மதுரை அரசாளும் மீனாட்சிக்கு இன்று பட்டாபிஷேக விழா
சித்தரை மாதம் என்றாலே நினைவிற்கு வருவது மீனாட்சி திருக்கல்யாணம் ,அழகர் ஆற்றில் இறங்குவது தான்.
மேலும் மதுரை பொறுத்த வரையில் அன்னை ஆட்சி தான்.அப்படியாக அவளின் திருமணம் சித்திரையில் வெகு சிறப்பாக நடைபெறும்.
மீனாட்சி திருக்கல்யாண வைபவத்துக்கு முதல் நாள், திக்விஜயம் செய்து தேசம் முழுவதையும் தன்னுடைய ஆட்சிக்கு உட்படுத்திய இளவரசி மீனாட்சியை, மதுரையின் அரசியாக முடிசூட்டி பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.
சித்திரைத் திருவிழாவின் 8-வது நாள் காலையில் விசேஷ அபிஷேகம், பூஜைகள் முடிந்த பிறகு, பட்டாபிஷேகம் நடைபெறும்.
பந்தலுக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளுவார். அன்னைக்கு முடி சூட்டுவதற்காக 'ராயர் கிரீடம்' எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டுவரப்படும்.
உடன் செங்கோலும் கொண்டு வரப்படும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்படும்.
பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும். பட்டாபிஷேக வைபவம் நிறைவு பெற்ற பிறகு, நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார்.
மதுரை மாநகரமே பெருமைகொள்ளும் வகையில், நடைபெறவிருக்கும் மீனாட்சி பட்டாபிஷேக வைபவம், பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் அற்புத விழா!
மதுரை மாநகரமே அன்னை மீனாட்சியின் புகழைப் பாடித் துதிக்கும் மகத்தான வைபவம்!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |