ஐயப்பன் வரலாறும் வழிபாடும்

By பிரபா எஸ். ராஜேஷ் Sep 07, 2024 07:00 AM GMT

ஐயப்பன் வரலாறு பற்றிய தேடலில் இரண்டு கதைகள் கிடைத்தன.. ஒன்று புராணக்கதை இது புனைவுக் கதை. மனிதனை தெய்வமாக்கும் கதை. நாட்டுப்புறத் தெய்வ கதைகளில் நம்மோடு வாழ்ந்து நமக்காக உயிர் விட்ட சாமான்யனை சிவனின் மகன் என்றும் ராஜனின் மகன் என்றும் அவனை உயர்த்திச் சொல்லி கதை கட்டுவது மரபு. வில்லுப்பாட்டு மற்றும் சாமிகளின் கதைப் பாடல்களில் இப்புனைவுகளைக் காணலாம்.

எ-டு காத்தவராயன், மதுரை வீரன், கருப்பனசாமி, முப்புடாதி அம்மன். மணிகண்டன் என்னும் மனிதனின் கதை இரண்டாவது மனிகண்டன் (ஐயப்பன்) என்ற மனிதனின் கதை. இந்த உண்மைக் கதையில் அவன் ஒரு மலைவாழ் மனிதன்.

சிவபெருமான் வரலாறும் வழிபாடும்

சிவபெருமான் வரலாறும் வழிபாடும்


மலையரையர் குடியைச் சேர்ந்தவன். இந்தக் கதை பலருக்கும் தெரியாத கதை என்பதால் முதலில் இது பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஐயப்பன் ஹரிஹர புத்திரன் என்றும் மகிஷியைக் கொல்ல வந்தவன், தன் வளர்ப்புத் தாய்க்காக புலிப்பால் கொண்டு வந்தவன், சாப விமோசனம் பெற்ற மகிஷி மஞ்சள் மாதாவாக மாளிகை புரத்து அம்மனாக ஐயப்பனின் கோயிலுக்கு அருகே கோயில் கொண்டுள்ளாள் போன்ற கதைகள் பலரும் அறிந்ததே.

15, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மலைவாசி மணிகண்டன் என்பதும் அவன் சராசரி மனிதர்களைப் போல வாழ்ந்து மறைந்தவன் என்பதும் பலரும் அறியாத கதையாகும். இரண்டையும் தெரிந்து கொள்வோம். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்/ மெய்ப்பொருள் காண்பது அறிவு.

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் | Lord Iyappan

மாயாவை மீட்டனர்

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பந்தளம் என்ற பகுதியின் மன்னனாக ராஜசேகரப் பாண்டியன் இருந்தான். இவனது குல தெய்வம் மதுரை மீனாட்சி. ஒரு சமயம் இவனது தங்கை மாயாவை உதயணன் என்ற கொள்ளைக்காரன் கடத்திச் சென்றான்.

மன்னன் தன் தங்கையை அப்பகுதி மலைவாழ் மக்களின் தலைவனான மூப்பனின் உதவியோடு மீட்டுக் கொண்டு வந்தான். அக்காலகட்டத்தில் மன்னர்கள் தங்களின் போர்த் தேவைகளுக்காக மலைவாழ் மக்களை சிறு சிறு படைகளாகக் கொண்டு வந்து பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் இருந்தது.

மன்னர்கள் பெண் கேட்டு வரும்போதும் பெண்களை வன்முறையாகத் தூக்கிச் செல்லும் போதும் மலைக்குறவர்கள் அல்லது மலைவாழ் மக்களை அனுப்பிப் பெண்ணை மீட்டு வரச் செய்யும் பழக்கம் இருந்ததை ஸ்ரீரங்கம் கோவில் மண்டபத்தில் உள்ள ஒரு சிலையும் சான்று பகர்கிறது. 

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

மாரியம்மன் வரலாறு வழிபாடும்


மண்டபத் தூணின் சிற்பம்

மணிகண்டன் பிறந்த மலைவாழ் மக்களை மலை அரையர் என்று அழைத்தனர். அரையன் என்றால் அரசன். முத்தரையர், பழுவேட்டரையர் போன்ற சொற்களில் அரையர் என்ற சொல் வருவதைக் காணலாம். இவர்கள் பெரு வேந்தருக்குத் துணைப் படையாக இருந்தனர்.

ஸ்ரீரங்கம் கோவில் மண்டபத்திண் தூண் ஒன்றும் ஒரு மலைக் குறவன் ஓர் இளம்பெண்ணைத் தன் தோளில் தூக்கிச் செல்லும் சிற்பம் உள்ளது. அவனை தொடையில் இன்னொருவன் கத்தியால் சொருகுவான். கத்தி உள்ளே போகும் தடமும் வெளியே வரும் வழியும் கற்சிலையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அவன் மீட்டுக் கொண்டு வரும் பெண் ஓர் இளவரசி என்பதையும் அச்சிலை தெளிவாகப் புலப்படுத்தும். 

