வராகி பூஜையும் விரதங்களும்
வராகி ஒற்றைக் கொம்பு உடைய பன்றி முகமும் பெண் உடலும் கொண்டவள். அவள் கையில் நெல் வேளாண்மைக்குரிய கலப்பை, நெல் குத்தும் உலக்கை, காண்டாமணி, மாட்டுவால் ஆகியவை ஆயுதங்களாக இருக்கும். மருத நிலப் பெண் தெய்வமான வராகியை மருத நிலத்தின் வேந்தர்கள் போருக்குச் செல்லும் போது வணங்கிச் செல்வர்.
கிபி 7,8 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் வராகி வழிபாடு நடைமுறைக்கு வந்தது. அதுவரை கொற்றவை வழிபாடு போர் வெற்றிக்குரிய தெய்வ வழிபாடாக இருந்தது. கொற்றவையின் இடத்தை, வராகி, நிசும்ப சூதிணி, வக்ர காளி போன்ற தெய்வங்கள் பிடித்துக்கொண்டன.
வராகிக்கு உரியவை
வராகி மனித உடம்பில் எலும்புக்கு உரியவள். எலும்பு நோய் உடையவர்கள் வராகி விரதம் இருந்து நலம் பெறலாம். அறுவகைச் சக்கரத்தில் இவள் மணி பூரகத்துக்கு (தொப்புள் பகுதிக்கு) உரியவள். மருந்துகளில் இனிப்புக்கும் உரியவள். உன்மத்த பைரவி, ஸ்வப் நேசி, திரச்கரணி, கிரிபதா ஆகியோர் இவளது பரிவார தேவதைகள் ஆவர். கிரி என்றால் பன்றி. பன்றிகளால் இழுத்து வரப்படும் ரதத்தில் ஏறி வருபவள் வராகி. எனவே வராகியின் யந்திரத்திற்கு பெயர் கிரி சக்கரம் ஆகும்.
வராகி மாலை
பதினாறாம் நூற்றாண்டில் வீரை கவிராச பண்டிதர் என்பவர் வராகி மாலை என்ற நூலை எழுதினார். இந்நூலில் வராகி யந்திரமும் அதற்குரிய பாடலும் மந்திரமும் இப் பூஜையினால் கிடைக்கும் பலன்களும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வராகி கோவில்கள் பௌத்தர்கள் காலத்தில் தமிழகம் வந்த வராகிக்கு அவர்கள் திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் கோயில்கள் கட்டினர். வராகிக்கு அருகில் விநாயகர் சிலைகளையும் வைத்தனர் எனவே வராகி உபாசகர்கள் விநாயகரை வணங்கிய பின்பு வராகி உபாசனையை தொடங்குவர்.
அரசாலை அம்மன்
உத்தரகோசமங்கையில் மிகப் பழைய கோவில் என்று சொல்லப்படுகின்ற ஒரு வராகி கோவில் உண்டு. விழுப்புரம் அருகே சாலமேடு என்ற ஊரில் உள்ள வராகி கோவிலை தமிழகத்தின் பழைய வராகி கோவில் என்று சொல்பவர்களும் உண்டு.
காஞ்சிபுரத்தில் பள்லூர் கிராமத்தில் உள்ள அரசாலை அம்மன் கோவில் வராகி அம்மனின் மிகப் பழைய கோவில் ஆகும். அரசாலை என்ற பெயரில் வராகி சகஸ்ரநாமத்தில் அவள் அழைக்கப்படுகிறாள். எனவே வைதீக சமயங்கள் பேரெழுச்சி பெற்ற காலத்தில் வராகி கோவில்கள் அரசாலை அம்மன் கோவில் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டன.
வராகி ரூபிணி
திருச்சியில் திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்டேஸ்வரி வராகி ரூபமாக விளங்குகிறாள். இக்கோயில் வராகி பீடமாகும். நாகப்பட்டினத்தில் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலுக்கு முன்பு பழைய வராகிக்குரிய தனிக் கோவில் இருந்துள்ளது.
எட்டயபுரத்து அருகே நரிப் பட்டி என்ற ஊரில் வராகிக்குத் தனிக் கோயில் உண்டு. நரி என்ற பெயர் பௌத்த சமயத்தின் டாகினி தென் தெய்வத்தினோடு தொடர்புடையதாகும். அதிர்ஷ்டத்தை கொடுக்கும் டாகினி தென் என்ற பெண் தெய்வம் இருக்கும் இடங்களில் நரி இருக்கும். அவள் நரி வடிவில் காட்சி தருவாள். எனவே நரிமுகத்தில் விழிப்பது நன்மை தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது
புராணத்தில் வராஹி
தேவி மகாத்மியம் வராகி சும்ப விசும்பர்களை ரத்த பீஜனையும் காளி கொல்ல வந்த வந்தபோது அவர்களுக்கு உறுதுணையாக நின்றவள் என்று என்கிறது. லலிதோபாக்யானம் தேவியின் படைத்தளபதியாக வராகியைக் குறிக்கின்றது. இவள் விசுக்கிரன் என்ற அசுரனைத் தனித்து நின்று வதம் செய்தவள்.
வராகி உபாசனை
வராகி எதிரிகளின் கொழுப்பை அடக்கி அவர்களின் அறிவைக் குலைத்து பைத்தியமாக அலைய விடுபவள். எனவே இவளை உன்மத்த பைரவரின் இணையாக சேர்த்தும் இடைக்காலத்திலும் வடநாட்டிலும் நூல்களில் குறிப்பிட்டனர். வராகி வழிபாட்டை பாதியில் விட்டுவிட்டால் கை கால் விளங்காது, பைத்தியம் பிடிமக்கும் என்ற பயம் நிலவியது.
வராகி உபாசகருக்குக் குடும்பம் நிலைக்காது. ஆண் வாரிசு தங்காது. பெண் வாரிசுகள் திருமண வாழ்வில் சுகப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் முன்பு இருந்தது. வராகி உபாசனை இல்லறத்தாருக்கு உரியது அன்று. அவர்களால் இல்லறத்தில் இருந்து கொண்டு நள்ளிரவு பூஜைகள் செய்ய இயலாது என்று ஆழமாக நம்பினர்.
இந்தியச் சமயங்களில் வராகி
பௌத்த சமயத்தில் வஜ்ராயன பிரிவில் வராஹியை வழிபடுவதால் அவளை அவர்கள் வஜ்ர வராகி என்றும் மரிச்சி என்றும் அழைத்தனர். இந்து சமயத்தில் வராகியின் செல்வாக்கால் அவளது எண்ணிக்கையும்அதிகரித்தது.
ஆதி வராகி, மிருகத் வராகி, ரகுவராகி, பஞ்சமி வராகி, அஸ்வாரூட வராகி, சுத்த வராகி, தண்டனாத வராகி, தூம்ர வராகி, சொப்பன வராகி, வார்த்தாளி என்று பத்தாக வளர்த்தனர். இவற்றில் எட்டை மட்டும் எடுத்துக்கொண்டு அஷ்டவராகி என்றும் அழைப்பர். தாந்திரீக சமயத்தில் வராகியை ஐந்தாகக் கொண்டனர்.
இங்கு சோபன வராகி, கண்ட வராகி, மஹி வராகி, கிருஷ்ணா வராஹி, மச்ச வராகி என்று ஐந்து வராகி உண்டு. சமண சமயத்தில் உள்ள பத்மாவதி, சக்கரேஸ்வரி, ஜுவாலா மாலினி, கூஷ்மான்டி, வராகி, ஜீன வாணி என்று ஆறு பெண் தெய்வங்களில் வராகியும் ஒருத்தி.
வெற்றித் தேவதை வராகி
வராகி பகை அழிக்கும் சக்தி கொண்டவள் என்பதால் அவள் தேவியின் தளபதியாக தேவி மகாத்மியத்தில் இடம்பெற்றாள்.. மார்க்கண்டேய புராணம், வராக புராணம், மச்ச புராணம், தேவி புராணம் ஆகியவற்றில் வராகி பற்றிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அசுரர்களை தேவி வதம் செய்யும்போது வராகியின் குறிப்பிடத்தக்கது.
சாக்தத்தில் வராகி
வராகி வழிபாடு என்பது சாக்தத்தில் ஆண்களுக்குரிய குறிப்பாக துறவிகளுக்குரிய வழிபாடாகவே தொடக்க காலத்தில் இருந்தது. இன்றைக்குக் குடும்பஸ்தர்களும் பெண்களும் வராகியை வணங்குகின்றனர்.
சிவன் கோயிலில் வராகி வராகி
ஓர் இருட்டுக் கடவுள். எனவே காசியில் உள்ள கால ராத்திரி கோவில் பகலில் பூட்டப்பட்டு இருக்கும். இரவில் மட்டுமே இக்கோவிலைத் திறந்து வராகிக்கு வழிபாடுகளைச் செய்வர். வராகியை நள்ளிரவில் அல்லது நண்பகலில் உச்சிப் பொழுதில் வணங்கலாம்.
இவளை சப்த மாதர்களில் ஐந்தாவது தேவதையாகக் கொண்டுள்ளனர். சப்த மாதர் வழிபாடு பௌத்த சமயத்தில் பெரு வழக்காக இருந்தது. பின்பு நாட்டுப்புறச் சமய வழிபாடாக நிலைத்து விட்டது. வைதீக சமயங்களில் சைவ சமயத்தில் மட்டும் சப்த மாதர் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக சிவன் சந்நிதியின் பரிவார தேவதைகளுள் சப்த மாதர்களும் உள்ளனர். இவர்களில் வராகி ஐந்தாவது தேவதையாகவும் இடம் பெற்றுள்ளார்.
விரத நாட்கள்
வராகிக்கு உரிய திதி ஐந்தாவது திதியான பஞ்சமி திதியாகும். எனவே வராகியை வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி நாட்களில் விரதம் இருந்து வழிபடலாம். வராகியை திதிகளில் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களிலும் வளர்பிறை தேய்பிறை பஞ்சமி நாட்களிலும் கிழமைகளில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு விரதங்கள் இருந்து வழிபடலாம். வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி, நவமி, திதிகளிலும் சதுர்த்தசி (பிரதோஷ நாள்) திதி அன்றும் வராகிக்கு விரதம் இருந்து வழிபடலாம்.
அதிகரிக்கும் செல்வாக்கு
பழங்காலத்தில் வராகியை ஜோதிடர்கள், மாந்திரீகர்கள் மற்றும் வராகி உபாசகர்கள் மட்டுமே தாங்கள் குடியிருக்கும் இடங்களில் தனி அறையில் வராகி பூஜை செய்வர். தற்போது வராகியை வீட்டில் சிலையாக வைத்த பெண்கள் வழிபடுகிம் முறையும் தொடங்கிவிட்டது. வராகி கோயில்களும் தற்போது பெருகிவிட்டன.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மூகாம்பிகை கோவிலுக்குப் போய் வந்த தகவல் தெரிந்ததும் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் ஆயிரக்கணக்கில் மூகாம்பிகை கோவிலுக்குப் போய் மூகாம்பிகை பக்தர்கள் ஆகிவிட்டனர்.
பின்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரத்யங்கரா கோவில் வந்த பிறகு பிரத்யங்கரா கோவிலுக்கு செல்லும் கூட்டம் அதிகரித்தது. மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி. தற்போது வராகி உபாசனைக்கு திடீரென செல்வாக்குப் பெருகிக் கொண்டிருக்கிறது. வீட்டில் சிலை வைத்து வராகியை வழிபடுவோர் இப்போது உள்ளனர்.
அபிஷேக ஆராதனைகள்
வீட்டிலோ கோவிலிலோ வராகிக்கு முதலில் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு சிவப்பு மலர்களை அச்சிலைக்குச் சூட்டி சூட தீப ஆராதனைகள் காட்ட வேண்டும். அதன் பின்னர் இளநீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
மீண்டும் சிவப்பு மலர்களைச் சூட்டி சூட தீப ஆராதனைகள் காட்ட வேண்டும். அதன் பின்பு குங்கும அபிஷேகம் - தொடர்ந்து சூட தீப ஆராதனைகள். நிறைவாக மஞ்சள் தூள் அபிஷேகம் செய்து சிவப்பு மலர் சூட்டி சூட தீப ஆராதனை காட்டி நிறைப்பு செய்ய வெனப்பியும்.
பின்பு சிவப்பு அல்லது கரு நீல சேலை உடுத்தி அலங்காரம் செய்ய வெனப்பியும். இவ்வாறு ஐந்து அபிஷேகங்களையும் அலங்காரத்தையும் முடித்துவிட்டு மற்ற பூஜைகளைத் தொடர வேண்டும்.
வராகிக்கு உகந்த மலர்கள்
வராகி இரவுக்குரிய தேவதை என்பதால் அவளை தூமாவதி என்றும் தும்ரவராகி என்றும் அழைக்கின்றனர். வராகிக்குரிய நிறங்கள் கரு நீலமும் சிவப்பும் ஆகும். எனவே இந்த நிறங்களில் உள்ள மலர்களைக் கொண்டே வராகி பூஜை செய்ய வேண்டும். செந்தாமரை, மாதுளம் பூ, செம்பருத்தி பூ, நீலச் சங்கு புஷ்பம், நீல அல்லி மலர்கள் போன்றவை வராகி பூஜைக்கு உகந்தவை ஆகும்.
மந்திர ஜெபம்
வராகி மந்திரத்தை அனுதினமும் உச்சிப் பொழுதிலும் நள்ளிரவிலும் உச்சரித்து வராகிக்குப் பூஜை செய்ய வேண்டும். ஐயும் கிலியும் சவ்வும் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை 108 முறை ஜெபமாலை உருட்டி சொல்வது வராகி உபாசனையின் முக்கியக் கடமை ஆகும். வராகி மாலையில் உள்ள பாடல்களை கூறலாம். எடுத்துக்காட்டாக
ஐயும் கிலியும் சவ்வும் எனத் தொண்டர் போற்றும்
அரிய பச்சை
மெய்யும் கருணை வழிந்து ஓடுகின்ற
விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும்
சூலமும் கொண்டு
வையம் துதிக்க வருவாள் வராகி
என் மலர்க் கொடியே
என்ற பாடலை தினமும் உச்சிப் பொழுதிலும் நள்ளிரவிலும் 11, 21, 54, 108 முறை சொல்லலாம். நள்ளிரவில் உறங்கி விடக் கூடிய பெண்கள் அல்லது பணியாளர்கள் பகலில் உச்சிப் பொழுதில் இந்த மந்திரத்தை தங்களால் இயன்றவரை 11 முறை அல்லது 21 முறை அலுவலகத்தில் இருக்கும்போது கூட மனதுக்குள் சொல்லிக் கொள்ளலாம். வராகி காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்.
இதுவும் சரியான உச்சரிப்பில் சொல்லத் தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். ஓம் வராகியே போற்றி என்று 108 முறை ஒரு நாளைக்கு பகலிலும் இரவிலும் கூறினாலும் போதும், வராகியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வராகியைத் தமிழ் செய்யுளாகவோ சமஸ்கிருத ஸ்லோகமாகவோ சொல்லித்தான் வழிபட வேண்டும் என்பது கிடையாது என்று ஓம் வராகியே போற்றி என்று எளிய தமிழில் கூறினாலும் வராகி அருள் பாலிப்பாள்
விரதம் இருக்கும் முறை
வராகி உபாசகர்கள் வராகியை தனது வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்ற முடிவு செய்துவிட்டால் எதற்கும் ஆசைப்படுவதை நிறுத்தி விட வேண்டும். ஆசாபாசங்களுக்கு இடம் அளிக்க கூடாது. மனைவி மக்கள் சுகமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு சொத்து சுகம் சேர்க்கவேண்டும்.. தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட கூடாது. அவள் தருவதை அகம் குளிர பெற்றுக்கொள்ள வேண்டும். வராகி கேட்டதைக் கொடுப்பவள் அல்ல. நமக்கு உரியதைக் கொடுப்பவள்.
செய்யலாம், செய்யக் கூடாது
வராகி விரதம் இருக்கும் வெள்ளி, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி மற்றும் பஞ்சமி திதிகளில் பால், பழம், உப்பில்லாத சோறு, அவல், பொரி போன்ற எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது. பாய் விரித்துப் படுக்கக் கூடாது. சவரம் செய்வதோ தலைமுடி வெட்டுவதோ கூடாது. காலில் செருப்பு அணியக்கூடாது.
தலைக்குக் குடை பிடிக்கக் கூடாது. மது, மாது, மச்சம், மைதுனம் போன்றவற்றை விட்டு விட வேண்டும். தாம்பத்தியம் அறவே கூடாது. வராகி பெண் தான். ஆனால் வழிபாட்டில் இருப்போருக்கு பெண் வாடையே கூடாது. அசைவ உணவு கூடாது. போதைப் பொருட்கள் உட்கொள்ளக் கூடாது. இத்தகைய கடுமையான விரதங்களை இருக்கக்கூடியவர்கள் வராகி உபாசகர்களாக இருக்கலாம்.
விரதகாலம்
வராகிக்கு விரதம் இருப்பவர்கள் வளர்பிறைப் பஞ்சமியிலிருந்து தொடங்கித் தேய்பிறைப் பஞ்சமி வரை 15 நாட்கள் விரதம் இருக்கலாம். ஒரு வளர்பிறை பஞ்சமிலிருந்து மறு வளர்பிறை பஞ்சமி வரை முப்பது நாட்கள் இத்தகைய கடும் விரதம் இருக்கலாம்.
விதிவிலக்கு
வராகி விரத காலத்தில் காலில் செருப்பு அணிவதும் சவரம் செய்யாமல் இருப்பதும் பின்பற்ற இயலாது என்பவர்கள் தங்கள் தொழிலுக்குரிய கடமைகளை முதற்கண் செய்துவிட்டு பின்பு உணவிலும் படுக்கையிலும் போகம், போதை இவற்றைத் தவிர்ப்பதிலுமாக தங்கள் விரதத்தை மேற்கொள்ளலாம்.
தினமும் மூன்றெழுத்து மந்திரத்தை நண்பகலில் 108 முறை உச்சரிக்கலாம். நள்ளிரவில் இம் மந்திரத்தைச் சொல்லிவிட்டு உறங்கப் போகலாம். சிறிது நேரம் உறங்கி எழுந்து சொல்லக்கூடாது. மந்திரத்தைச் சொல்லிய பின்பு உறங்கப் போகலாம்.
வராகி பூஜையும் அன்னதானமும் வராகி பூஜை செய்பவர்கள் வராகியின் பரிபூரண அருளைப் பெற அன்னதானம் செய்வது அவசியமாகும். அன்னதானம் என்பது அன்னத்திற்கான தேவை இருப்பவர்களுக்குச் செய்வதே சிறந்த தானமாக அமையும். யாருக்கு உணவு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
வராகி பூஜை செய்யும்போது சித்ரான்னங்களில் மூன்று அன்னங்களையும் பழங்களில் இரண்டு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் வைத்து வழிபட்டு அந்த உணவை குறைந்தது மூன்று பேருக்கு அன்னதானமாக வழங்க வேண்டும்.
மாதுளம் பழம் அல்லது சிவப்பு ஆப்பிள் பழங்களை வைத்து வழிபட்டு அவற்றைப் பெண் குழந்தைகளுக்கு அல்லது இளம்பெண்களுக்கு கொடுக்கலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் மும்மூன்று பழங்கள் வீதம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது மனதுக்குள் ஓம் ஐயம் கிலியும் சவ்வும் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்த படி பழங்களைத் தானமாக அளிக்கலாம்.
விரதத்தின் பலன்
முற்காலங்களில் வராகி உபாசனை செய்தவர்கள் பெரும்பாலும் தாந்திரீகர்களாக இருந்தனர். அவர்கள் பலனை எதிர்பார்த்துச் செய்வதில்லை. வராகி உபாசனை இவர்களைத் தீய சக்திகளிடமிருந்து காத்தது.
தஞ்சம் உன் பாதம் சரணாகதி எனவே
வந்தவர் மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியங்கள்
வைத்த பேரை
நெஞ்சம் பிளந்து நினக்குடல் வாங்கி
நெருப்பினில் இட்டு
அஞ்சக் கரம் கொண்டு அறுப்பாய
திரிபுரத்து ஆனந்தியே
என்ற வராகி மாலைப் பாடலைப் பில்லி, சூனியத்துக்கு அஞ்சுகின்றவர்கள் தினமும் சொல்லி வரலாம்.
வழக்குகளில் வெற்றி
வராகி வெற்றித் தேவதை என்பதால் வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் சதிகாரர்களின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்து நீதிமான்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவாள். பொய் வழக்குகளில் சிக்கிக் கொண்டவர்கள் வராஹியை நினைத்து வணங்குவது அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க உதவும்.
நல்லவன் வாழ்வான் கெட்டவன் அழிவான் என்பது உலக நியதி, தர்ம நியதி. அவன் அதிக சோதனைகளுக்கு உட்படாமல் விரைவில் அவனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் அதற்கு வராகியை வணங்குவது விரைவாக நீதி கிடைக்க உதவும்.
சொத்து பிரச்னை
பங்காளிகளுடன் சொத்து பிரச்சனை இருப்பவர்கள் நீதி கேட்டு வழக்கு மன்றம் செல்லத் தேவையில்லை. வராகியை வணங்கினால் போதும். பங்காளிப் பிரசனைகள் விரைவில் தீரும்.
தொழில் போட்டி
தொழில் துறையில் இருப்பவருக்குப் போட்டியாளர்களின் சதித்திட்டங்களை முறியடிக்க வராகியை வணங்கலாம். அலுவலகப் பணியாளர்களுக்கு சக பணியாளர்களால் ஏற்படும் சூழ்ச்சி மற்றும் பொறாமை காரணமான துன்பங்களை முறியடிக்க வராகி பூஜை உதவும்.
பொதுப் பலன்
அநீதியிலிருந்து நம்மைக் காப்பாற்றி நீதியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க வராகி என்றைக்கும் உறுதுணையாக இருப்பாள். அவளை வணங்கினாலும் வணங்காவிட்டாலும் வராகி நீதியின் பால் நிற்பவள் என்பதில் ஐயமில்லை.
வராகி வழிபாடும் விரதமும் அவளை வணங்குகின்றவருக்கு நிம்மதியைத் தரும். தேவியின் அருள் தன்னோடு இருப்பதாக நம்பும்போது மன அழுத்தம், மனக் கவலை வராது.
வராகி தேவியின் கைபிடித்து நடக்கின்றோம் என்ற எண்ணம் வாழ்க்கையில் மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்பதால் வராகி பூஜை செய்து வருவது நலம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |