வராகியின் வரலாறும் வழிபாடும்
ஐயும் கிலியும் சவ்வும் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை கொண்ட வராகி ஐந்திணைகளில் மருத நிலத்தின் கடவுள் ஆவார். ஆற்றங்கரை நாகரிகத்தின் அதி தேவதை.
அவள் ஏருக்கும் போருக்கும் உடையவள். வராகத்தின் முகத்தில் உள்ள ஒற்றைக்கொம்பு ஏர்க் கலப்பையின் முன்னோடி ஆகும். ஆதி வராகியின் கையில் ஏர்க்கலப்பையும் நெல் குத்தும் உலக்கையும் இருக்கும். வராகியின் செல்வாக்கு உயர உயர ஆயுதங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
தேவியின் தளபதி வராகி
தேவி மகாத்மியம் காளி சும்பர் நிசும்பர்களையும் ரத்த பீஜனையும் வதம் செய்தபோது அவளுக்குத் துணையாய் நின்ற போர் தளபதி வராகி என்று போற்றுகிறது. அவளை தேவியின் படைத்தளபதியாகவே லலிதோபாக்யானமும் எடுத்துரைக்கிறது. விசுக்கிரன் என்ற அசுரனை வராகி தனித்து நின்று வதம் செய்ததாக புராணம் கூறுகின்றது.
வராகி வதம் செய்யும் முறை
எதிரிகளின் கொழுப்பை அடக்கி அவர்களின் அறிவைக் குலைத்து பைத்தியமாக அலைய விடுவாள் என்பதால் மன்னர்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் பகையை ஒழிக்க இவளுக்குப் பூசைகள் செய்வது கிடையாது. பகைவர் ஒருவேளை நல்லவர்களாக இருந்தால் அவர்கள் அழிய வேண்டும் என்ற பூசை செய்தவர்கள் அரைப் பைத்தியங்களாகி விடுவர்.
பொதுமக்கள், குறிப்பாக குடும்பஸ்தர்கள் வராகியை வணங்குவதில்லை. இவர்களின் வழிபாட்டில் பிழை நேர்ந்தால் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள். பைத்தியம் பிடித்துவிடும். பிள்ளைகளின் வாழ்வு சரிப்படாது. மக்களை எச்சரிக்கவே இவளுக்கு இணையாக உன்மத்த பைரவரை சேர்த்தனர்.
தண்டநாயகி
பிற்காலத்தில் வராகி கையில் மாட்டு வாலையும் காண்டாமணியையும் ஆயுதங்களாகச் சேர்த்தனர். மாட்டு வால் தண்டனை கொடுப்பதற்குரிய குதிரைச் சவுக்கு போன்றது. தண்டனை அளிப்பவள் என்பதால் இவளைத் கண்டநாயகி என்று தேவி மகாத்மியம் அழைக்கின்றது.
காண்டாமணி காலத்தின் எல்லையை குறிக்கின்றது. இதனால் இவளை எமனுக்கு இணையாக யமி என்றும் அழைக்கின்றனர். வராகி வழிபாட்டின் செல்வாக்கு உயர உயர அவள் கையில் இருக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கையும் அவளுடைய அதிகாரத்தை வெற்றியையும் குறிப்பதற்கு வகையில் உயர்ந்து கொண்டே போயிற்று.
16 கைகள் உடையவளாக அனைத்து ஆயுதங்களையும் கொண்டவளாகவும் பிற்காலத்தில் வராகியை உருவப்படுத்தி வணங்கி வந்தனர். வராகியின் வரலாறு தமிழகத்தில் வராகிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு.
'காடு கொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி' காடு மேடாக இருந்த நிலத்தைப் பண்படுத்தி விளைநிலமாக மாற்றி அறுவடை பெற்ற காலத்தில் அந்த அறுவடை தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே பயன்பட வேண்டும் என்ற காரணத்தினால் ஆண்கள் தனக்கு மட்டுமே குழந்தைகளைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு பெண்ணை தன் வாழ்க்கைத் துணையாக்கி அவளுக்கு மனைவி என்றும் ஓர் தகுதியை வழங்கினர்.
இவளை 'புதல்வன் தாய்' என்று சங்க இலக்கியம் அழைக்கின்றது. ஒரு கணவனுக்கு மனைவியாக இருப்பவள் மட்டுமே புதல்வர்களைப் பெற வேண்டும். அக்காலத்தில் (கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை) அவனுக்கு ஆசை நாயகி ஆக இருக்கும் பெண்கள் பிள்ளை பெற்று தரும் உரிமை அற்றவர்கள்.
இவ்வாறு ஒருவன் ஒருத்தி அவனுடைய அவர்களின் பிள்ளைகள் என்பது ஒரு குடும்பம் என்று ஆகியது. பல குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உருவாகியது. இச்சமூகத்தின் தலைவனாக ஆதியில் ஊர் குடும்பன் இருந்தான். பின்னர் குறுநில மன்னன் உருவானான். அதன் பின்னர் பெருநிலவேந்தன் வந்தான்.
இவர்களின் நெல் வயல்கள் அறுவடைக்குப் பின்பு வெற்றிடங்களாக இருந்த வேளையில் அவை போர்க்களங்களாக மாற்றப்பட்டன. சங்க இலக்கியம் கூறும் வென்னி பறந்தலை வாகைப்பறந்தலை என்பன போர்க்களங்களின் பெயர்களாகும்.
பெரிய கோயிலில் வராகி
பெருநிலவேந்தர்கள் நில வேட்கையின் காரணமாக அல்லது மண்ணாசையின் காரணமாக பெரும் போர்களை நிகழ்த்தி தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்தினர். ராஜராஜசோழன் போன்ற பெரு வேந்தர்கள் போருக்குப் போகும்போது வராகியை வழிபட்டனர்.
மருத நில மன்னர்கள் பெருவேந்தர்களாக உருவானபோது அவர்கள் தங்களுக்கென்று வராகியைப் போர்த் தெய்வமாக வழிபட்டு சென்றனர். ராஜராஜ கட்டிய பெரிய கோவிலில் வராகிக்கு என்று தனி சந்நிதி உண்டு. இவர்கள் போரில் வெற்றி பெற்றுத் திரும்பும் போது தங்கள் பகைவர்களின் நிலங்களில் கழுதையால் உழுது வெள்ளை எள் விதைத்து அதனை இனி எதுவும் விளையாத பாழ் நிலங்களாக மாற்றி விடுவர்.
இதனால் அங்கு மக்கள் குடியிருக்க இயலாது. அவர்கள் நாடோடிகளாக புலம்பெயர்ந்து விடுவார்கள். ஆக வராகி வழங்கும் வெற்றி பகைவனை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிடும். வராகி எப்போதும் உச்ச பட்ச வெற்றியைக் கொடுப்பாள்.
பல சமயங்களில் வராகி வராகி வெற்றியை நாடி நிற்கும் அனைத்து மனிதருக்கும் சொந்தம் உள்ள தேவியாவாள். எனவே இவளை சமணர், பௌத்தர், தாந்த்ரீகர், சைவர், வைணவர் என அனைவரும் தத்தமக்கு உரியவளாகக் கொண்டு போற்றி வணங்கி வந்தனர்.
சமணத்தில் பத்மாவதி, சக்கரேஸ்வரி, ஜுவாலா மாலினி, கூஷ்மாண்டி, ஜீனவாணி ஆகியவர்களோடு சேர்த்து வராகியையும் வழிபட்டனர். பௌத்த சமயத்தில் வராகியை வஜ்ரவராகி என்று அழைப்பார்கள். வஜ்ராயன பௌத்தர்கள் பெண் தெய்வ வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இவர்கள் வஜ்ரவராகி என்று வராகிக்கு தனிச் சிறப்பு அளித்தனர். மறிச்சி என்றும் அழைப்பார்கள். இந்து சமயத்தில் வராகி வராகி வழிபாட்டின் மேன்மையையும் வராகி வழிபாட்டின் சிறப்புகளையும் வராகி எண்ணிக்கையின் உயர்வைக் கொண்டே உறுதி செய்யலாம். ஆரம்பத்தில் ஒருத்தியாக இருந்தவள் பின்பு ஐந்தாகி எட்டாகி 10 ஆக உயர்ந்தாள்.
இந்து சமயம் வராகியை ஆதிவராகி, பிரகத் வராஹி, இலகுவராகி, பஞ்சமி வராகி, அஸ்வாரூடா வராகி, சுத்தவராகி, தண்டனாத வராகி ,தும்ர வராகி, ஸ்வப்ன வராகி, வார்த்தாலி என்று பத்தாக வளர்த்துள்ளது. தாந்த்ரீகத்தில் வராகி தாந்திரீக சமயம் என்பது பெண் தெய்வ வழிபாட்டை மட்டுமே கொண்டுள்ளது. இச்சமயப்பிரிவில் ஆண் தெய்வ வழிபாடுகள் காணப்படவில்லை.
தாந்திரீக சமயத்தினர் வராஹியை சோபனவராகி கண்டவராகி, மஹிவராகி, கிருசா வராகி, மச்ச வராகி, என்று ஐந்தாக வளர்ந்து வணங்கி வந்தனர்.
சைவ சமய வராகி
சைவ சமயத்தில் வராகி சப்த கன்னியோடு சேர்க்கப்பட்டு ஐந்தாமவளாக சிவன் கோவிலின் பிரகாரத்தில்இடம் பெற்றாள்.
தற்போது வராகிக்குத் தனி கோவில்கள் தோற்றுவிக்கப்பட்டு வழிபாடுகள் பஞ்சமி அன்று நடைபெற்று வருகின்றன. முற்காலத்தில் வராகியை பொதுமக்கள் வழிபடவில்லை மன்னர்கள் மட்டும் போருக்கு செல்லும்போது வழிபட்டனர். மற்றவர்கள் தாந்த்ரீக கற்றவர்கள் ஜோதிடர், மாந்திரீகர், சக்தி உபாசகர் போன்றோர் வராகி வழிபாட்டைச் செய்தனர்.
வராகி மாலை போன்ற நூல்கள் வராகி தெய்வத்திற்குரிய பாடல்களை யந்திர மந்திர தந்திரங்களுடன் அளிக்கின்றது. இவர்கள் தஞ்சமுன் பாதம் சரணாகதி எனவே சார்ந்தவர் மேல்/ வஞ்சனை பில்லி கொடிது ஏவல் சூனியங்கள் வைத்த பேரை/ நெஞ்சம் பிளந்து நினக் குடல் வாங்கி நெருப்பினில் இட்டு/ அஞ்சக் கரம் கொண்டு அறுப்பாலள் திரிபுரத்து ஆனந்தியே/ யாராகிலும் நமக்கு வினை செய்யின் அவருடலம்/ கூராகும் வாளுக்கிரையிடுவாள் கொன்றை வேணியரின்/ சீரார் மகுடத் தடியினைப் போக்கும் திரிபுரையாள்/ வராகி வந்து குடியிருந்தாள் எம்மை வாழ்விக்கவே/ போன்ற பாடல்களைப் பாடி வராகி உபாசனை செய்து வந்துள்ளனர்.
வராகிக்கு உரியவை
மருத நிலத்தின் தெய்வங்களான் இந்திரனும் வராகியும் உடலில் எலும்புக்கு உரியவர்கள். இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம் எலும்புகளிலேயே வலுவான நேரே நிமிர்ந்திருக்கும் முதுகெலும்பு ஆகும். வஜ்ராயுதத்தை ததிசி முனிவரின் முதுகெலும்பு என்று புராணங்கள் சொல்கின்றன. அதுபோல வராகிக்கும் உரியது எலும்பு.
வராகி வழிபாட்டின் நன்மைகள்
வராகி வழிபாடு பஞ்ச மகரங்களுடன் நடைபெற வேண்டும். மது, மாமிசம், மச்சம், மைதுனம், முத்ரா (தானியம்) ஆகிய அனைத்தும் இவளுடைய வழிபாட்டில் இருக்க வேண்டும். கங்கை கரையில் உள்ள காலராத்திரி கோவிலில் வராகி சந்நிதியில் இரவில் எப்போதும் இவ் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இக்கோவிலைப் பகலில் பூட்டி வைத்திருப்பார்கள். இரவில் மட்டுமே திறந்து வைத்து வழிபடுவார்கள். வராகி எலும்புக்கு உரியவள் ஆதலால் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள், எலும்புப் புற்று நோய் உள்ளவர்கள், வராகி உபாசனை செய்வது நோயிலிருந்து விடுபட உதவும்.
வராகிக்குரிய ருசி இனிப்பு ஆகும். இதனால் சக்கர நோய் உள்ளவர்களுக்கும் வராகி வழிபாடு நல்ல சுகத்தை அளிக்கும். இவள் ஈரத்தை குறிப்பவள். மூலிகைகளில் சிறு குறிஞ்சான் மற்றும் சிற்றரத்தைக்கு உரியவள். கபம், ஆஸ்துமா, ஈஸ்னோபிலிஸ், சைனஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வராகி வழிபாடு செய்வஸ்து சிறந்த பலனைத் தரும்.
இவளை பஞ்சமி நாட்களில் உச்சி வேளையிலும் நள்ளிரவு 12 மணிக்கு சிவப்பு நிற மலர்களை வைத்து வழிபாடு செய்தய வேண்டும். வராகி வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் மனநோய் மன அழுத்தம் விலகும் . தமிழகத்தில் புகழ்பெற்ற வராகி கோவில்கள் தமிழகத்தின் மிகப் பழைய வராகி கோவிலாக 3500 ஆண்டுகளுக்கு முந்தியது என்று அப்பகுதி மக்கள் சொல்கின்ற கோவிலாக இருப்பது ராமநாதபுரம், உத்திரகோசமங்கைக்கு அருகில் உள்ள பழைய கோவிலாகும்.
