சீதை அம்மன் கோயில்: இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனம்
இலங்கையின் மலையக பிரதேசமான நுவரெலியாவில் அமைந்துள்ளது ஆதிசக்தி சீதையம்மன் கோயில்.
சின்ன இங்கிலாந்து என்றழைக்கப்படும் பச்சை பசேலென்ற இயற்கை வளம் நிறைந்த பகுதி நுவரெலியா.
இங்கிருந்து 5 கிமீ தொலைவிலும், கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இடம் சீதா எலிய கோயில், அதாவது ஆதிசக்தி சீதையம்மன் கோயில்.
சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடமான அசோகவனத்தில் உள்ள கோயில் இதுவாகும்.
இப்பகுதியில் சீதையம்மனின் சிலை கிடைக்கப்பெற்ற பின்னரே கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு
ராமபிரான் சீதாதேவி மற்றும் லட்சுமணன் உடன் வனவாசம் மேற்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
அப்போது ராவணன் தனது மந்திர தந்திரத்தின் மூலம் சீதையை அசோகவனத்தில் சிறைவைக்கிறான்.
இந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது, ராம லட்சுமணர்களுடன் சீதை அருள்பாலிக்கிறார்.
கோயிலுக்கு செல்லும் வழியில் சிவப்பு நிறப்பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன, வெண்மையான மலர்கள் அனுமனின் கைபட்டதால் சிவப்பு நிறத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது.
இக்கோயிலுக்கு பின்னர் சீதா அருவி, ராவண அருவியுடன் கலந்து ஓடுகிறது, எப்போதும் வற்றாத இந்த அருவிக்கு சுவை ஏதும் இல்லை.
இதற்கு காரணம் சீதையின் கண்ணீர் மற்றும் சாபமே என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
கோயில் மண்டபத்தில் ராமாயண காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன, அனுமனிடம் சீதை கணையாழியை பெறும் காட்சிக்கு அருகே உள்ள பாறைகளில் இரண்டு கால் தடங்கள் இருக்கின்றன.
இது அனுமனின் கால் தடங்கள் என்று கூறப்படுகிறது, இங்கு மக்கள் விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.
உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களும், இக்கோயிலில் சீதை அன்னையை வணங்கிவிட்டு செல்கின்றனர்.