தினமும் இந்த மந்திரத்தை மட்டும் சொல்லி வாருங்கள்- உங்களை வெல்ல யாராலும் முடியாது
ஆன்மீக வழிபாட்டில் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வதற்கு எப்பொழுதும் சக்திகள் அதிகம். அதனால் தான் சித்தர்கள் ஒரு விஷயத்தை உருவாக்க அதிக சக்தி வாய்ந்த மந்திரங்களை பிரயோகிப்பது உண்டு. ஆக நாம் ஒரு விஷயத்தை அடையவும் உருவாக்கவும், கட்டாயம் இந்த மந்திரங்கள் ஆனது நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நாம் சாதாரணமாக ஒரு வழிபாடு செய்வதற்கும் ஒருவர் ஒரு கடவுளுடைய மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்வதற்கும் நிறைய மாற்றங்களை காணலாம். அப்படியாக நாம் எந்த நேரத்தில் எந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்? எப்படி அதை உச்சரிக்க வேண்டும்? அந்த மந்திரத்தை சொல்வதால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
சிவ பக்தர்களை எடுத்துக் கொண்டோம் என்றால் அவர்கள் எப்பொழுதும் "சிவசிவ" என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். "ஓம் நமச்சிவாய" என்கின்ற இந்த பஞ்சாட்சர மந்திரம் எவர் ஒருவர் தன் வாழ்நாளில் அதிகமாக உச்சரித்து வருகிறார்களோ அவர்களுக்கு மோட்ச நிலை உண்டு என்கிறது புராணங்கள்.

அதேபோல் விஷ்ணு பக்தர்கள் எப்பொழுதும் சதா "ஓம் நமோ நாராயணாய" என்னும் எட்டெழுத்து மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டே இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் பார்க்கும் இடம் எல்லாம் "சர்வம் கிருஷ்ணார்ப்பணம்" என்றும் அவர்கள் சொல்லிக் கொள்வது உண்டு. இப்படி ஒவ்வொரு மந்திரமும் நாம் சொல்லும் பொழுது அதற்கு ஒவ்வொரு சக்திகள் இருக்கிறது.
அதை நாம் நம்மை அறியாமல் பெற்றுக் கொண்டிருக்கிறோம். அப்படியாக காலை முதல் இரவு உறங்க செல்லும் வரை சொல்லக் கூடிய சிவப் போற்றிகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
காலை எழுந்திருக்கும் பொழுது "அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணார் அமுதக் கடலே போற்றி" என்கின்ற இந்தப் போற்றியை சொல்லிவிட்டு நாம் பின்னர் எழுந்திருக்கும் பொழுது அந்த நாள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது.
அதே சமயம் நாம் குளிக்க செல்லும் பொழுது "சடையிடை கங்கை தரித்தாய் போற்றி" என்று சொல்லிக் கொண்டு குளிக்கும் பொழுது நமக்கு கங்கைக்கு சென்று குளித்த பலன் கிடைக்கிறது. கோவிலுக்கு சென்று கோபுர தரிசனம் செய்யும் பொழுது "தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று உச்சரித்துக் கொண்டே தரிசனம் செய்யும் பொழுது நம்மை அறியாமல் நம் உடலில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல்கள் அதிகமாகிறது.
வீட்டை விட்டு வெளியே அலுவலகம் அல்லது தொலைதூர பயணம் செல்கிறோம் என்றால் "காவாய் கனக குன்றே போற்றி! ஆவா எந்தனுக்கு அருளாய் போற்றி" என்ற மந்திரத்தை சொல்லிவிட்டு செல்லும்பொழுது செல்கின்ற பயணங்கள் அற்புதமாக அமையும்.
தொழில் செய்பவர்கள் தினமும் கடையை திறக்கும் போது "வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி" என்று உச்சரிக்கும் போது அவர்கள் தொழில் சிறப்பாக அமையும். அதை போல் சமையலறையில் தினமும் நாம் சமைக்கும் பொழுது "தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி, இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி!" பாராயணம் செய்து கொண்டே சமைக்கும் பொழுது குடும்பத்தில் உள்ளவர்களுடைய ஆரோக்கியம் மேம்படும்.
திடீரென்று ஏதேனும் பிரச்சனைகளால் உங்களுடைய மனதில் அதிக அளவிலான பயம் ஆட்கொள்கின்ற வேளையில் "அஞ்சேல் என்றிங்கு, அருளாய் போற்றி!" இந்த மந்திரத்தை பாராயணம் செய்து கொள்ளும் பொழுது நிச்சயம் பயம் விலகும்.
அதேபோல் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இரவு தூங்கும் வேளையில் "ஆடக மதுரை அரசே போற்றி, கூடல் இலங்கு குருமணி போற்றி!" சொல்லிக் கொண்டு உறங்கும் பொழுது நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
இவ்வாறு நாம் தெய்வங்களை ஒவ்வொரு விஷயத்தையும் தொடர்பு கொண்டு நம்முடைய வாழ்க்கையை நடத்தும் பொழுது அனைத்தும் அர்த்தமாக மாறுகிறது. மேலும் செய்யும் காரியங்கள் அனைத்தும் அற்புதமாக முடிகிறது. அதைவிட மிக முக்கியமாக உங்களை இந்த உலகத்தில் எவராலும் அசைக்க முடியாத வலிமை கிடைத்து ஒரு மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |