விஷம் இறங்கவும் சந்திரனைத் தியானிக்கவும் திங்களூர் கோயில்
மனித குல வரலாற்றின் தொடக்கத்தில் சூரியன், சந்திரன், தண்ணீர், நெருப்பு போன்ற இயற்கை மூலகங்களை மக்கள் வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்றும் சூரிய நமஸ்காரம், சந்திர தியானம், சூரிய நாராயணசாமி, அக்கினி புத்திரன் (முருகன்), வைகை, காவேரி, கிருஷ்ணா, கங்கா, யமுனா போன்ற தண்ணீர் தெய்வங்கள் இன்றைக்கும் மக்களால் வழிபடப்படுகின்றன.
சிவன் கோயிலாக மாறியவை
கி மு மூன்றாம் நூற்றாண்டில் வடக்கே பௌத்த சமணச் சமயங்கள் தோன்றிய காலத்தில் அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிகளிடம் காணப்பட்ட இயற்கை வழிபாட்டை இச்சமயங்கள் ஆதரித்தன. இவை இறை மறுப்புச் சமயங்கள் என்றாலும் கூட இயற்கை வழிபாட்டைப் போற்றிப் பாதுகாத்தன.
இச்சமயங்கள் தெற்கே பரவிய போது தமிழ்நாட்டிலும் மடாலயங்களில் மருத்துவ சேவையும் சந்திர தியானமும் முக்கிய இடத்தை பெற்றன. பௌத்தம் மறைந்த பின்னர் இம் மடாலயங்கள் பல சிவன் மற்றும் விஷ்ணு கோவில்களாக மாறின. அப்போது இவை சந்திரனுக்குரிய திருத்தலங்களாக புகழ்பெற்றன.
திங்களுரில் புத்த துறவிக்கு எழுப்பப்பட்ட இத்தகைய பழைய கோவில் ஒரு முனியாண்டவர் கோயில் என்ற பெயரில் முக்கிய சாலையின் கீழ்புறம் உள்ளது. அங்கு ஒரு மண்டபமும் உள்ளது. இங்கு நடந்த சந்திர வழிபாடு தொடர்வதற்கு சந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம் இது என்று எழுதப்பட்ட தல புராணக் கதைகள் உதவின.
கோயில் அமைவிடம்
நவக்கிரக ஸ்தலங்களில் சந்திரனுக்குரிய ஸ்தலமாகத் திங்களூர் போற்றப்படுகிறது. திங்கள் என்றால் சந்திரன் சந்திரனுக்கு உரிய ஊர் திங்களூர். தஞ்சை மாவட்டத்தில் திருவையாறில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது.
இங்குள்ள சிவன் கைலாசநாதர் என்றும் அம்பாள் பெரிய நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கே எழுந்தருளியிருக்கும் விநாயகர் விஷம் தீர்த்த விநாயகர் எனப்படுவார். இக்கோவிலில் சண்டிகேஸ்வரருடன் சண்டிகேச்வரியும் காணப்படுகின்றாள்.
சந்திரனுக்கு சந்நிதி
திங்க்ளுரில் சந்திரனுக்குத் தனி சன்னதி உண்டு. சந்திரனுடைய கதிர்கள் பங்குனி மாதமும் புரட்டாசி மாதமும் சிவலிங்கத்தின் மீது தன் ஒளியைப் பொழியும்.
பௌர்ணமி நாளன்று மாலை 6:00 மணிக்கு சந்திர ஒளி சிவலிங்கத்தைத் தழுவும். இரவு முழுக்க சந்திர ஒளியும் அதிக அதிகாலை 6:00 மணிக்கு சூரிய ஒளியும் படும். சூரியனும் சந்திரனும் தழுவி நிற்கும் இச்சிவலிங்கத்தை பௌர்ணமி திருநாளில் வணங்குவது மிகவும் சிறப்பாகும்.
லட்சார்ச்சனை
மேற்கு நோக்கி இருக்கும் இச் சிவன் கோவிலில் சந்திரன் தென்கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கின்றார் அவருக்கு லட்சார்ச்சனை போன்ற சிறப்பான வழிபாடுகள் இத்தலத்தில் செய்யப்படுகின்றன. சந்திரனுக்குரிய வெண்மை நிறமே இக்கோவிலில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
இத்தலத்தின் தலவிருட்சம் வெள்ளை அரளி. நைவேத்யம் வெண்மையான தயிர் சாதம். இறைவனுக்கு சாத்தப்படும் வஸ்திரமும் வெண்பட்டு ஆகும். குழந்தைகளுக்கு அன்னம் ஊட்டுவதற்கு சிறந்த தலமாக இத்தலம் போற்றப்படுகின்றது.
தல புராணக் கதைகள்
சந்திரனை மையமிட்ட இரண்டு கதைகள் இத்தலத்தின் தொன்மையை எடுத்துரைக்கின்றன.
கதை ஒன்று
அத்ரி முனிவருடைய மனைவி அனுசூயா. இவர்கள் இருவருக்கும் பிறந்த மகன் சந்திரன். அக்காலத்தில் தட்ச பிரஜாபதி என்ற மன்னனுக்கு 27 மகள்கள் இருந்தனர். இவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு தட்சன் திருமணம் செய்து கொடுத்தான். சந்திரன் 27 பேரில் ரோகினியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தினான்.
இதனைக் கண்டு மனம் வருந்திய மற்ற 26 பேரும் தன் தந்தையிடம் வந்து முறையிட்டனர். தன் 26 மகள்களின் கண்ணீர்க் கதையைக் கேட்ட தட்சன் சந்திரனின் ஒளிக்கதிர்கள் அழிந்து போகட்டும் என்று சபித்தான். சந்திரன் இருண்டு போனான்.
அவனுடைய ஒளி அவனை விட்டு நீங்கியது. உடனே அவன் இத்தலத்துக்கு வந்து இங்குள்ள குளத்து நீரில் தினமும் குளித்து சிவலிங்க பூஜை செய்தான். சிவபெருமான் மனம் கனிந்து தட்சனின் சாபத்தைக் குறைத்தார். 15 நாள் ஒளி குன்றவும் அடுத்த 15 நாள் ஒளி வளரவும் அருள் செய்தார்.
திங்களூர் சந்திரனின் சாபம் தீர்த்த இடம் என்பதால் சந்திர தோஷம் உள்ளவர்கள் ஜாதகத்தில் சந்திரன் நீசம் ஆகியிருப்பவர்கள் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சந்திரனுக்கு லட்சார்ச்சனை செய்தால் அவர்கள் மனதில் இருக்கும் சந்தேகம், கலக்கம், தயக்கம், சஞ்சலம் ஆகியவை விலகும்.
நீர் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் நோய் நீங்கப் பெறுவர். நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, நீர் கோர்வை, கபால நீர், உடல் வறட்சி, தோல் வறட்சி, (சொரியாசிஸ்) படர்தாமரை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தலத்திற்கு வந்து சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை செய்து சந்திரனின் பேரருளை பெறலாம்.
கதை இரண்டு
தேவர்களும் அசுரர்களும் வாசுகி பாம்பின் இருமுனையையும் பிடித்து பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது வாசுகி பாம்பு விஷத்தை கக்கியது. சிவபெருமான் அந்த விஷத்தை அருந்தியதால் நீலகண்டன் ஆனார். அவர் விஷயத்தை அருந்தும் போது விஷத்தின் ஆவி பட்டு தேவர்கள் மயங்கி விழுந்தனர்.
சந்திரன் அமிர்த கலசத்துடன் அங்கு வந்து அமிர்தத்தை தேவர்கள் மீது தெளித்து அவர்களின் மயக்கத்தை தெளிவித்தான். எனவே பலவித கஷ்டத்திற்கு ஆளாகி மனம் மயங்கி மதி கலங்கி நிற்பவர்கள் இத்தலத்திற்கு வந்து சந்திர பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து இங்கு எழுந்தருளியிருக்கும் கைலாசநாதர் வணங்கினால் அவர்களின் கலக்கம் விலகி உடல் நோய் தீர்ந்து ஆரோக்கிய வாழ்க்கை சித்தியாகும்.
பெரிய புராணம் கூறும் கதை
சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் திங்களூரில் வாழ்ந்த அப்பூதியடிகளார் என்ற சைவ நாயன்மார் பற்றிய கதை ஒன்று உண்டு. அப்பூதி அடிகளாருக்கு அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் மீதும் அவருடைய சரியை யோக நெறியின் மீதும் தீவிர ஈடுபாடு உண்டு.
அடியார்க்கு அடியானாக விளங்கிய அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரின் பெயரால் தண்ணீர்ப் பந்தல் நிறுவி நெடுந்தூரம் நடந்து களைத்து வரும் பயணிகளுக்கு குடிநீர் வழங்கி வந்தார். தன் மகன்கள் இருவருக்கும் பெரிய திருநாவுக்கரசு சிறிய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
சிவத்தலங்கள் தோறும் உழவாரப்பணி செய்து வந்த திருநாவுக்கரசர் திங்களூர் வந்ததும் தன் பெயரால் இருந்த தண்ணீர்ப் பந்தலைப் பார்த்து அப்பூதி அடிகள் தன் மீது வைத்திருக்கும் மதிப்பு, மரியாதையைக் கண்டு மகிழ்ந்து அவர் இல்லத்தில் உணவு உண்டு செல்ல விரும்பினார்.
அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும் அகம் மகிழ்ந்து அவருக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பெரிய மகனை அழைத்து நீ போய் தோட்டத்தில் வாழை இலை வெட்டிக் கொண்டு வா என்றனர். மகன் திரும்பி வரவில்லை. அப்பூதியடிகளை அவனைத் தேடிப் போனார்.
அங்கு அவர் மகன் பாம்பு தீண்டி இறந்து கிடந்தான். அப்பூதி அடிகளின் மகன் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேள்வி பட்டால் திருநாவுக்கரசர் உணவு உண்ணாமல் பசியோடு சென்று விடுவாரே என்று கலங்கிய அப்பூதி அடிகள் மகனின் சடலத்தைத் தோட்டத்தில் ஒரு பக்கம் மறைத்து வைத்துவிட்டு இலையைக் கொண்டு வந்து திருநாவுக்கரசரைச் சாப்பிட வருமாறு அழைத்து இலையை அவர் முன்பு விரித்து வைத்தார்.
பதார்த்தங்களைப் பரிமாறப் போகும் வேளையில் திருநாவுக்கரசர் 'சற்று பொறும்மா உன் மகன்கள் இருவரையும் வரச்சொல் அவர்களுக்கு விபூதி பூசிவிட்டு பின்பு நான் சாப்பிட அமர்கின்றேன்' என்று கூறினார். அவரும் கை, கால், முகம் கழுவி விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு அமர்ந்தார்.
ஒரு மகன் மட்டும் வந்தான். மறு மகன் வரவில்லை. அவனை எங்கே என்று கேட்டார். 'திருநாவுக்கரசு எங்கிருந்தாலும் விரைவில் வா' என்று அழைத்தார். அப்போது அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் தலை குனிந்தபடி உண்மையைக் கூறாமல் நின்றிருந்தனர்.
ஆனால் திருநாவுக்கரசர் அழைத்ததும் இறந்து கிடந்த மகன் எழுந்து ஓடி வந்தான். அவனைக் கண்டு அப்பூதியடிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். திருநாவுக்கரசர் அவனுக்கு விபூதி பூசிவிட்டு 'இனி சாப்பிடலாம் ம்மா. பதார்த்தங்களை பரிமாறு ' என்றார்.
இருவரும் அவர் திருப்பாதங்களில் விழுந்து வணங்கி நடந்த சம்பவத்தை நிகழ்வை எடுத்துக் கூறினர். உண்மையை திருநாவுக்கரசுரிடம் உரைக்காததற்கு மன்னிப்பும் கேட்டனர்.
விஷம் இறக்கிய பதிகம்
திருநாவுக்கரசர் விஷம் இறங்க பதிகம் பாடி சிறுவனின் உடம்பில் பரவி இருந்த விஷத்தை இறக்கினார் என்பர்.
பத்துக் கொலாம் அவர் பாம்பின் பல்
பத்துக் கொலாம் எயிறு நெரிந்துக் கன
பத்துக் கொலாம் அவர் காயப்பட்டான்
பத்துக் கொலாம் அவர் அடியார் செய்கை தானே
என்ற பாடல் பாடிய போது விஷம் இறங்கிவிட்டது.
பத்துக் கொலாம் எனத் தொடங்கும் பத்து பாடல்கள் விஷம் தீர்த்த பதிகம் ஆகும். இப்பதிகதை பாடி வந்தால் வீடுகளை சுற்றி பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வராது. உடம்பில் விஷப் கிருமியால் நோய் நொடி ஏற்பட்டிருந்தாலும் இப்பதிகம் தினமும் பாடி வர நோயின் பாதிப்பு விலகிவிடும். இத்தலம் பல நூற்றாண்டுகளாக விஷக்கடிக்கு மருந்து கொடுத்த தலம் ஆகும்.
சிலை வடிவில் அடியவர்
திங்களூர் கைலாசநாதர் கோவிலின் உள் மண்டபத்தில் அப்பூதியடிகளுக்கும் அவர் மனைவிக்கும் மகன்கள் இருவருக்கும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
பங்குனி உத்திரம் இந்திரன் விழாவும்
பௌத்த சமயம் பரவி இருந்த காலத்தில் கௌதம புத்தருக்கு ஞான ஸ்நானம் செய்த தேவர்களின் தலைவனான தேவேந்திரனுக்கு பௌத்தர்கள் சிறப்பு வழிபாடுகளும் பூசனைகளும் நடத்தினர். சிலம்பும் மேகலையும் இந்திரவிழாவை விரித்துரைக்கின்றன.
தேவேந்திரன் பெயரால் பங்குனி உத்தரம் முதல் சித்ரா பௌர்ணமி வரை இந்திர விழா காவேரி கரையோரத்தில் உள்ள ஊர்களில் சிறப்பாக நடைபெற்றது. புகார் நகரில் கந்துடை பொதியில் என்று இந்திரனுக்கு கந்து வடிவில் (லிங்கம்) கோவில் இருந்தது.
சிலப்பதிகாரக் காலத்தில் சூரிய வழிபாடு சந்திர வழிபாடு இருந்ததை குறிப்பிடும் வகையில் 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்', என்றும் 'திங்கள் போற்றுதும் திங்கள் போற்றுதும்', 'மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்' என்று வாழ்த்துப்பாடல் அமைந்துள்ளது. பௌத்த சமய காலத்திற்கு பிறகு இந்திர விழா வழிபாடுகளின் பெயர்கள் மாறிவிட்டன.
பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் நடக்கும் நாளாகவும் சித்ரா பௌர்ணமி பெருமாள் ஆற்றில் இறங்கும் நாளாகவும் நீர்நிலையின் கரைகளில் ஆணும் பெண்ணும் கூடி மகிழ்ந்து சித்ரான்னம் சாப்பிடும் நாளாகவும் மாறியது. அடுத்து, பங்குனி உத்திரம் சிவன் காமனை எரித்த நாளாகவும் நினைவு கூரப்பட்டது.
இதனை காமண்டி என்று வடக்கு மாவட்டங்களிலும் காமன் பண்டிகை என்று தென் மாவட்டங்களிலும் கொண்டாடினர். அன்று ஆற்றங்கரைகளில் காமனைப் போற்றுவதும் தூற்றுவதுமாக லாவணி எனப்படும் போட்டிப் பாடல் பாடினர். கோவில்களில் தெய்வங்களுக்கு பங்குனி உத்திரத்தன்று திருமணங்கள் நடைபெற்றன.
ஆற்றங்கரையிலும் கடற்கரையிலும் ஆணும் பெண்ணும் கூடி மகிழ்ந்த பங்குனி உத்திர சித்திரா பவுர்ணமி திருவிழா மக்களின் கலவித் திருவிழா அல்லது காதல் விழா ஆகும். மக்களிடம் இருந்து இந்நன்னாள் தெய்வங்களின் திருமண நாளாக மாற்றம்.பெற்றது.
பங்குனி மாத நிலவுயும் சித்திரை மாத நிலவும் அதிக ஒளி உடையதாகும். எனவே சந்திர ஒளியில் முழுவதுமாக மூழ்கிக் கிடக்க இவ்விரு இரவுகளும் உகந்தன என்பதால் இவ்விரண்டு நாட்களும் கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து இன்று வரை சிறப்பான நாட்களாகக் (இரவுகளாக) கொண்டாடப்படுகின்றன.
பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளையும் சந்திரனின் ஒளிக்கதிர்களையும் அதிகமாக ஈர்த்துக் கொள்வதற்கான நல்வேளை ஆகும்.
விஷம் தீர்த்த விநாயகர் விநாயகர்
சிலைகள் பௌத்த மடாலயங்களில் வைத்து வழிபடப்பட்டன. புத்தரை நாயகர், விநாயகர் என்ற பெயரிலும் போற்றி வணங்கினார். பௌத்த மடாலயங்களில் மடங்கள் மலைக்கு மேலேயும் ஆலயம் எனப்படும் பொதுமக்கள் வந்து செல்லும் இடம் மலையின் அடிவாரத்திலும் இருந்தன.
இங்குப் பொதுமக்களுக்கும் விலங்கு மற்றும் பறவைகளுக்கும் இலவச மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. ஆராமம் என்பதும் பூந்தோட்டம், ?மூலிகைத் தோட்டம்) இருந்தது. தியானம், யோகம், தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்பூதி அடிகள் கதையும் விஷம் தீர்த்த விநாயகரும் திங்களுரில் இருந்த பௌத்த மடாலயம் விஷக்கடிக்கு மருந்து கொடுக்கும் சிறப்பு சிகிச்சை மையமாக இருந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது.
திருச்சி, தஞ்சை பகுதியில் கண் சிகிச்சை மையங்கள் இருந்ததை நேத்திர விநாயகர், கண்ணாயிரநாதர் போன்ற பெயர்கள் சுட்டுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே இங்கு எழுந்தருளியிருக்கும் விநாயகர் விஷம் தீர்த்த விநாயகர் எனப்படுகின்றார்.
கணிப்பும் கட்டிடக் கலையும்
பௌத்த மடாலயத்தில் அளித்த தியானப் பயிற்சியில் சந்திர தியானத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி இருப்பர். சந்திரனின் பாதையையும் பயணத்தையும் கணக்கிட்டு இந்த இடத்திற்கு சந்திரன் பங்குனி உத்திரத்தன்றும் புரட்டாசி பௌர்ணமி அன்றும் வரும் என்பதை கணித்து அறிந்து சந்திரனின் ஒளிபடும் இடத்தில் கந்து எனப்படும் லிங்கத்தை அமைதிருப்பர்.
இரண்டு மாதங்களிலும் பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி சிவலிங்கத்தை பாத முதல் கேசம் வரை தடவி தொட்டு வணங்கி செல்கின்றது. இச் சிற்ப சாஸ்திரக் கணக்குகள் தமிழகத்தின் கட்டுமானக் கலையின் சிறப்பையும் மேன்மையையும் வருங்காலத் தலைமுறையினருக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |