மாரியம்மன் வரலாறு வழிபாடும்

By பிரபா எஸ். ராஜேஷ் Aug 29, 2024 12:27 PM GMT
Report

கோடை காலத்தில் பங்குனி சித்திரை ஆடி தை போன்ற மாதங்களில் மாரியம்மனுக்கு அம்மன் வழிபாடு தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது.

வேளாண் அறிவியல் செயல்பாடு

மாரியம்மன் மழைக்கான தெய்வம் என்பதால் நெல் வேளாண்மை செய்து வரும் வேளாண் குடிகளின் வழிபாடாக மாரியம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. நெல் வேளாண்மைக்குத் தண்ணீர் நிறைய தேவைப்படும். நெல் வயலில் நீர் நிற்க வேண்டும் என்பதால் கண்மாய், கிணறு, குளத்துப் பாசனம் போதாது.

ஆற்றில் நீர் வெள்ளமாக வந்தால் மட்டுமே வாய்க்கால் வழியாக நெல் வயல்களுக்கு நீர்ப் பாய்ச்ச முடியும். இதனால் இந்த ஆண்டு மழை வருமா என்பதை அறிந்து கொண்டு தான் அவர்கள் விதை விதைக்கவும் முடியும். இவற்றிற்கான அறிவியல் தேடலாக செய்யப்படும் விஞ்ஞான செயற்பாடுகளளான முளைப்பாரி எடுத்தல் என்பது மாரியம்மன் வழிபாட்டுடன் இணைந்துள்ளது.

மாரியம்மன் வரலாறு வழிபாடும் | Mari Amman

வெப்பு நோய்க்கு மருந்து

கோடை காலத்தில் சின்னம்மை, கண் வலி, பொண்ணுக்கு வீங்கி, அக்கி போன்றவை மக்களைத் தாக்கும் வெப்பு நோய்கள் ஆகும். இந் நோய்களிலிருந்து மக்கள் குணம் அம்மன் காப்பு மருந்தாக இருந்து உதவியது.

வெப்பு நோய் வந்து விட்டால் உடனே வேப்பிலையையும் விரலி மஞ்சளையும் அரைத்து அம்மனை வணங்கி அம்மன் காப்பு என்று நோயாளிக்கு கொடுப்பர். மாரியம்மன் கோவிலுக்கு போய் தீர்த்தம் வாங்கிக் கொண்டு வந்தும் கொடுப்பதுண்டு.

மாரியம்மன் கோவில் தீர்த்தத்தில் அம்மன் அருளுடன் வேப்பிலையும் மஞ்சள் தூளும் கலந்திருக்கும். இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தி உடையவை. இதனால் உடலில் இருக்கும் நோய்க் கிருமிகள் அழிந்து போகும்

மாரியம்மன் வரலாறு வழிபாடும் | Mari Amman

வீரம் விளைந்த சிவகங்கை மாவட்டத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள்

வீரம் விளைந்த சிவகங்கை மாவட்டத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள்


விஞ்ஞானமும் மெய்ஞானமும்

மாரியம்மன் வழிபாட்டில் ஆன்மீகமும் மருத்துவமும் வேளாண் விஞ்ஞானமும் இணைந்துள்ளது. மாரியம்மனின் பிரசாதம் என்று நோயாளிக்கு கொடுக்கும் போது இறை நம்பிக்கையின் அடிப்படையில் நோயாளிக்கு சுகமாகின்றது.

இறை நம்பிக்கை என்பது மனிதனுக்குள் ஆக்கபூர்வமான அதிர்வலைகளை (positive vibrations) ஏற்படுத்தும். இது விஞ்ஞான கண்டுபிடிப்பாக இன்றைக்குத் தோன்றினாலும் பழங்காலத்தில் இருந்தே நம்முள் இந்த நம்பிக்கையும் நம்பிக்கை சார்ந்த நோய் தீர்க்கும் முறைகளும் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

இதில் அதிசயம், அற்புதம் (மிராகுலஸ் ஹீலிங்) என்று எதுவும் இல்லை. எல்லாமே மருத்துவ அறிவியல் (சயின்டிஃபிக் ஹீலிங்) தான். அம்மன் காப்பு என்னும் அரிய மருந்தை நம்பிக்கையோடு உயக்கொள்ளும்போது அது சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படுகிறது.  

மாரியம்மன் வரலாறு வழிபாடும் | Mari Amman

 முளைப்பாரி எடுத்தல்

மாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுப்பது முக்கியமான் வழிபாடாகும். முளைப்பாரி எடுக்கும் பெண்கள் தங்கள் வீட்டில் மண் ஓட்டில்/ மண் தொட்டியில் நவதானிய விதைகளை விதைத்து வைப்பர். இச்சடங்கு முத்து போடுதல் எனப்படும். இந் நிகழ்வு முதல் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் சாட்டப்படும் நாளில் நடக்கும். அன்று மாரியம்மன் திருவிழாவிற்கான அறிவிப்புச் செய்யப்படும்.

.அதன்பிறகு யாரும் வெளியூட்களில் போய் தங்க கூடாது. அசைவம் கூடாது. போக பத்தியமும் உண்டு. இரண்டாவது செவ்வாயில் விளைந்து பசும்பொன் நிறத்தில் இருக்கும் நவதானியச் செடிகள் உள்ள மண் சட்டியை தலை மீது வைத்து கோயிலுக்கு எடுத்து சென்று தானானே கொட்டுவர்.

இதற்குப் பெயர் கும்மி கிடையாது. சக்தி கிரகம் கோயிலுக்கு வந்ததும் முளைப்பாரி ஊர்வலம் கிளம்பும். தலையில் முளைப்பாரியுடன் அருகில் உள்ள நீர் நிலைகளுக்குப் போய் மண்ணிலிருந்து பிடுங்கி எறிந்து கரைத்து விடுவார்கள். 

மாரியம்மன் வரலாறு வழிபாடும் | Mari Amman

முளைப்பாரி வளர்த்தல்

முத்துப் (விதை) போட்ட 15 நாட்களும் ஓட்டை (மண் தொட்டியை) வெயில் படாமல் இருட்டில் வைத்திருப்பர். சில ஊர்களில் மாரியம்மன் கோவில் அருகிலேயே முளைத் திண்ணை ஓன்று ஒரு இடம் அமைக்கப்பட்டு சுற்றிலும் தென்னங்கீற்றுகளால் அடைத்து வைத்து உள்ளே பெண்களின் பெயர் எழுதிய தனித்தனி மண் ஓட்டில் மண் நிரப்பப்பட்டு விதைகள் போடப்பட்டு இருக்கும். மாரியம்மன் கோவில் பூசாரி வாயில் துணியை கட்டிக் கொண்டு எச்சில் தெறிக்காமல் தூய்மையாக உள்ளே போய் எல்லா முளைச் சட்டிகளுக்கும் தண்ணீர் தெளித்து வருவார். 

மாரியம்மன் வரலாறு வழிபாடும் | Mari Amman

முதல் நிலை ஆய்வு

இருட்டில் வைக்கப்பட்டு வளர்த்த நவதானிய விதைகள் அழகான பசும்பொன் நிறத்தில் வளர்ந்து இருந்தால் அந்த ஆண்டு விளைச்சல் / சாகுபடி நன்றாக இருக்கும். இது அறிவியல் துறையில் செய்யப்படும் 'பைலட் ஸ்டடி' (pilot study) அல்லது முதல் நிலை ஆய்வு எனலாம்.

வெயில் படாமல் வளர்க்கப்படும் செடிகளின் வளர்ச்சி அதன் நிறம் ஆகியவற்றைக் கொண்டு அந்த ஆண்டுக்கான காற்றில் உள்ள ஈரப்பதத்தை வேளாண் குடியினர் அறிந்துகொள்வர். முளைப்பாரி எனப்படும் இந்த நவதானியச் செடிகள் வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருந்தால் அந்த ஆண்டில் மழை இருக்காது.

வெயில் அதிகம். விளைச்சல் எதிர்பார்த்த அளவு கிடைக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வார்கள். ஆக மாரியம்மன் கோயில்களில் எடுக்கப்படும் முளைப்பாரிச் சடங்கும் திருவிழாவும் ஓர் அறிவியல் முன் ஆய்வுச் சடங்காகும் என்பதில் பெருமிதம் கொள்ளலாம். 

மாரியம்மன் வரலாறு வழிபாடும் | Mari Amman

மழைச் சடங்குகள்

மாரியம்மன் என்ற பெயர் மழைக்குரிய அம்மன் என்ற பொருளில் வழங்குகின்றது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மழை வேண்டும் என்று நினைத்தவர்கள் மழை வந்தால் என்னென்ன நிகழுமோ அவற்றையெல்லாம் தாமே செய்து காட்டினார்கள்.

இதனை அவர்கள் ஒரு வழிபாட்டுச் சடங்கு முறையாகக் கொண்டிருந்தனர். மலை உச்சியில் இருந்து தண்ணீரை கொட்டுவது, தண்ணீருக்குள் தவளை மீன்களை எல்லாம் பிடித்து போட்டு அந்த தண்ணீர் இருக்கும் சட்டியை எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று அரிசி வாங்கி மழைக்கஞ்சி காய்ச்சி எல்லாருக்கும் ஊற்றுவது, தவளை மீன் கொக்குகளைப் பிடித்து வைத்து பின்பு அவற்றைத் தண்ணீருக்குள் விடுவது என தண்ணீர் சார்ந்த சடங்குகளை செயதனர். 

பெருவெள்ளம் எடுத்து மழை பெய்து பெருவெள்ளம் வந்தால் என்னென்ன நடக்குமோ அவற்றையெல்லாம் மக்கள் மழைச் சடங்கில் செய்து காட்டினர்.

மாரியம்மன் வரலாறு வழிபாடும் | Mari Amman

இத்தகைய சடங்குகள் தமிழகத்தில் அல்லது இந்தியாவில் மட்டுமல்லாது ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, என அனைத்துக் கண்டங்களிலும் நாடுகளிலும் ஆதிகால மனிதர்களிடம் இருந்தது. (இன்று வேறு பெயர்களில் தொடர்கிறது).

இவற்றைத் தொகுத்து தி கோல்டன் போ '(The Golden Bough) என்ற நூலாக சர் ஜேம்ஸ் ஃபிரேசர் 12 பாகங்களைக் கொண்ட நூலாக தொகுத்தார்.

மந்திரத்தால் மாங்காய் பழுப்பது போல இந்தச் சடங்குகளை செய்தால் அந்த அவர்கள் எதிர்பார்க்கும் செயல் நடக்கும் என்று மக்கள் அன்று நம்பினர். எனவே ஃபிரேசர் இவற்றை மந்திரச் சமயச் சடங்குகள் (magico religious ritual) என்றார்.

இன்றைக்கு நமக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டாலும் அச்சடங்குகளைத் தொடர்ந்து வழிபாடு என்ற பெயரில் செய்து வருகின்றோம். மந்திரச் சடங்கில் ஒரு வகை போன்மைச் சடங்கு (Imitative ritual). அதாவது மழை வருவது போலவும் வெள்ளம் வந்தது போலவும் செய்யப்படும் சடங்கு ஆகும். 

மாரியம்மன் வரலாறு வழிபாடும் | Mari Amman

முருகன் வரலாறும் வழிபாடும் -1

முருகன் வரலாறும் வழிபாடும் -1


 சீதளா தேவி

மாரியம்மனைப் போலவே கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடக்கில் சீதளா தேவியை வணங்குகின்றனர். சீதள என்றால் குளிர்ச்சி. வடக்கே சீதளா தேவிக்கு சித்திரை மாதத்தின் செவ்வாய்க்கிழமை வரும் சப்தமி, அஷ்டமி திதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.

சீதளா தேவியை அங்குப் பார்வதியின் அவதாரமாகக் கருதுவர். கந்த புராணத்தில் சீதளாதேவி பற்றிய கதை உள்ளது. சீதளா தேவியின் உருவம் ஜேஷ்டா தேவியின் உருவமாக அங்கு உள்ளது. சீதள தேவி கழுதை வாகனமும், கையில் துடைப்பமும் கொண்டிருப்பாள். ஆதிவாசி பௌத்தர்கள் இன்றைக்கும் சீதளா தேவியை வணஙகுவர்.

17ஆம் நூற்றாண்டில் சீதளா தேவி மீது மங்கள கப்யாஸ் (மங்களகரமான கவிதை) இயற்றப்பட்டு வங்காளத்தில் பாடப்பட்டு வருகின்றது. வடக்கே சீதள தேவி யாதவர்களின் குலதெய்வமாகவும் இருக்கிறாள். அங்கும் இவளுக்கு வேப்ப மரமே அடையாளமாக இருக்கின்றது.

சீதளா சப்தமி அல்லது அஷ்டமி நாட்களில் வடவர்களும் சமயபுரம் கோவிலில் பின்பற்றப்படுவதைப் போலவே அடுப்புப் பற்ற வைப்பதில்லை. முதல் நாள் சமைத்த பழைய சோறை உண்கின்றனர். பட்டினி கிடந்து தேவியை வணங்குகின்றனர்.

மாரியம்மன் வரலாறு வழிபாடும் | Mari Amman

மாரியம்மன் கோவிலின தோற்றம்

மாரியம்மன் கோயில்களை வேப்பமரம் இருக்கும் இடங்களிலும் தெரு ஓரத்திலும் ஊர் மந்தையிலும் அதிகளவில் காண்கிறோம். கிராமங்களில் மந்தையம்மன் கோயில்கள் இன்று மாரியம்மன் கோயில்களாக மாறிவிட்டன. இவை அப்பகுதி மக்கள் ஆங்காங்கே கட்டிக் கொண்ட கோவில்கள் ஆகும். ஆனால் மிக பெரிய சிலைகள் கொண்ட மாரியம்.மன் கோயில்கள் சில தமிழகத்தில் உண்டு. அவற்றின் தோற்றம் பற்றி அறிந்துகொள்வோம்.

திண்டுக்கல் ஊரில் நாம் பார்க்க தவறிய முக்கியமான ஆலயங்கள்

திண்டுக்கல் ஊரில் நாம் பார்க்க தவறிய முக்கியமான ஆலயங்கள்


மடமும் மருத்துவமும்

பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் அவர்களின் மடங்கள் ஆலயங்களாகவும் மருத்துவ மனைகளாகவும் செயல்பட்டன. இம் மடாலயங்களில் மருத்துவ சிகிச்சை மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அளிக்கப்பட்டது.

அங்கு நோய்க்கு சுகமளிக்கும் பெரிய பெண் தெய்வ சிலைகளை வைத்தனர். அவை மக்களால் நோய் தீர்க்கின்ற மழை தருகின்ற மாரியம்மன் கோயில்களாகப் பெயர் மாற்றம் பெற்றன. திருச்சி தஞ்சாவூர் பகுதிகளில் இத்தகைய கோயில்களைப் பரவலாக காணலாம்.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் போன்றவற்றில் பெரிய சிலைகள் உண்டு. மற்ற ஊர்களில் உள்ள மாரியம்மன் கோயில்களும் தனிப் பெருந் தெய்வக் கோயில்களாக உள்ளன. இவற்றுக்கு சிவனை இணைத் தெய்வமாகக் கொள்வதில்லை.  

மாரியம்மன் வரலாறு வழிபாடும் | Mari Amman

மாரி வேறு, காளி வேறு

மாரியம்மனுக்கு சிங்கப்பல் கிடையாது. நாக்கு வெளியே தொங்காது. அவள் சிவனோடு போட்டி போட்டு ரத்த பீஜனின் ரத்ததைக் குடித்த தெய்வம் கிடையாது. இவள் கோபம் வந்தால் முத்து போடுவாள். (அம்மை நோய் தருவாள்). மனம் குளிர்ந்தால் முத்துகளை நீக்குவாள். மாரியம்மனுக்கு நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் உண்டு. பாரதியாரும் எங்க முத்து மாரி என்ற துதிப்பாடல் இயற்றியுள்ளார்.   

வைதீக நெறியில் மாரி

வைதீக சமயங்கள் எழுச்சி பெற்ற நிலையில் மாரியம்மனை சைவ வைணவ மரபில் சிவன் மற்றும் பெருமாள் ஆகிய பெரும் தெய்வங்களோடு உறவு முறை சொல்லி ஏற்றுக்கொண்டனர்.

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் பெருமாளின் தங்கை என்பதும் அவர் அவளுக்கு பங்குனியில் சீர் கொண்டு வந்து கொடுப்பதுமாக வழிபாடுகளில் புதுமைகள் புகுந்தன. மற்ற ஊர்களில் உள்ள மாரியம்மனை சிவனுடைய மனைவி பார்வதியோடு இணைத்து சக்தி வசிவாக காணும் புதிய மரபு வளர்ந்து விட்டது. ரேணுகா பரமேஸ்வரி கதையும் மாரியம்மனை சைவப் பிரிவில் சேர்த்தது.  

ஜூரநாதரும் சீதளாவும்

பௌத்தக் கடவுள் பரண சபரியின் சன்னிதியில் வலது புறம் ஜ்வாராசுரனும் இடதுபுறம் சீதளா தேவியும் இடம்பெற்றனர். தற்போது ஜ்வாராசுரன் சுரநாதர் என்ற பெயரில் சிவன் கோவில்களில் தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.

சீதளா தேவி மாரியம்மன் என்ற பெயரில் தனித் தெய்வமாக வழிபடப்படுகின்றார். இவ்விருவரும் நோய் தீர்க்கும் கடவுளராக பௌத்த சமயத்தில் இருந்தனர்.

தொடர்ந்து இவ்விருவரின் வழிபாடுகளும் இந்து சமயத்திலும் தொடர்கின்றன. மதங்கள் மாறினாலும் மக்களின் வழிபாட்டுத் தெய்வங்கள் மாறவில்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US