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் | Lord Iyappan

மணிகண்டன் பிறப்பு

மலைக்குறவர் படை அல்லது மலையரையர் படை என்பது நாட்டு மன்னர்களுக்கு சிறு சிறு போர் மற்றும் பூசல்களில் பெரிதும் உதவியது. இவ்வாறு மூப்பர் (தலைவர்) தலைமையில் அமைந்த மலையரையர் படை இளவரசி மாயாவை மீட்டுக் கொண்டு வந்தது கொண்டுவந்து அரண்மனையில் சேர்த்தது

ஆனால் அரண்மனையில் அந்த பெண்ணைச் சேர்த்துக் கொள்ள எவருக்கும் விருப்பமில்லை. எனவே அந்தப் பெண்ணை காட்டுவாசியான மூப்பண் தானே அழைத்து வந்து தன் தங்கை மகனுக்கு திருமணம் செய்வித்தான். இவர்களின் மகன் தான் மணிகண்டன் எனப்படும் ஐயப்பன் ஆவார். கோயில் வந்த பின்பே இவர் பெயர் ஐயப்பன் ஆயிற்று.  

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் | Lord Iyappan

வாரிசுப் போட்டி

ராஜசேகரப் பாண்டியனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் தன் தங்கை மகனை மலையில் இருந்து கொண்டு வந்து தனக்கு வாரிசாக்க வேண்டும் என்று நினைத்தான். காட்டுக்குள் சென்று தங்களிடம் கேட்டு அந்த குழந்தையை பெற்றுக் கொண்டு வந்தான்.

அவள் கழுத்தில் ஒரு மணிமாலையை அணிவித்து மாயா அக்குழந்தையை அண்ணனிடம் கொடுத்து விட்டாள். மணிகண்டன் என்ற பெயருடைய அக் குழந்தை வளர்ந்து வரும் போது ராஜசேகர மன்னனின் மனைவி ஓர் ஆண் குழந்ததையைப் பெற்றாள். அவளுடைய குழந்தையும் வளர்ந்து வந்தது.

விநாயகர் வரலாறும் வழிபாடும்

விநாயகர் வரலாறும் வழிபாடும்


 ராஜசேகர மன்னன் எங்கே மணிகண்டனுக்கு முடிசூட்டி விடுவானோ என்று அஞ்சி அவனது மனைவி தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாகவும் அதற்கு புலிப்பால் அருந்தினால் நோய் தீர்ந்து விடும் என்றும் மருத்துவன் மூலமாக மன்னனிடம் கூறினாள்.

சின்னம்மாவின் சூழ்ச்சியை அறிந்த அறிந்த மணிகண்டன் உடனே காட்டுக்கு போய் புலிக் கூட்டத்தையே கொண்டு வந்து விட்டான். இவன் உயிரோடு திரும்பி வந்ததை அறிந்து அரசியும் மந்திரிப் பிரதானிகளும் அரண்மனை மருத்துவரும் அதிர்ச்சி அடைந்தனர். புலிப்பால் பெறும் முயற்சியில் இவன் இறந்து விடுவான் என்று அவர்கள் கருதினர்.   

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் | Lord Iyappan

சொரிமுத்து ஐயனார்

கோயில் மணிகண்டன் மலையிலேயே பிறந்து மலைவாழ் மக்களோடு அதிக நேரம் செலவிட்டவன் என்பதனால் புலிகளை வசப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தான்.

அவன் காட்டில் தனது நண்பர்களுடன் வீர விளையாட்டுகளில் பொழுதைக் கழித்தான். அவன் களரிப் பயிற்சி எடுத்த இடம் தான் சொரிமுத்து அய்யனார் கோவில் கொண்டிருக்கும் இடம் என்று நம்பப்படுகிறது. 

நண்பர்களும் காதலியும்

மணிகண்டனுடன் வாஃபர் என்ற முகமதியச் சிறுவனும் களரிப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கும் மணிகண்டனுக்கும் வீர விளையாட்டுகளில் போட்டி இருந்து வந்தது. இப்போட்டிகளில் ஏற்பட்ட வெற்றியும் தோல்வியும் இவர்களை நெருங்கிய நண்பர்கள் ஆக்கியது.

ஒருநாள் மணிகண்டன் மூப்பனின் மகள் லலிதாவைச் சந்தித்தான். அவள் மேல் காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினான். மலைவாசிகளில் ஒருவனான கடுத்தன் இவனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தான்.

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் | Lord Iyappan

கொள்ளையனைக் கொன்றான்

ஒரு நாள் மணிகண்டனின் தாயான மாயாவைக் கடத்திக் கொண்டு போன உதயணன் என்ற கொள்ளைக்காரன் மலைக் கிராமங்களை கொள்ளையடிக்க வந்தான் மணிகண்டன் தன் நண்பர்களோடு சேர்ந்து அவனோடு போரிட்டு அவனைக் கொன்றான். இப்போரில் அவனும் அவன் நண்பர்களும் கொல்லப்பட்டனர். லலிதாவும் உயிர் இழந்தாள்.  

மலைக் கோயில்கள்

மலையரையர்கள் தன் ஊர் மக்களுக்காக போராடி உயிர் நீத்த மணிகண்டனுக்கு கோயில் கட்டி ஐயப்பன் (ஐ-தலைவன் சிறந்தவன், அப்பன் - தந்தை) என்ற பெயரில் வழிபட்டனர். இவனோடு இறந்து போன கடுத்தனுக்கும் வாஃபருக்கும் லலிதாவுக்கும் அருகிலேயே கோயில் கட்டினர். 

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் | Lord Iyappan

மணிகண்ட ராஜா

லலிதா கோயில் இப்போது மாளிகைபுரத்தம்மன் / மஞ்சள் மாதா கோவில் எனப்படுகின்றது. ராஜசேகர பாண்டியன் மணிகண்டன் ராஜாவாகாமல் இறந்து போனதை அறிந்து வருந்தினான். அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் ராஜா குடும்பத்தார் ராஜசேகரப் பாண்டியன் மணிகண்டனுக்குச் செய்து வைத்திருந்த நகைகளை ஓர் ஆபரணப் பெட்டியில் வைத்து ஐயப்பன் கோவிலுக்குக் கொண்டு வந்து அவனுக்கு அணிவித்து மணிகண்டராஜாவாக அழகு பார்க்கின்றனர்.

இந்த ஆபரணங்களில் ராஜாவுக்குரிய மீசை இருக்கின்றது. இவர்கள் இளவரசி மாயாவின் மகள் லலிதாவின் கோவிலான மாளிகைபுரத்தம்மன் சந்நிதிக்கு திரு ஆபரணப்பெட்டியைப் பெட்டியைக் கொண்டு வந்து இறக்குவர். அந்த மாளிகைபுரத்தில் ராஜ குடும்பத்தினர் தங்குவார்கள்.  

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் | Lord Iyappan

வெளுத்தச்சனின் சிறப்பு

மணிகண்டனுக்கு ஒரு கிறிஸ்தவப் பாதிரியர் நட்பும் இருந்ததாக அறிகிறோம். இவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பாதிரியார் என்பதால் அவரை வெளுத்தச்சன் என்று அழைத்தனர். இன்றைக்கும் ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் வெளுத்தச்சன் கோவிலுக்குச் (செயின்ட் ஆண்டுருஸ் சர்ச்) சென்று குளித்த பிறகு மாலையை கழற்றுகின்றனர்.

18 வீரர்கள் 18 படிகள்

தங்கள் கிராமத்தை கொள்ளையரிடமிருந்து காப்பாற்றுவதற்காகப் போரிட்டு உயிர் விட்ட மணிகண்டனுக்கு மலைவாழ் மக்கள் கோவில் எழுப்பிய போது அவனோடு போரிட்டு உயிர் நீத்த 18 வீரருக்கும் 18 படிக்கட்டுகள் வைத்தனர். அந்த 18 பேரில் ஐந்தாம் அவன் கருப்பன் ஆவான்.

18 படிக்கட்டுகளில் முதல் படிக்கட்டில் மலைவாழ் மக்களின் தலைவனான கரிமலா அரையன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கரிமலா என்றால் கருப்பு மலை, அந்த மலையின் அரசன் ஆனவனே அக்கோயிலுக்கு முதல் பூசாரியும் ஆவான். இம்மக்கள் மணிகண்டனின் நெருங்கிய நண்பனானான கடுத்தனுக்கும் ஐயப்பன் கோயில் அருகே தனி கோயில் கட்டினர். ஐயப்ப பக்தர்கள் கடுத்தசாமிகள் சந்நிதியையும் தரிசிக்கதவறுவதில்லை. 

18ஆம் படி கருப்பசாமியின் கதையும் வரலாறும்

18ஆம் படி கருப்பசாமியின் கதையும் வரலாறும்


மலைதீபம் மகர

ஜோதி மலையரையர்கள் கோவில் கட்டி இருக்கும் இடத்தை விட இன்னும் உயரமான மலை உச்சியில் ஆண்டுக்கு ஒரு முறை மகர சங்கராந்தி அன்று நெருப்பு வழிபாடு செய்வது மரபு. கார்த்திகை நாளன்று தமிழகத்தில் திருவண்ணாமலை திருப்பரங்குன்றம் போன்ற மலைகளின் உச்சியில் பெரிய கொப்பரையில் நெய்த்திரி இட்டு தீபம் ஏற்றுவர்.

அதனை ஜோதி என்று அழைப்பார்கள். அதுபோல மலையரையர்களும் பொன்னம்பல மேடு என்ற இடத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் சமப்படுத்தி அங்கு ஜோதி வழிபாடு செய்தார்கள். மூன்று முறை இந்த ஜோதியை ஏற்றி அணைப்பது அவர்களின் வழிபாட்டு மரபாகும். 

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் | Lord Iyappan

 18 படிகள் கொண்ட ஐயப்பன் கோவிலில் இருந்து மலை உச்சியைப் பார்க்கும் பக்தர்கள் வனத்தில் ஜோதி தெரிகிறது என்று நம்பி மகர ஜோதியை வணங்குவது உண்டு. ஆரம்பத்தில் இந்த மகரஜோதியை ஓர் அதிசயம் என்றே பலரும் கூறிவந்தனர். பின்னர் அது பொன்னம்பலமேட்டில் மலை அரையர்கள் ஏற்றும் ஜோதி என்று நீதிமன்றத்தில் ஆதாரப் பூர்வமாகத் நிறுவப்பட்டது.

பின்பு அங்கு வாழ்ந்த 60, 70 மலைவாழ் மக்களின் குடும்பங்களை அப்பகுதியை வீட்டுக்குக் கீழே துரத்தி விட்டனர். பொன்னம்பலம் மேட்டுக்கு போகும் வழியையும் அடைத்து வைத்தனர். இப்போது கோயிலைச் சேர்ந்தவர்களே ஒவ்வொரு ஆண்டும் அங்கு ஜோதியை ஏற்றும் பணியைச் செய்கின்றனர்.  

மகர ஜோதி மனிதர் ஏற்றுவது என்ற வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது அதை அதிசயம் அற்புதம் என்றெல்லாம் பேசியது தவறு என்றும் தகவல் பரப்பியது தவறு என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. அது வானத்தில் தெரியும் ஜோதி அல்ல மனிதர்கள் நடத்தும் ஒளி வழிபாடு என்ற உண்மை எல்லோருக்கும் புரிந்தது.

ஐயப்பன் வழிபாடு

மணிகண்டன் திருமணம் ஆகாமல் இறந்து போனதால் அவரை வழிபடுவோர் கடும் பிரமச்சர்ய விரதம் மேற்கொள்கின்றனர். அங்குப் பெண்கள் வர அனுமதி இல்லை. அங்கிளும் கடும் விரதம் இருந்தே வரவேண்டும். எனவே மது, மாது, மாமிசம், மச்சம், மைதுனம் நீக்கிக் கடும் விரதம் இருந்து மலைக்கு வந்து முதலில் அவர் நண்பர்களான கடுத்த சாமிகள், வாஃபர், பின்பு மாளிகைபுரத்தம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். கடும் விரதம் இருக்கும் ஒவ்வொருவரும் ஐயப்பன் சாமியாகவே மக்களால் போற்றப்படுகின்றார். இதனால் அவர்களை சாமி என்றே அனைவரும் அழைக்கின்றனர். 

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் | Lord Iyappan

பிராமணக் கோயில்

அல்ல ஐயப்பன் மகாதேவனோ, மகாவிஷ்ணுவோ இல்லை, அவன் மனிதனாக வாழ்ந்து மறைந்தவன் என்பதால் கேரளாவின் நம்பூதிரி ஐயர்கள் ஐயப்பனுக்குப் பூசாரியாக இருக்கவில்லை. இக்கோயிலுக்கு ஆந்திராவில் கிருஷ்ணை ஆற்றின் கரையில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பூசாரிகளை அழைத்து வந்தனர். நம்பூதிரிகள் பூசை செய்யாததால் இக்கோயிலுக்குக் கேரள பக்தர்கள் குறிப்பாக பிராமணர்கள் வருவதில்லை. பிராமணர் அல்லாதோரும் தமிழக பக்தர்களுமே வருகின்றனர். 

ஐயப்பனின் குலதெய்வ வழிபாடு

ஐயப்பன் மனிதனாக வாழ்ந்து மாண்டவன் என்பதால் இவ்வழிபாடு இத்துடன் நிறைவு பெறுவதில்லை. ஐயப்பன் வழிபாட்டில் அவனது குல தெய்வ வழிபாடும் இணைந்துள்ளது. ஐயப்பன் கோயிலுக்குப் போகும் பக்தர்கள் ஐயப்பனின் குல தெய்வமான அன்னை மீனாட்சியை மதுரையில் வந்து வணங்கிச் செல்கின்றனர். இவழிபாட்டுடன் ஐயப்பன் வழிபாடு நிறைவு பெறுகின்றது.

(அடுத்து ஐயப்பனின் புராணக் கதையை அறிவோம்)

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US