ஏனென்றால் இங்கு சிவன் விஷ்ணு சிலைகள் எதுவும் கிடையாது. காளி, பைரவர், மற்றும் நாட்டுப்புற சாமி ராக்கச்சி போன்ற தெய்வங்கள் மட்டுமே இங்குக் காணப்படுகின்றன. எனவே இது பழைய கோவிலாக இருக்க வாய்ப்பு உண்டு. கி.பி. முதலாம் முற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டுக்குள் தோன்றிய கோவிலாக இருக்கலாம்.
அடுத்து விழுப்புரம் அருகே சாலா மேடு என்ற ஊரில் அஷ்ட வராகிக்கு கோவில் உண்டு. அங்கு வசிப்பவர்களும் இதுவே பழைய கோவில் என்று கூறுகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே பல்லூர் என்ற கிராமத்தில் உள்ள அரசாலை அம்மன் கோவில் வராஹிக்குரிய கோவிலாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் வராகிக்கு சகஸ்ரநாமத்தில் அரசாலை என்ற பெயர் வழங்கப்படுகிறது. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கின்றனர். திருச்சிக்கு அருகில் உள்ள திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்டேஸ்வரி வராகியின் அம்சமாக கருதப்படுகின்றாள்.
நாகப்பட்டினம் அருகே வழுவூர் வீரட்டானேச்வரர் கோவிலுக்கு முன்பு வராஹி அம்மனுக்கு தனிக் கோயில் இருந்ததாக மக்கள் கூறுகின்றனர்.
வராகியின் வாகனங்கள்
சைவ சமயத்தவர் வராகியை வணங்கும்போது அவளுக்கு வாகனமாக புலியை வைக்கின்றனர்.
வைஷ்ணவர்கள் சேஷ வாகனத்தை வழங்கினர். துணை ஆளாக கருடனும் உண்டு. பௌத்த சமயத்தினர் பதுமம் என்ற பத்மாசனத்தில் அவளை நிறுத்தி வணங்கினர். சாத்தம் எனப்படும் சக்தி வழிபாட்டில் இவள் இருட்டின் அம்சமாக நள்ளிரவு பூஜைக்குரியவள் ஆகிறாள்.
இரவு தேவதையாக இவளைக் கொள்வதால் தூமாவதி துருமவராகி என்று இருட்டின் பெயரால் இவளை அழைத்தனர். மரணத்தின் மூலம் முக்தி வழங்குவதால் கைவல்ய ரூபினி என்றும் அழைக்கப்பட்டாள்.
புராணமும் வழிபாடும் வராகியைப் பற்றி மார்க்கண்டேய புராணம், வராக புராணம், மச்ச புராணம், தேவி புராணம் ஆகியவற்றில் கதைகள் உள்ளன. இவை சப்த மாதரில் ஐந்தாவதாக இருக்கின்றாள். உடல் பகுதியில் தொப்புளாகவும் அறுவகைச் சக்கரத்தில் மணிபூரமாகவும் விளங்குகின்றாள்.
மறக்கப்பட்ட வராகி
மன்னர்கள் இடையே போர்கள் பெருகிய ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் வராகிக்கு என்று தனிக் கோவில்கள் தோன்றின. குறிப்பாக பௌத்த சமயம் செழித்திருந்த திருச்சி, தஞ்சை மற்றும் வட மாவட்டங்களில் வராகிக்கு தனிக் கோவில்கள் கட்டப்பட்டன.
பௌத்தர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்பு சைவ வைணவ சமயத்தினர் வராகியைப் பெரிய அளவில் கொண்டாடி தனித் தெய்வமாக வழிபாடுகள் செய்யவில்லை என்றாலும் அவளை விட்டு விடவில்லை. தமது சமயப் பிரிவிலும் வராகியை ஏற்றுக்கொண்டு இன்று வரை சப்தகன்னியரில் ஒருத்தியாகப் போற்றி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரத்யங்கரா தேவிக்கு இருந்த செல்வாக்கு தற்போது மறைந்து விட்டது. தற்போது வராகி வழிபாட்டில் மிகப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மனித குல மேம்பாட்டில் நில உடமைத்துவத்துவமும் வேளாண்மையும் ஒரு மைல் கல்லாகும்.
அதன் பிறகே குடும்பம், சொத்து, நாடு, நகர், ஆட்சி, அதிகாரம் ஆகியவை தோன்றின. இவற்றிற்கு காரணமாக விளங்கும் ஏர் கலப்பைக்கும் போர்க்களத்திற்கும் தெய்வமாக விளங்கும் வராகியின் வரலாறும் வழிபாடும் மனித குல வரலாற்றில் வெற்றி என்னும் இலக்குக்குரிய ஆவணப் பதிவு ஆகும்.
- முனைவர் திருமதி செ. இராஜேஸ்வரி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |