சிவ பெருமானின் சக்தி வாய்ந்த 108 துதிகள்
இந்தியாவில் இந்து சமயம் கிறிஸ்தவம் இஸ்லாம் பௌத்தம் சமணம் ஜொராஸ்டரியம் (பார்சி) என்று பல சமயங்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். இவற்றுள் இந்து சமயம், பௌத்தம், சமணம், ஆசிவகம், சீக்கியம் ஆகியன இந்தியாவில் தோன்றின.
பௌத்தம் சமணம் ஆசிவகம் ஆகியன தற்போது செல்வாக்கிழந்து போய்விட்டன. சீக்கிய சமயம் இன்னும் பல மாநிலத்தவர்களால் பின்பற்றப்படுகிறது. இந்து சமயம் என்ற பெயர் ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவர் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அல்லாதவர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுச்சொல் ஆகும்.
இந்து சமயம் என்ற பொதுப் பெயருக்குள் சீக்கியமும் பௌத்தமும் கூட சேர்க்கப்பட்டடன. ஆதி சங்கரர் இந்நாட்டில் இருந்த கடவுள் வழிபாட்டை அறுவகைச் சமயங்கள் என்று பிரித்தார். அவை சைவம் (சிவன்), வைணவம் (விஷ்ணு), கௌமாரம் (குமரன்), காணாபத்தியம் (கணபதி), சாக்தம் (சக்தி), கௌமாரம் (சூரியன்) ஆகும்.
இந்த அறுவகைச் சமயங்களில் தற்போது வடநாட்டில் வைணவமும் தென்னாட்டில் சைவமும் பெரும் செல்வாக்குடன் திகழ்கின்றது. குமரன் வழிபாடு கணபதி வழிபாடு சக்தி வழிபாடு ஆகியன சைவத்திற்குள் ஐக்கியமாகிவிட்டன.
வைணவத்தின் முதன்மைத் தெய்வமான விஷ்ணுவையும் பௌத்த சமயத்தில் வணங்கப்பட்டு வந்த பிரம்மன் தேவேந்திரன் ஆகியோரையும் சைவ சமயம் தன்னுள் ஐக்கியப்படுத்தியது. சிவனின் அடிமுடி தேடிய கதையில் வராகமாக அவதாரம் எடுத்து அவரது பாதத்தை தேடிச் சென்ற திருமால் அதனைக் காண இயலாது அவரிடம் பணிந்து விட்டார். ஆக சைவ சமயம் சிவபெருமானைத் தனிப்பெரும் கடவுளாக சித்தரித்துள்ளது.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வழங்கப்படும் நாட்டுப்புறத் தெய்வங்களும் தங்கள் தெய்வங்கள் சிவனின் மைந்தர்கள் என்று புதிய கதைப் பாடல்களை உருவாக்கி சைவமயமாகின. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற மாணிக்கவாசகரின் மாணிக்க வரிகள் சிவபெருமான் தென்னாட்டுக்குரியவன் என்று உரிமை கொண்டாடுகின்றன.
மானுடவியல் அறிஞர்கள் சிவன் என்பவன் வடக்கே இமயமலையிலிருந்து போர் எடுத்து வந்த ஓர் இனக்குழு தலைவன் என்று தம் ஆராய்ச்சிகளின் மூலமாக நிறுவியுள்ளனர். சிவன் இங்கே வாழ்ந்து வந்த மானுடக் குலங்களோடு போரிட்டு அவர்களுடைய குல மரபுச் சின்னங்களைத் தன்னுடைய தாக்கிக் கொண்டவன்.
நிறைவாக பாண்டிய மண்டலத்தை ஆட்சி செய்த பெண்ணரசி காஞ்சன்மாலையின் மகள் பேரரசி மீனாட்சியுடன் போரிட்டு அவளைத் தோற்கடித்து தென் பகுதியில் மன்னனாகத் தங்கி விட்டான் என்பது மானுடவியலாளரின் கருத்தாகும்.
வடநாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய சிவபுராணம் லிங்க புராணம் ஆகியவை சிவனின் பெருமைகளை உயர்த்திக் கூறி சிவனை தனி பெரும் ஒற்றை இறைவனாக்கின. இக்கதைகள் சிவனை ஆதி புருஷனாக அண்ட சராசரங்களையும் படைத்து காவல் காத்து அழிக்கும் தெய்வமாக்கின.
கி மு மூன்றாம் நூற்றாண்டு முதல் முதல் தென்பகுதியில் பரவிய பௌத்த சமண சமயங்கள் 4,5 நூற்றாண்டுகள் செல்வாக்குடன் விளங்கின. பின்பு இவர்களுடன் சைவ சமயக் குரவர்கள் அனல்வாதம் புனல்வாதம் வாக்குவாதம் நடத்தி இவர்களைத் தோற்கடித்து சமயங்களை பின்பற்றியவர்களை சைவர்களாக மாற்றினர். தண்டித்தனர், கொன்றனர், இதனால் இச்சமயங்கள் மறைந்தன.
சைவம் பேரெழுச்சியுடன் பெரு வளர்ச்சி பெற்று தென்னாட்டில் வீரசைவம், காபாலிகம், பாசுபதம் என்று பல பிரிவுகளாக வீராவேசத்துடன் வளர்ந்தது. தமிழில் சைவ சமயக் குரவர்கள் தேவாரம் திருவாசகம் பெரிய புராணம் போன்ற பல நூல்களை இயற்றினர் இயற்றி மக்களிடையே சைவ சமயக் கருத்துக்களைப் பரப்பினர். பௌத்த சமணக் கோவில்கள் சிவன் கோவில்களாக்கினர்.
அவற்றிற்கு சிவனின் பெருமைகளை விளக்கும் புதிய ஸ்தல புராணங்களை இயற்றினர். சோழ, பாண்டியப் பெருவேந்தர்களைக் கொண்டு மிகப்பெரிய சிவன் கோவில்களை எழுப்பினர். புழக்கத்தில் இருந்த மற்ற தெய்வங்களை தமக்குள் சுவிகரித்துக் கொண்டு அவர்களைச் சிவனின் கருவறையைச் சுற்றி இருக்கும் பரிவார தெய்வங்கள் ஆக்கினர்.
108 சிவத்தலங்களை, கோயில்களை உருவாக்கினர். தமிழ்நாட்டின் சமய அரசியல் வரலாற்றில் சைவ சமயம் சிவன் வழிபாட்டைமிகப் பெரிய அளவில் மக்களிடையே பரப்பி தனி பெரும் செல்வாக்கைப் பெற்றது. இத்தகைய சிவபெருமானுக்கு தமிழ் நூல்களில் அவனது உருவத்தையும் செயல்பாட்டையும் விளக்குகின்ற பல பெயர்கள் காணப்படுகின்றன.
அவற்றைச் சொல்லி அவனை துதிப்பது நற்பலனைத் தர வல்லது. சிவனுக்குரிய நாளாக திங்கள் கிழமையும் திதியாக அமாவாசையும் நட்சத்திரமாக திருவாதிரையும் விளங்குகின்றது. சிவன் கோவிலுக்கு இந்நாட்களில் சென்று வழிபட்டால் மிகப் பலவான நன்மைகள் பக்தர்களுக்குக் கிடைக்கும்.
மேலும் சிவத் தொண்டர்களை ஆதரித்து அவர்களுக்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்து அவர்கள் சிவபக்தியைப் பரப்புவதற்கு உதவி செய்தால் அதுவும் சிவபெருமானிடம் காட்டிய பக்தியாகவே அமைந்து சிவயோகத்தை வழங்கும். சிவனின் தலையில் சடை முடியும் இளம்பிறையும் கங்கையும் காணப்படும். அவனுடைய உடலில் பாம்புகள் ஊர்ந்து திரியும்.
அவன் இடுப்பில் புலித் தோலை ஆடையாக உடுத்தி இருப்பான் உடம்பில் யானை யின் தோலை போர்த்தி இருப்பான். கையில் திருவோடு ஏந்தி இருப்பான். சூலாயுதம் தங்கி யோக நிலையில் இருப்பான். சுடலையில் வெண் நீறு பூசி ஊழித் தாண்டவம் புரிவான். கைலாயம் அவனுடைய இருப்பிடம். அங்கு அவன் மனைவி பார்வதியுடன் இணைந்து ஆனந்த தாண்டவம் புரிவான்.
அக்கிரமம் அநியாயம் செய்யும் அசுரர்களைக் கொள்வான். இந்நிகழ்ச்சிகள் சைவ சமய நூல்களில் உள்ளன. சிவபெருமானின் இயல்புகளையும் தோற்றத்தையும் விளக்கும் பெயர்களைப் போற்றிகளாக்கி சிவபெருமானைக் குறித்து துதிக்கும் போது கூறினால் சிவானந்தம் கிட்டும். சிவன் கோவில்களுக்குப் போகும்போது இப் போற்றிகளை மனதிற்குள் சொல்லிக் கொண்டே சன்னதியை சுற்றிவர வேண்டும்.
குழந்தைகளுக்குத் தினமும் ஐந்து வரிகளாக கற்பித்து அவர்களுக்கும் போற்றி சொல்லப் பழக்கி விட வேண்டும். ஒவ்வொரு முறை கோவிலுக்கும் போகும்போதும் சிவன் சன்னதியை சுற்றி வரும் போது 108 போற்றிகளையும் ஐந்து முறையாவது சொல்லி விட வேண்டும்.
அதுபோல சக்தி போற்றி விநாயகர் போற்றி முருகன் போற்றி ஆகியவைகளையும் சக்தி விநாயகர் சன்னதிகள் முன் நின்று சொல்ல வேண்டும். இதற்காகவே போற்றிகளை வெளியிடுகிறோம்
ஓம் ஆலவாய் அண்ணலே போற்றி
ஓம் ஆடல் அரசே போற்றி
ஓம் ஆடல் வல்லானே போற்றி
ஓம் ஆதிரையான் போற்றி
ஓம் அடியார்க்கு இனியான் போற்றி5
ஓம் அடியார்க்கு நல்லான் போற்றி
ஓம் ஆலகண்டன் போற்றி
ஓம் ஆலமர் செல்வன் போற்றி
ஓம் ஆலந்துறை நாதன் போற்றி
ஓம் அமரர் கோன் போற்றி 10
ஓம் அம்பலக்கூத்தன் போற்றி
ஓம் அம்பலவாணன் போற்றி
ஓம் ஆனந்தக் கூத்தன் போற்றி
ஓம் அணங்குறை பாகன் போற்றி
ஓம் அன்பர்க்கு அன்பன் போற்றி 15
ஓம் அந்தமில்லான் போற்றி
ஓம் அண்ணாமலை போற்றி
ஓம் ஆராவமுதன் போற்றி
ஓம் அருளாளா போற்றி
ஓம் அருட்பெருஞ்சோதி போற்றி 20
ஓம் அருள் வல்லான் போற்றி
ஓம் ஆதிநாதா போற்றி
ஓம் ஆத்திச்சூடி போற்றி
ஓம் அவிநாசி நாதன் போற்றி
ஓம் ஐமுகன் போற்றி 25
ஓம் அய்யாற்றண்ணல் போற்றி
ஓம் சடையப்பன் போற்றி
ஓம் சம்புகேஸ்வரா போற்றி
ஓம் சந்திர சேகரன் போற்றி
ஓம் சந்திரமௌலி போற்றி 30
ஓம் சட்டநாதன் போற்றி
ஓம் சிற்றம்பலவாணன் போற்றி
ஓம் சித்தநாதன் போற்றி
ஓம் சோதிர் லிங்கமே போற்றி
ஓம் சொக்கநாதா போற்றி 35
ஓம் சொக்கலிங்கம் போற்றி
ஓம் சோமசுந்தரா போற்றி
ஓம் தாணுமாலயாபோற்றி
ஓம் திருமறை நாதா போற்றி
ஓம் தேவநாதன் போற்றி 40
ஓம் ஏடகநாதன் போற்றி
ஓம் ஏகன் அனேகன்போற்றி
ஓம் ஏழை பங்காளன் போற்றி
ஓம் எம்பெருமான் போற்றி
ஓம் திரிபுரம் எரித்தான் போற்றி 45
ஓம் இடபநாதன் போற்றி
ஓம் ஏறுடையான் போற்றி
ஓம் சிதம்பர நாதன் போற்றி
ஓம் எழுத்தறிநாதன் போற்றி
ஓம் கங்கை சடையான் போற்றி50
ஓம் ஞானக்கொழுந்தேபோற்றி
ஓம் ஞானமூர்த்தி போற்றி
ஓம் உமையொரு பாகன் போற்றி
ஓம் இளம்பிறையான் போற்றி
ஓம் இமயவர் கோன் போற்றி 55
ஓம் இன்ப சேகரன் போற்றி
ஓம் இம்மையில் நன்மை தருவான் போற்றி
ஓம் இறைவர்க்கிறைவா போற்றி
ஓம் சச்சிதானந்தன் போற்றி
ஓம் காளையப்பன் போற்றி 60
ஓம் ஏகபாத ஈஸ்வரன் போற்றி
ஓம் கங்காளநாதன் போற்றி
ஓம் கணநாதா போற்றி
ஓம் கண்ணாயிர நாதா போற்றி
ஓம் கண்ணுதலான் போற்றி 65
ஓம் கபாலீஸ்வரா போற்றி
ஓம் கயிலை நாதன் போற்றி
ஓம் கேடிலியப்பன் போற்றி
ஓம் கொடுமுடி நாதன் போற்றி
ஓம் கொன்றைச்சூடி போற்றி 70
ஓம் குறும்பலா ஈசன் போற்றி
ஓம் கூத்தபிரான் போற்றி
ஓம் மாசிலாமணி போற்றி
ஓம் மாதொருபாகன் போற்றி
ஓம் மலைமகள் நாதன் போற்றி75
ஓம் மன்றவாணன் போற்றி
ஓம் மறைநாதர் சோதி போற்றி
ஓம் மருதீசன் போற்றி
ஓம் மீனாட்சி நாதன் போற்றி
ஓம் முப்புரம் எரித்தோன் போற்றி 80
ஓம் நஞ்சுண்ட கண்டன் போற்றி
ஓம் நற்றுணை நாதன் போற்றி
ஓம் நெற்றிக்கண்ணன் போற்றி
ஓம் நீலகண்டன் போற்றி
ஓம் உமாபதி போற்றி 85
ஓம் நுதல் விழியன் போற்றி
ஓம் நுண்ணியன் போற்றி
ஓம் படிக்காசு ஈந்தான் போற்றி
ஓம் பால்வண்ண நாதன் போற்றி
ஓம் பாம்புரத்து ஈசன் போற்றி 90
ஓம் பரமேஸ்வரன் போற்றி
ஓம் பரஞ்சோதி நாதன் போற்றி
ஓம் பரம்பொருள் நாயகன் போற்றி
ஓம் பராபரன் போற்றி
ஓம் பசுபதி நாதன் போற்றி 95
ஓம் பாபநாசன் போற்றி
ஓம் பழமலை நாதன் போற்றி
ஓம் பழவினை அறுப்பான் போற்றி
ஓம் பேரின்ப நாதன் போற்றி
ஓம் பிச்சாண்டான் போற்றி 100
ஓம் பிறை சூடன் போற்றி
ஓம் பிரபாகரன் போற்றி
ஓம் பொன்னம்பலக்கூத்தன் போற்றி
ஓம் பொன்னார் மேனியனே போற்றி
ஓம் மகாதேவா போற்றி 105
ஓம் மகேஸ்வரா போற்றி
ஓம் முத்தொழிலானே போற்றி
ஓம் மூல வித்தே போற்றி 108
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |