரை கோவில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மத்தியில் கொடி மரமும் மண்டபமும் வெளி மண்டபமும் உள்ளது. கோவிலின் கோபுரம் தட்டையான அமைப்பில் உள்ளது.
இக் கோவிலுக்கு பிரதான கோபுரம் கிடையாது. கருவறையின் முன்பு மிகப்பெரிய மகா மண்டபம் உள்ளது. கோவிலின் தூண்களில் யாளி, யானை, வீரர்கள் போன்ற அழகிய கல் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கருவறைத் தெய்வங்கள்
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பெருமாள் சன்னதிக்கு வலப்பக்கத்தில் திருப்பேரை நாச்சியாரின் சன்னதியும் இடப்பக்கத்தில் குழைக்காத வல்லி தாயார் சன்னிதியுமாக இரண்டு தாயார் இங்கு எழுந்தருளி உள்ளனர். பெருமாள் 'நிகரில் முகில் வண்ணன்' என்ற பெயரில் நம்மாழ்வாரால் அழைக்கப்படுகின்றார். அமர்ந்த நிலையில் பரமபதக் கோலத்தில் கிழக்குத் திசை நோக்கிக் காட்சி அளிக்கின்றார். கருவறைக்கு மேல் இருக்கும் விமானம் பத்ர விமானம் எனப்படுகின்றது.இக் கோவிலில் சுக்கிரன் ருத்ரன் மற்றும் பிரம்மா ஆகியோரும் தனிச் சன்னதி கொண்டு உள்ளனர். இக்கோவிலுக்கு அருகில் நவகைலாசங்களில் ஒன்றான ஸ்ரீ கைலாசநாதர் கோவிலும் இடம்பெற்றுள்ளது.
தீர்த்தங்கள்
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் சுக்கிரன் ஸ்தலம் என்பதால் இங்கு சுக்கிர புஷ்கரணி என்ற ஒரு தீர்த்தமும் சங்கு தீர்த்தமும் இடம்பெற்றுள்ளது. கூடு புனல் தீர்த்தம் என்ற பெயரிலும் ஒரு தீர்த்தம் உள்ளது.
நவ கருட சேவை
வைகாசி மாதம் நடைபெறும் கருட சேவை கோவிலின் சிறப்பான உற்சவம் ஆகும். அன்று நவதிருப்பதி கோவில்களிலும் இருந்து உற்சவமூர்த்திகள் கருட வாகனத்தில் இங்கு வந்து சேர்கின்றனர். நம்மாழ்வாரும் அன்னவாகனத்தில் எழுந்தருளுகின்றார். அவரது பாசுரம் வாசிக்கப்படுகின்றது. பின்பு நம்மாழ்வாரின் திரு உருவம் கோவிலை சுற்றி நெல் வயல்கள் வழியாக எடுத்துச் செல்லப்படும்.
நவ திருப்பதிகள்
பெருமாள் எழுந்தருளி இருக்கும் ஒன்பது சிறப்பு தலங்கள் நவகிரகங்களின் தலங்கள் ஆகும். ஸ்ரீவைகுண்டம் (சூரியன்), ஆழ்வார் திருநகரி (குரு), திருக்கோளூர் (செவ்வாய்), தென்திருப்பேரை (சுக்கிரன்), பெருங்குளம் (சனி), தொலைவில்லிமங்கலம் (கேது) திருப்புளியங்குடி (புதன்) திருவரகுணமங்கை (சந்திரன்)
கதை 1
பெருமாள் லட்சுமியை நீங்கி பூமாதேவியுடன் அவள் அழகில் மயங்கி வாழ்ந்து வந்தார். அப்போது லட்சுமி தேவி துர்வாச முனிவரைச் சந்தித்துத் தன் குறைகளை அவரிடம் முறையிட்டு 'எம்பெருமான் செய்வது நியாயமா' என்று கேட்டு 'அந்த பூமாதேவியின் அழகு எனக்குக் கிடைத்தால் பெருமாள் என்னை விட்டு நீங்காமல் இருப்பார் அல்லவா?' என்றாள்.
துர்வாச முனிவர் 'நீ பூலோகத்திற்குப் போய் தாமிரபரணி நதிக் கரையில் இருந்து தவம் செய்து வருவாயாக. அப்போது பெருமாள் ஒரு நாள் உன்னிடம் வந்து சேர்வார். உன்னுடைய பிரார்த்தனை பலிக்கும்' என்றார்.
இலட்சுமி தேவி திருப்பேரை என்ற ஊரில் வந்து தாமிரபரணி நதிக்கரையில் பெருமாளை நோக்கி தவம் செய்தாள். அப்போது ஆற்றின் வழியே மீன் வடிவத்தில் ஒரு ஜோடி காதணிகள் மிதந்து வருவதை கண்டாள். அவ்வேளையில் விஷ்ணுவும் அவளுக்கு காட்சி அளித்தார். அவள் தான் எடுத்த மகரக் குழைகளை விஷ்ணுவின் காதில் பூட்டி விட்டாள். அன்று முதல் இங்குக் கோயில் கொண்ட அருளும் பெருமாளுக்கு மகரக்குழைகாதர் என்று பெயர் வழங்கி வருகிறது.
கதை 2
பெருமாள் லட்சுமி தேவியை விட்டு நீங்கி பூமாதேவியுடன் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு நாள் துர்வாச முனிவர் பெருமாளை சேவிக்கச் சென்றார். பூமாதேவி பெருமாளின் மடியில் அமர்ந்தபடி முனிவரைக் கண்டும் காணாமலும் பாராமுகமாக இருந்தாள். இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் 'உன் அழகு திருவருவம் இனி இலட்சுமிக்கு மாறிவிடும். இனி பெருமாள் இலட்சுமியுடன் கூடிய இருப்பார். உன்னை விட்டு விலகுவார் என்று சாபம் கொடுத்தார்.
துர்வாச முனிவர் சாபம் விட்டதும் பூமாதேவி அதிர்ந்து போய் முனிவரிடம் அழுதாள். 'எனக்கு என்னுடைய பழைய அழகுத் திரு உருவம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் குருவே' என்று வேண்டினாள். அவர் தாமிரபரணி நதிக்கரையில் போய் பெருமாளை நோக்கித் தவம் இரு.. ஒருநாள் பெருமாள் உனக்கு காட்சி கொடுப்பார். அப்போது உன் பழைய அழகிய திருவுருவத்தைப் பெறுவாய்' என்று பூமாதேவிக்கு பிராயச்சித்தத்தை எடுத்துரைத்தார்.
பூமாதேவியும் துர்வாச முனிவரின் அறிவுரைப்படி தாமிரபரணியின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்தாள். பங்குனி மாத பால் நிலா நாளில் விஷ்ணு அவளுக்கு முன்பு தோன்றினார்.
அப்போது அவள் தாமிரபரணி ஆற்றில் மிதந்து வந்த மகர வடிவிலான இரண்டு காதணிகளை எடுத்து விஷ்ணுவுக்குக் காணிக்கையாக கொடுத்தாள். அதனை விஷ்ணு காதில் அணிந்து கொண்டு அவளை ஏற்றுக் கொண்டார்.
கதை 3
ஒருமுறை வருண பகவானுக்கும் குரு பகவானுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது வருண பகவான் குரு பகவானே அவமதித்துவிட்டார் இதனால் குரு பகவான் வருண பகவானின் ஆயுதங்களைப் பறித்து விட்டார். மீண்டும் தன் ஆயுதங்களை பெறுவதற்கும் இழந்து போன தன் சக்தியை திரும்பப் பெறுவதற்கும் வர்ண பகவான் துர்வாசரின் அறிவுரைப்படி தாமிரபரணி நதிக்கரையில் பெருமாளை நோக்கி தவம் இருந்தார்.
பங்குனி மாதப் பௌர்ணமி அன்று பெருமாள் வருண பகவானின் முன் தோன்றி அவர் இழந்த சக்தியையும் இழந்த ஆயுதங்களான பாசத்தையும் நாகத்தையும் மீட்டுக் கொடுத்தார். இதனால் வருண பகவான் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்தரத்தன்று இவ்வூர் கோவிலுக்கு வந்து இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.
கதை 4
பஞ்சகாலத்தில் வருணனை வழிபட்டு இத்தலத்தில் மழைக்கான யாகம் நடத்தினால் மழை பெய்கிறது. விதர்ப்ப நாட்டு மன்னன் தன் நாட்டில் 12 ஆண்டுகள் மழை பெய்யாமல் கடுமையான பஞ்சம் நிலவிய போது தன் குருநாதரை அழைத்து ஆலோசனை கேட்டான். அவர் திருப்பேரை திருத்தலத்திற்குச் சென்று மகர நெடுங்குழைக்காதரை வழிபட்டதால் அவன் நாட்டில் நல்ல மழை பொழியும் என்றார். அவனும் அவ்வாறே செய்து விதர்ப்பநாட்டில் மழை பொழிந்ததாக ஒரு கதை உள்ளது.
108இல் ஒருவர் பெருமாள்
சுந்தர பாண்டியனுக்கு குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் இக்கோயில் இறைவனை வேண்டினான். இங்குத் தினசரி பூஜை செய்வதற்காக சோழ நாட்டில் இருந்து சாமவேதம் போதும் 108 அந்தணரை பாண்டியன் இங்கு குடி அமர்த்தினான். 108 பேரை இங்கு அழைத்து வந்த போது ஒருவர் காணாமல் போய்விட்டார். அந்த ஒருவரை பெருமாள் என்றும் அவரோடு சேர்ந்து தாங்கள் 108 பேர் இங்குக் குடி இருப்பதாகவும் 107 அந்தணர் குடும்பங்களும் நம்புகின்றனர். அவர்கள் பெருமாளைத் தங்களுள் ஒருவராக கருதி கைங்கரியங்கள் செய்து வருகின்றனர்.
விலகி நின்ற கருடன்
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் 'வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக்குழாம் விளையாட்டு ஒலியும்' கேட்பதால் அவர்களை தான் காண வேண்டும் என்ற ஆர்வத்தினால் கருவறை நாதர் 'சற்றே விலகி இரும்' என்று கருடனை பெருமாள் அறிவுறுத்தினார். எனவே கருடன் சன்னதி பெருமாளுக்கு நேர் எதிரில் இல்லாமல் சற்று இடப்பக்கமாக விலகி இருப்பதை இக்கோவிலில் காணலாம்.
நாத்திகனும் ஆத்திகன் ஆவான்
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி மாதம் நடைபெறும் ஐந்தாம் நாள் திருவிழாவின்போது இரவில் ஒன்பது கருட சேவை நடைபெறும். அவ்வமயம் பெருமாளை சேவிக்கின்ற நாத்திகனும் ஆத்திகன் ஆவான் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். நவ பெருமாளும் அலங்காரமாக காட்சி அளிப்பர். 'கூடு நல் துறையின் குழைக்காதனை திருமாலையும் காணக் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்பது இவ்வூரில் வழங்கும் ஒரு சொலவடை ஆகும்.
சிறப்பு வழிபாடுகள் /விழாக்கள்
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் ஒன்பது கருட சேவை நடைபெறும் திவ்ய ஸ்தலமாகும். இக்கோயில் தென் கலை மரபை பின்பற்றுகின்ற கோவிலாகும். தினமும் 6 சடங்குகளும் ஆண்டுக்கு மூன்று விழாக்களும் இக்கோவிலில் நடைபெறும். அவை வைகுண்ட ஏகாதசி மற்றும் நவதிருப்பதியின் கருட சேவை (நம்மாழ்வாரின் பிறந்தநாள்) மற்றும் கோகுலாஷ்டமி ஆகியன.
பிரம்மோற்சவம்
ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவம் பெருமாளின் அவதாரச் செயல்களை நினைவு கூரும் பத்து நாள் கொண்டாட்டம் ஆகும். அப்போது வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பவனி வருகின்றார். இசை நடனம் போன்ற பாரம்பரிய சடங்குகளும் நிகழ்ச்சிகளும் அப் பத்து நாட்களில் நடைபெறுகின்றன.
ஜென்மாஷ்டமி, ராமநவமி இரண்டும் இக்கோவிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அந்த நாட்களிலும் பாரம்பரியக் கலைகளான இசை, நடனம் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் போன்றவற்றைப் பாதுகாப்பதில் இக்கோவில் முக்கியப் பங்கு வைக்கின்றது
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |