கேட்ட வரம் வழங்கும் உவரி சுயம்புலிங்க பெரியசாமி கோயில்
திருச்செந்தூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கரை சுத்து என்ற கிராமத்தின் கடற்கரையில் உவரி சுயம்புலிங்க சாமி கோவில் உள்ளது. இக் கோவிலின் கருவறை நாதர் சிவனனைந்த பெருமாள் என்ற பெயரில் கையில் தண்டத்துடன் வீற்றிருக்கும் பெரியசாமி ஆவார். சிவனும் விஷ்ணுவும் அணைந்ததால் குழந்தை பேறு வேண்டுவோர் இக்கோவிலின் மரத்தில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.
சிவபெருமானுக்கு வலப்பக்கம் கன்னி மூலையில் கன்னி விநாயகரும் இடப்பக்கம் பிரம்ம சக்தி அம்மனும் தனிச் சன்னதி கொண்டுள்ளனர். பேச்சியம்மன், மாடசாமி, இசக்கி அம்மன் ஆகியோரும் இக்கோவிலில் காணப்படுகின்றனர். வெளியே முன்னோடி சாமி என்று பைரவ சாமி சன்னதி உள்ளது.
கதை
தினந்தோறும் மண்பானைகளில் பால் மோர் தயிர் எடுத்துக்கொண்டு போய் அண்டை ஊர்களில் விற்றுவரும் ஒரு யாதவ குல மூதாட்டி உவரி வழியே போகும்போது அடுப்பங்குடி கொடியின் வேர் தடுக்கிக் கீழே விழுந்ததால் தலையில் இருந்த பானை சட்டி எல்லாம் உடைந்து பால் நெய் மோர் தயிர் எல்லாம் சிந்திப்போயிற்று. தொடர்ந்து அடுத்தடுதது இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததால் அந்த யாதவ குல மூதாட்டி மிகவும் வருந்தித் தன் கணவரிடம் சொல்லி அழுதாள்.
அவரது கணவர் பானை சட்டியும் வீணாகி விற்பனைப் பொருளும் வீணாகின்றதே என்ற கோபத்தில் வேகமாக வந்து மனைவியின் காலைத் தடுக்கி விடும் அடுப்பங்கொடியின் வேரை வெட்டி அப்புறப்படுத்த நினைத்தார். வேரின் மீது வெட்டிய போது சிவப்பாக நீர் கசிந்ததைக் கண்டார். 'சந்தனத்தை உரைத்து கசியும் என் ரத்தத்தின் மீது தடவினால் ரத்தக் கசிவு நிற்கும்' என்று அசரீரி ஒலித்தது.
அவ்விடத்தை மேலும் அகழ்ந்து பார்த்தபோது ஒரு சிவலிங்கம் தென்பட்டது. அங்கேயே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஒரு ஓலை குடிசையை அமைத்தனர். உவரி சுயம்புலிங்க பெரியசாமி கோயில் தோன்றிய காலகட்டத்தில் சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து யாதவ குல மக்கள் நடந்தே இக்கோவிலுக்கு வந்து இறைவனை வணங்கிச் சென்றனர்.
தற்போது மற்ற சமுதாயத்தினரும் சுயம்புலிங்கத்தை தமது குலதெய்வமாகக் கொண்டு எவ்வூரில் இருந்தாலும் இவ்வூருக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர். உவரி சுயம்புலிங்கநாதரை இப்பகுதி மக்கள் பெரியசாமி என்று அழைக்கின்றனர்.
சிறப்பு வழிபாடுகள்
உவரி சுயம்புலிங்க பெரியசாமி கோயிலுக்கு மாதாந்திர வெள்ளிக் கிழமைகளில் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் சோமவாரத்தன்று (திங்கட்கிழமைகளில்) சிவ பக்தர்கள் அநேகம் பேர் இக்கோவிலுக்கு வந்து சிவபூஜை செய்கின்றனர்.
குறிப்பாக கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் இன்னும் அநேகம் பேர் வருகின்றனர். அன்று சங்காபிஷேகம் விசேஷம். மாதந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
பஞ்சமி நாட்களிலும் புதன் கிழமைகளிலும் விசாகம் மற்றும் புனர்பூச நட்சத்திரங்கள் அன்றும் பிரமசக்தி அம்மனின் தீபத்துக்கு நல்லெண்ணெய் ஊற்றி தாமரை மலர் சாத்தி வழிபட்டால் வேண்டியது வேண்டியபடி கிடைக்கும்.
வழிபாட்டின் பலன்
உவரி சுயம்புலிங்க பெரியசாமி கோவில் தோன்றிய காலகட்டத்தில் சுயம்பு லிங்கத்தை வணங்கினால் செவிடு குருடு முடம் போன்ற உடற்குறைகள் விலகின. குஷ்டம் போன்ற பெரு நோய்களும் குணமடைந்தன. எனவே இன்றும் நோய் நீங்க இங்குவந்து தங்கி செல்கின்றனர்.
மாத வழிபாடுகள்
உவரி சுயம்புலிங்க பெரியசாமி கோவிலில் பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. தமிழ் மாதப் பிறப்பன்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.
மார்கழி திருவாதிரை, கார்த்திகைத் திருநாள், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை என்று மாதந்தோறும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும் நடைபெறுகின்றன. வைகாசி விசாகம் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அன்று மகர மீனுக்கு சுவாமி காட்சி தரும் நிகழ்வு நடைபெறுகின்றது.
சூரிய ஒளி வழிபாடு
மார்கழி முழுக்க சாமி மீது சூரிய ஒளி பட்டு ஜொலிக்கின்றது. சூரியன் தன் கதிர்களால் சாமியையும் அம்மனையும் வழிட்டுவதாக கருதுகின்றனர்.
தெப்பமும் தேரும்
தை மாதத்தில் தைப்பூசத்தன்று பகலில் தேரோட்டமும் மறுநாள் பஞ்சமூர்த்தி வீதி உலாவும் இரவில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.
பிடி பணம்
உவரி சுயம்புலிங்க சாமி கோவிலில் பிடி பணம் என்று ஒரு நேர்த்திக்கடன் உண்டு. கோவில் தோன்றிய காலத்தில் யாதவர்கள் கோவிலுக்கு நடந்து வந்து சாமியை வணங்கினர். அப்போது அவர்கள் வழியில் உள்ள தென்னந்தோப்புகளில் தங்கி ஓய்வெடுத்து வருவார்கள்.
அவ்வாறு ஒரு தென்னந்தோப்பில் ஒரு குழுவினர் தங்கி இருந்தபோது அந்த தோப்பின் உரிமையாளர் கடும் நோயினால் அவதிப்பட்டு அழுது கொண்டிருந்தார். அவரைப் பார்த்து மனம் வருந்திய பக்தர்கள் 'ஐயா வருத்தப்படாதீர்கள் எங்கள் சுயம்புலிங்கம் உங்களுக்கு நல்ல சுகத்தை கொடுப்பார்' என்றனர். பக்தர்ர்கள் சொன்னது போலவே தென்னந்தோப்பு உரிமையாளரின் நோய் குணமாயிற்று.
அவர் திருவாங்கூர் சக்கரம் என்று அழைக்கப்படும் நாணயங்களை சாமிக்குக் காணிக்கையாக ஒரு பிடி வழங்கினார். ஒரு பிடி பணம் என்றால் ஒரு கை நிறைய ஒரு கை கொள்ளும் அளவு நாணயங்கள் ஆகும். இன்றைக்கும் தங்களுடைய குறைகள் தீர்ந்தால் பிடி பணம் காணிக்கை அளிப்பதாகப் பக்தர்கள் நேர்ந்து கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பிடிபணம் கோவிலுக்கு அளிக்கின்றனர்.
வழியில் இரண்டு கோயில்கள்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு அருகே இன்னும் இரண்டு கோவில்கள் உள்ளன. நடைபயணமாக வரும் பக்தர்கள் வழியெங்கும் முன்பு இலவசமாக வழங்கிய பதநீரை குடித்துக் கொண்டே வருவார்கள். வழியில் பனங்கிழங்கு மாம்பழம் வாழைப்பழங்கள் ஆகியனவும் கிடைக்கும். மாந்தோப்பு வாழை தோப்புகளில் இறங்கி அவற்றைப் பறித்து அலுப்புத் தீர தின்றுகொண்டு வருவார்கள். ஆனால் இப்போது அவை இலவசமாகக் கிடைப்பதில்லை. வழியில் விற்பனைக்கு வைத்திருக்கின்றனர். அவற்றை வாங்கி தின்றபடி வருகின்றனர்.
சிரட்டை பிள்ளையார்
உவரி சுயம்புலிங்க சாமி கோவிலுக்கு பக்த்ர்கள் வருகின்ற வழியில் கூடங்குளத்தில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலுக்கு முதலில் சென்று வழிபட வேண்டும். இக்கோவிலில் சிதறுகாய் உடைத்து காயை மட்டும் தின்றுவிட்டு சிரட்டையை போட்டு விட்டு வர வேண்டும். எனவே இக்கோவில் பிள்ளையார் சிரட்டை பிள்ளையார் என்று அழைக்கப்படுகின்றார்
சுடலை மாடன்
சிரட்டை பிள்ளையாரை வணங்கிய பின்பு அதற்கு அடுத்து சுடலை மாடன் கோவிலுக்கு வர வேண்டும். சுடலை மாடனை வணங்கிய பின்பு தான் உவரி சுயம்புலிங்கரை தரிசிக்க வேண்டும்.
பதிரகாளி அம்மன்
சுடலை மாடனை கோவிலின் அருகே பத்திரகாளி அம்மனுக்கு ஓர் கோவில் உள்ளது. விசாகத்திற்கு முந்தைய தினம் உவரி சுயம்புலிங்க கோவிலுக்கு பக்தர்கள் கிளம்பி வருவர். அவர்கள் முதலில் பத்திரகாளியை வழிபட்டு அங்கேயே இரவில் தங்கிவிடுவர். கால்கோயில் எழுந்து பல்துலக்கி பதநீர் குடித்துவிட்டு கரை சுத்து உவரிக்கு வந்து சேர்வர்.
குளியல் முறை
பக்தர்கள் உவரிக்கு விசாகத்தன்று அதிகாலையில் வந்து கடலில் நீராடி மண் சுமந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர். அதன் பிறகு கோவில் தெப்பக் குளத்திலோ அல்லது கிணற்று நீரிலோ குளித்துவிட்டு மூலஸ்தானத்தை மூன்று முறை வலப்பக்கமாகச் சுற்றி வந்து சுயம்பு நாதரை வழிபடுவார்கள்.
நோய் தீர்க்கும் நேர்த்திக்கடன்
உவரி சுயம்புலிங்க சாமி கோயிலில் 48 நாட்கள் மக்கள் தங்கி இருந்து வழிபடுவதற்கு சமையலறைகளுடன் கூடிய மடங்கள் உள்ளன. இங்கேயே தங்கியிருந்து கடலிலும் குளத்திலும் தினமும் குளித்துவிட்டு ஒரு நாளைக்கு மூன்று வேளை இறைவனை வணங்கி நோய் தீர்ந்து குணமாகிச் செல்கின்றனர்.
பில்லி சூனியம் செய்வினை கோளாறுகள் வழக்கு வியாஜ்யங்கள் சொத்து தகராறு தீர்வதற்கு இவ்வாறு ஒரு மண்டலம் இங்கு தங்கி வணங்கி பலன் அடைகின்றனர். மண் சுமக்கும் நேர்த்திக்கடன் உவரி சுயம்புலிங்கநாதர் கோவிலில் பிடிபணம் போலவே இன்னொரு சிறப்பு நேர்த்திக்கடனும் உள்ளது.
பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு பனை ஓலையால் செய்த பெட்டியில் கடல் மண்ணை அள்ளிக் கொண்டு வந்து கரையில் கொட்டுவார்கள் இவ்வாறு பதினோரு பெட்டி முதல் 41 பெட்டி வரை நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. இந்த நேர்த்திக்கடனை செலுத்திய பின்பு நல்ல தண்ணீர் குளத்தில் குளித்துவிட்டு கோவிலுக்குள் வருவ வந்து சாமி கும்பிடுவர்
கடம்பா? அடும்பா?
கடம்ப வேரில் ரத்தம் வடிந்ததாக கதை சொல்லப்படுகிறது. கடம்ப மரம் என்பது பெரிய ஆரஞ்சு நிறத்தில் கிரிக்கெட் பந்து போல வட்டமாக பூ பூக்கும் பெரிய மரமாகும். அது கொடி போல தரையில் பற்றிப் படரும் கொடியல்ல.
அடும்பு தான்அழகான இளஞ்சிவப்பு நிற பூக்களுடன் கடற்கரையில் படரும் கொடி அடும்பு அல்லது அடப்பங்குடி எனப்படும். இதன் இலைகள் இரண்டாகப் பிளவுபட்டது போல் இருப்பதால் 'கவை' என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது. ஆங்கிலத்தில்Beach morning glory or Goat's foot என்கின்றனர். அடும்பங்கொடி (அடுப்பங்கொடி) கடற்கரையிலும் வறண்ட மணல்மேட்டிலும் படர்ந்திருக்கும் நெய்தல் நிலத் தாவரமாகும்.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் (5.84.6) '
அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும் / துடும்பல் செய் சடை சோதியான்' என்று சிவபெருமானைக் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் அடுப்பங்கொடியை தலைமாலையாக அணிந்திருந்தார் அடுப்பங்கொடியின் இலைகள் ஆட்டுக்காலின் குளம்படி போல இரு கிளையாக கவைத்து காணப்படுவதால் goat's foot என்பர். மலையாளத்தில் இதனை அடும்பு வள்ளி என்கின்றனர்.
அடுப்பங்கொடி ஜீரணக் கோளாறைத் தடுக்கும், சிறுநீரை பெருக்கும் மருத்துவத் தன்மை உடைய கொடியாகும். உவரி சுயம்புலிங்கர் கதையில் வரும் கொடி அடுப்பம் கொடியே தவிர கடம்பக் கொடி அல்ல என்பது தெளிவாகின்றது. மற்ற புராணக் கதைகள் தாக்குறவால் கடம்பம் என்ற பெயர் வழங்கி வருகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |