மீனாட்சி திருக்கல்யாணம்: ஒரு லட்சம் பக்தர்களுக்கு விருந்து
சித்திரை திருவிழாவின் 10ம் நாள் நிகழ்வான இன்று மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்து முடிந்துள்ளது.
நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், நேற்று திக் விஜயமும் நடைபெற்று முடிந்து நிலையில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடந்தது.
இதற்காக மேடைகள் பிரம்மாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டன, வண்ண வண்ண பூக்கள், பச்சரிசி, வெட்டிவேர்கள் என திருமண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் தனித்தனியாக எழுந்தருளினர்.
தொடர்ந்து சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக திருக்கல்யாணம் நடந்தது.
இவ்வைபவம் முடிந்த பின்னர் திருமணமான பெண்கள் தங்களது தாலிக்கயிற்றை புதுப்பித்துக் கொண்டனர்.
கோயிலை சுற்றி பல்வேறு பகுதிகளில் தாலிக்கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது.
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடைபெற்றது, இதில் 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விருந்து சாப்பிட்ட பின்னர் பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதி பிரசாதத்தை பெற்றுக் கொண்டனர்.
மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது, இந்த ஆண்டு ஓன்லைனில் மொய் எழுதுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.