திருவிசை நல்லூர் - சூரிய, சுக்கிர, கங்கா ஸ்தலம்
பண்டாரவாடை என்றும் பெயர் பெறும் திருவிசை நல்லூர் என்னும் திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ளது.
இதனை திரு வியலூர் என்றும் திரு விசலூர் என்றும் அழைப்பர். இங்கு யோக நந்தீஸ்வரர் இருப்பதால் இக்கோயிலை ரிஷப ராசி, ரிஷப லக்னத்திற்காக (சுக்கிரன்) சிறப்புக் கோவிலாகப் போற்றுகின்றனர்.
காவேரியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்களில் திருவிசைநல்லூர் 43வது திருத்தலம் ஆகும்.
பைரவர் திருத்தலம்
திருவிசைநல்லூரில் சிவன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். மேலும் நான்கு யுகத்தைச் சேர்ந்த 4 பைரவர்கள் இங்கு உள்ளனர். அவர்கள் ஞானகால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் ஆவர்
சூரிய ஒளிக்கடிகாரமும் காலதேவன் வழிபாடும்
திருவிசை நல்லூர் ஆரம்பத்தில் பௌத்தர்களின் கதிரவன் கோயில் அல்லது கால சாமி அல்லது காலதேவன் கோயிலாக இருந்ததை இங்குள்ள சூரிய ஒளிக் கடிகாரம் காட்டுகின்றது .ஒரு அரை வட்ட வடிவக் கல்லில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்கள் அரை வட்டமாகக் குறிக்கப்பட்டுள்ளன. அந்த அரை வட்டக் கல்லின் படுக்கைக் கோட்டின் மையத்தில் ஒரு பித்தளை ஆணி பதிக்கப்பட்டு உள்ளது. இப் பித்தளை ஆணியின் நிழல் எந்த எண்ணில் விழுகின்றதோ அதுதான் அப்போதைய மணி நேரம் ஆகும். பித்தளை ஆனியன் நிழல் ஆறு என்ற எண்ணில் விழுந்தால் காலை 6:00 மணி 12ல் விழுந்தால் மதியம் 12 மணி. இவ்வாறாக ஆணியின் நிழலை வைத்து மணியைக் கணக்கிடும் சூரிய ஒளிக் கடிகாரம் இத்திருத்தலத்தில் உள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
பௌத்தர்கள் தர்மச் சக்கரத்தை (அறவாழி) காலம் மாறிக்கொண்டே இருக்கும், ஆனால் தர்மம் மட்டும் எல்லாக் காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பதைக் குறிக்கும் வகையில் வழிபடு பொருளாக வைத்திருந்தனர். மேலும் காலம் மாறும் என்பதைக் குறிக்கும் வகையில் சூரிய சந்திரர் உருவங்களை ஒரே கல்லில் பொறித்தும் வழிபட்டனர். தென் தமிழ்நாட்டில் குறிப்பாக குமரி மாவட்டத்தில் இன்றும் கால சாமி கோயில்களும் இந்த கல் தூண்களும் பல ஊர்களில் வழிபாட்டில் உள்ளன.
யோகிகளின் திருத்தலம்
பௌத்தர்கள் சந்திர தியானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சந்திரனுக்குரிய வழிபாட்டுத் தலங்களை நிறுவினர். இவை பின்னர் சிவன் கோயில்களாக மாறிய போது சந்திரனின் சாபம் தீர்க்கப்பட்ட தலங்கள் என்று இவை போற்றப்பட்டன. அது போல சூரியதேவனுக்குரிய தலங்களும் இருந்துள்ளன. அவை எண்ணிக்கையில் குறைவாக உள்ளன. அவற்றில் ஒன்று திருவிசை நல்லூர் ஆகும். இங்கு சூரியன் பற்றிய கதை எதுவும் தற்போது வழங்குவதாகத் தெரியவில்லை. பௌத்தத் துறவிகள் இருந்த ஊர் (மடம்) என்பதால் எட்டுத் துறவிகள் (யோகிகள்) சிவலிங்கத்தில் ஐக்கியமான இடம் என்றும் கருவறை லிங்கம் சிவயோக நாதர் என்றும் அழைக்கப்படுகிறது.
புராதனேஸ்வரர்
திருவிசைநல்லூரின் தொன்மை, புராதனம் கருதி இங்கு கோயில் கொண்ட சிவயோகநாதருக்கு புராதனீஸ்வரர் என்ற பெயர் வழங்குகிறது. இங்குத் தலவிருட்சமாக வில்வமரம் இருப்பதால் வில்வ காட்டில் உள்ள ஈஸ்வரன் என்ற பொருளில் வில்வ ஆரண்யேஸ்வரர் என்ற பெயரும் வழங்குகின்றது. இங்கு அருள் பாலிக்கும் தாயாரின் பெயர் சாந்தநாயகி அல்லது சௌந்தர நாயகி ஆகும்.
நீர் வழிபாடு
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை நீர் வழிபாட்டுச் சடங்குகள் தொடர்கின்றன. இவை வேளாண் சமுதாயத்தில் மழை வழிபாட்டுச் சடங்குகளாக மாறியுள்ளன. வைதீக சமயத்தில் தண்ணீரைப் பெண்தெய்வமாகக் கருதி கங்கா தேவியாகப் போற்றும் மரபு தொடர்கிறது. . சைவப் பேரெழுச்சிக்கு முன்பு திருவிசைநல்லூரில் கதிரவன் வழிபாட்டுடன் நீர் வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எட்டுத் தீர்த்தம், எட்டு யோகிகள்
சூரியன், சந்திரன், தண்ணீர் ஆகிய மூன்றில் ஒன்றோ பலவோ வழிபடு பொருளாக பௌத்த மடங்களில் இருந்துள்ளன. திருவிசை நல்லூரில் எட்டுத் துறவிகளுக்கு எட்டுத் தீர்த்தங்கள் உள்ளன. பொதுவாக சந்திர தியானம் நடந்த தலங்களில் உள்ள தீர்த்தம் சந்திர தீர்த்தம் எனப்படும் . இந்திரன் வழிபாடு நடந்த ஊர்களில் இந்திர தீர்த்தம் எனப்படும். (இவ்விருவருக்கும் இத்தலங்களில் சாப விமோசனக் கதைகளும் வழங்கும் ). திருவிசை நல்லூரில் எட்டு யோகிகளும் எட்டுத் தீர்த்தங்களும் உண்டு. இனி இங்குள்ள தீர்த்தங்களிண் முக்கியத்துவத்தையும் புதிய வரலாற்றையும் ஆராயலாம்.
தீர்த்தத்தின் புனிதம்
தீர்த்தம் என்பது புனித நீர். வைதீக சமயத்தில் புனித நீர் என்பது கங்கை. இத் திருத்தலத்தில் புனித நீரான கங்கை உள்ளது. அதை வருவித்தவர் ஏழை எளிய மக்களிடம் அன்பும் மதிப்பும் கொண்ட ஸ்ரீதர் வெங்கடேசர் ஆவார். அவர் பெயரில் இங்கு ஒரு மடமும் செயலபடுகிறது.
அந்தணர் குடியிருப்பு
திருவிசைநல்லூர் அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட சதுர்வேதி மங்கலமாகும். நான்கு வேதங்களிலும் நல்ல பயிற்சி பெற்றிருந்த வேதியருக்கு இவ்வூர் தானமாக வழங்கப்பட்டது. சோலபர் தந்த சதுர்வேதிமங்கலம் என்று அழைத்தனர்.
1695 ஆம் ஆண்டில் மராட்டிய மன்னர் சாகுஜி என்பவர் ஆட்சி செய்த காலத்தில் 46 பிராமணர்களுக்கு இவ்வூர் இறையிலி நிலமாக வழங்கப்பட்டது. அன்று முதல் இவ்வூர் ஷாஹாஜிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த பிராமணர்கள் தம் நிலத்துக்கு வரி செலுத்த வேண்டாம்.
சூரிய சந்திர வழிபாட்டுத் தலங்கள் இருப்பது போலவே இத்தலம் தண்ணீருக்குரிய தலமாக விளங்குகின்றது. எனவே தண்ணீரின் பெருமை பேசும் கதைகள் இங்கு நிலவுகின்றன.
கங்காஷ்டகம்
திருவிசை நல்லூரில் கங்கை பெருகி ஊருக்குள் வந்ததாக ஒரு கதை உண்டு. அந்த கங்கா பிரவாகத்தை நிறுத்த ஸ்ரீதர் வெங்கடேச தீட்சிதர் என்பவர் கங்காஷ்டகம் என்ற நூலை இயற்றினார்.
கங்கையின் வருகை
அந்தணர் இனத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வெங்கடேசன் என்பவர் தீவிரமான சிவ பக்தர். அவர் ஒரு நாள் தன் தந்தைக்குத் திதி கொடுக்க ஏற்பாடு செய்து அந்தணர்களுக்கு உணவு வழங்குவதற்காக அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்தார். அவர்களுக்கு உணவு வழங்கும் முன்பே ஓர் எளியவன் அவர் வீட்டு வாசலில் நின்று பசியோடு இருப்பதாக கூறினான். உடனே அவனுக்கு முதலில் உணவு பரிமாறும்படி சொல்லிவிட்டார். இதைக் கேட்ட அந்தணர்கள் தங்களுக்கு உணவு வழங்காமல் யாரோ ஒரு எளியவனுக்கு சாதியில் தாழ்ந்தவனுக்கு முதலில் உணவு வழங்குவதா என்று கோபித்துக் கொண்டு அவரை சாதி விலக்கம் செய்து விட்டனர். ஸ்ரீதர் வெங்கடேசன் கங்கையில் நீராடினால் மட்டுமே அவர் செய்த பாவம் தீரும் என்று கூறிவிட்டனர். திதி முடிவதற்கு முன்பே அவர் தங்கையில் நீராடினால் தான் அந்தணர்களுக்கு உணவு படைக்க முடியும். இந்நிலையில் அவர் கங்கைக்கு போய் நீராடி வருவது என்பது சாத்தியமாகாது. அப்போது ஸ்ரீதர் வெங்கடேசன் இறைவனை நோக்கி வேண்டினார்.
ஸ்ரீதர் வெங்கடேசன் இறைவனை வணங்கியதும் இறைவன் ஏழைப் பங்காளன் அல்லவா!. உடனே அவரது வீட்டுக் கிணற்றில் கங்கையை இறக்கினார். கங்கை பொங்கி வரவர ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடாகியது. ஊர் மக்கள் ஸ்ரீதர் வெங்கடேசனிடம் தண்ணீர்ப் பெருக்கை நிறுத்தும்படி வேண்டினர். அவர் கங்காஷ்டகம் பாடி வெள்ளத்தை நிறுத்தினார். அவருடைய கிணற்று நீர் கங்கா தீர்த்தம் என்று இன்றைக்கும் அழைக்கப்படுகின்றது.
தண்ணீருக்கு விழா
திருவிசை நல்லூரில் ஆண்டுதோறும் பத்து நாள் விழா கங்கா திருவிழா என்ற பெயரில் நடைபெறுகின்றது. பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று இரவு முழுக்க விடிய விடிய திவ்ய நாம சங்கீர்த்தனம் செய்து கிணற்றுக்குக் கங்கா பூஜை செய்கின்றனர். அப்போது கிணற்றில் நுரை மிகுந்து நீர்மட்டம் உயரும். எனவே கங்கையே இங்கு வந்து பாய்கின்றாள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
அன்று இரவு …
ஸ்ரீதர் வெங்கடேசன் வீட்டில் கங்கை பெருகிய அன்று இரவு திருவிசை நல்லூர் கோயிலின் சிவலிங்கத்தின் முன்பு ஒரு துண்டுச் சீட்டு காணப்பட்டது. 'ஸ்ரீதர் திதியில் நான் சாப்பிட்டேன் என்பதால் இன்று எனக்கு இரவு நைவேத்தியம் வேண்டாம்' என்று அந்தத் துண்டு சீட்டில் எழுதி இருந்தது.
கதை இரண்டு
சிவபக்தர் ஒருவர் காலையில் திருவிசைநல்லூரில் இறைவனை வணங்கி விட்டு மாலையில் திருவிடைமருதூருக்கு வந்து இறைவனை வணங்குவார். இவ்விரு திருத்தலங்களுக்கும் இடையே வீரசோழன் ஆறு ஓடுகிறது. ஒரு நாள் வீரசோழ ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் அவரால் வெள்ளை நீரைக் கடந்து திருவிடைமருதூருக்கு செல்ல இயலவில்லை. அதனால் வீடு திரும்பி விட்டார். இரவில் ஒருவர் கதவைத் தட்டவும் இவர் கதவை திறந்து பார்த்தார். திருவிடைமருதூர் மகாலிங்க கோவிள் பூசாரி கோயில் பிரசாதத்தை இவரிடம் கொடுத்தார். இவரும் பிரசாதத்தை பெற்றுக் கொண்டு அவரை அங்கேயே தங்கும் படி கூறினார். திண்ணையில் படுத்து உறங்கிய கோயில் குருக்கள் குளிரில் நடுங்குவதைக் கண்டு சிவபக்தர் அவருக்கு ஒரு கம்பளியைப் போர்த்தி விட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது குருக்களை திண்ணையில் காணவில்லை. கம்பளியும் இல்லை.
சிவலிங்கம் போர்த்திய கம்பளி
சிவபக்தர் காலையில் முதல் வேலையாக திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தபோது இவர் குருக்களுக்குக் கொடுத்த கம்பளி ஈசன் மீது போர்த்தப்பட்டிருந்தது. இறைவனே தனக்கு இரவில் வந்து தன் கோவில் பிரசாதத்தை கொடுத்ததாக அறிந்து நெகிழ்ந்து போனார். இதன் காரணமாக தினமும் இக்கோயிலின் உச்சிக்கால பூசையின் பிரசாதம். ஸ்ரீதர் அய்யர்வாள் மடத்திற்குக் கொடுத்து அனுப்பப்படும். இங்கிருந்து திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரருக்கு ஆண்டுதோறும் வஸ்திரம் அனுப்பி வைத்து சாத்தப்படும்.
வேம்பூர்
திருவிசை நல்லூரை வேம்பூர் என்றும் அழைத்தனர். வேம்பூர் என்றால் வேம்பு மற்றும் அவ்வேம்புடன் தொடர்புடைய ஒரு பெண் தெய்வத்தையும் சேர்த்து வழிபட்ட ஊராக இருந்திருக்கும். மேலும் இத்திருத்தலம் பெண் சாபம் போக்கும் ஊராகக் கருதப்படுவதாலும் சுக்கிர தோஷம் போக்கும் ஊராக நம்பப்படுவதாலும் இங்குப் பெண் தெய்வ வழிபாடு சிறப்பாக நடை பெற்றிருக்கும். பௌத்த சமயத்தின் தாரா தேவி கோயில் இருந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து மேலும் தகவல்கள் திரட்டி ஆராய வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |