புனித தீர்த்தங்களில் நீராட செல்லும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை
நம்முடைய இந்து மதத்தில் தீர்த்தங்களில் நீராடுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதாவது, நாம் புனித தீர்த்தங்களில் நீராடும் பொழுது நமக்கு உண்டான தோஷங்கள் யாவும் விலகுகிறது என்று தீர்க்கமாக நம்பபடுகிறது.
அப்படியாக, நாம் புனித தீர்த்தங்களில் நீராடும் பொழுது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
புனித தீர்த்தங்கள் என்று நம்முடைய தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் திருவிடைமருதூர்த் தீர்த்தம், இராமேஸ்வர சேது தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம், திருக்கடவூர் மயானத் தீர்த்தம், மதுரைப் பொற்றாமரைக்குளத் தீர்த்தம், குடந்தை மகாமகத் தீர்த்தம், திருவாரூர்க் கமலாலய தீர்த்தம், திருநள்ளாறு நள தீர்த்தம், திருவெண்காடு முக்குளத் தீர்த்தம் போன்ற ஒன்பது தீர்த்தங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
திருவிடைமருதூரில் தற்போது 25 தீர்த்தங்கள் இருக்கின்றன. இராமேஸ்வரக் கடல் தீர்த்தமும், திருக்கோயிலின் உள்ளே உள்ள பல தீர்த்தங்களும் உள்ளன. இங்கு முதலில் கடலில் நீராடி பின்பு கோயில்களுக்கு உள்ளே இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
மேலும், கடவூர் தீர்த்தக் கிணற்றில் உள்ள தீர்த்தத்தைக் காசி தீர்த்தம் என்று வழங்குகிறார்கள். இத்தீர்த்தத்தைத் திருக்கடவூர் அமிர்தகடேசுவரப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வண்டியில் எடுத்துச் செல்லப்படுகிறது.
பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததால் இதனை 'அசுவினி தீர்த்தம்' என்றும் வழங்குவர். அதனால், ஒவ்வொரு பங்குனி மாத வளர்பிறை அசுவினி நட்சத்திரத்தில் இவ்விடத்தில் தீர்த்தமாடுவது மிகுந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது.
அதே போல், திருவெண்காடு திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்தால் நீண்ட நாள் குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும், குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களும் விலகும்.
அப்படியாக, திருக்கோயில் தீர்த்தங்களிலும், கங்கை காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும், சுருளி, குற்றாலம் போன்ற நீர்வீழ்ச்சிகளிலும் நாம் நீராட செல்லும் பொழுது முதலில் கால்களை தீர்த்தங்களில் வைக்காமல்“பித்ரு லோக தேவதைகளே போற்றி, சகல கோடி தீர்த்த தேவதைகளே போற்றி”, என்று கூறி முதலில் தீர்த்தங்களையும், நம்முடைய முன்னோர்களையும் நினைத்து வழிபாடு செய்து கொண்டு, பின்னர் வலது கையால் சிறிது தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு, முகம், இரண்டு கைகளையும் அலம்பிய பின்னரே தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது நாம் புனித தீர்த்தங்களில் நீராடிய முழு பலனைப் பெறலாம் என்கிறார்கள். மேலும், தொடர் துன்பம், மன குழப்பம் எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து தீர்க்கமாக முடிவு எடுக்க முடியவில்லை என்றால், இவ்வாறாக கோயில்களுக்கு சென்று புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமியை வழிபாடு செய்த பின் முடிவு எடுத்து தொடங்குகிற காரியம் நல்ல முடிவை கொடுக்கும். அதோடு நம் மனதில் உள்ள குழப்பங்கள் எல்லாம் முற்றிலுமாக விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |