ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் நாம் தரிசிக்க தவறிய முக்கியமான கோயில்கள்
திருவண்ணாமலை என்றாலே அப்பன் அருணாச்சலேஸ்வரர் தான் எல்லோருக்கும் நினைவிற்கு வருவார்.மகா தீபம் கிரிவலம் என்று விஷேச நிகழ்ச்சிகள் நடைபெறும் அற்புத ஆன்மீக பூமியாகும்.
மேலும் இன்றளவும் திருவண்ணாமலையில் பல சித்தர்கள் உலாவருவதை பக்தர்கள் பார்த்ததாக தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் மட்டும் அல்லாமல் அக்கோயிலுக்கு இணையாக பல சக்தி வாய்ந்த கோயில்கள் இருக்கிறது.
நம்மில் பலருக்கும் அக்கோயில்களின் சிறப்புக்கள் பற்றி தெரிவதில்லை.வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல பக்தர்கள் வருகை இந்த புண்ணிய பூமியான திருவண்ணாமலையில் இருக்கும் சிறப்பு வாய்ந்த கோயில்களையும் அதனுடைய வரலாறுகளையும் பற்றி தெரிந்து கொள்வோம்.
1.அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்
நினைத்தாலே முக்தி கிடைக்கும் பூமி திருவண்ணாமலை.அதாவது கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு.ஆனால் இங்கு லிங்கமே மலையாக இருப்பது திருவண்ணாமலைக்கு சிறப்பு.திருவண்ணாமலையின் சிறப்பே இந்த மலைதான்.
மேலும் மலையை சுற்றி கிரிவலம் செல்வது என்பது இங்குள்ள சிறப்பு.பல இடங்களில் இருந்து இந்த புண்ணிய பூமியில் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
மேலும் இந்த மலையையே சிவலிங்கமாக கருதி பல முனிவர்கள் ஞானிகள் வழிபாடு செய்திருப்பது சிறப்புமிக்கது.
இத்திருக்கோயிலில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களால், இத்திருக்கோயில் முற்கால சோழ அரசர்கள் காலத்தில் (கி.பி. 9-ம் நூற்றாண்டு) கட்டப்பட்டு, பிற்கால சோழர்கள் ஹோய்சள (போசள) அரசர்கள், விஜய நகர நாயக்க அரசர்கள் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு, மூலவர் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கற்தூண் வரிசை வைத்து கட்டப்பட்ட பிரகாரம், மற்றும் அம்மன் சன்னதி உள்ளிட்ட பல தெய்வங்களின் உப சன்னதிகள், 9 கோபுரங்கள், 5 பிரகாரங்கள், பல மண்டபங்கள், திருக்குளங்கள் ஆகியவற்றுடன் மிக பிரமாண்டமான கட்டிட அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது.
அதாவது வாழ்க்கையில் துன்பம்,ஆன்மீக புரிதல் ஏற்படவேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் திருவண்ணாமலைக்கு வருகை தர அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைப்பதோடு முக்தி கிடைக்கும்.
வழிபாட்டு நேரம்
காலை 5.30 மணி முதல் 12.30 வரை இரவு3.30 முதல் 8.30 மணி வரை
இடம்
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம். -606 601.
2.அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்,திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மிக முக்கியமான கோயில்கள் பட்டியலில் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று.இக்கோயில் தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 6 வது ஆலயம்.அதாவது ஒருமுறை எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது.
தன் பணியை சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
சிவபெருமானின் ஆணைக்கு இணங்க முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார்.மேலும் இக்கோயிலின் இறைவி இறைவி கைகளில் வளையல் அணிந்து, மகிழ்ந்த முகத்துடன் காட்சி தருவது சிறப்பு.
திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இவளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர்.
வழிபாட்டு நேரம்
காலை 7.00 – 9.00 மற்றும் மாலை 5.00 – 7.00
இடம்
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில், குரங்கணில்முட்டம், தூசி அஞ்சல், செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் – 631703.
3.அருள்மிகு பாண்டுரங்கன் கோயில், தென்னாங்கூர்
திருவண்ணாமலையில் பெருமாள் கோயிலில் மிக முக்கியமான கோயில் இது.இத்தலத்தில் பெருமாள் பாண்டுரங்கன் என்ற திருநாமத்தோடு நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். இவரது சிலை 12 அடி உயர சாளகிராமதினால் ஆனதாகும்.
இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் கோயிலைப் போலவே கட்டப்பட்டுள்ளது.
120 அடி உயரத்தில் கோபுரமும் ஒன்பதரை அடி உயரத்தில் தங்க கலசமும், அதன் மேல் சுதர்சன சக் கரமும், காவிக்கொடியும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
பாண்டுரங்கன் இத்தலத்தில் ஞாயிற்றுகிழமையில் மதுராபுரி ஆளும் மன்னன் அலங்காரத்திலும், வியாழக்கிழமையில் பாண்டுரங்க அலங்காரத்திலும், வெள்ளியன்று வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சனிக்கிழமை திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் அருள்புரிவது சிறப்பாகும்.
வட மாநிலங்களில் மட்டுமே காணப்படும் தமால மரம் இத்தலத்தின் விருட்சமாக இருப்பது மிகவும் சிறப்பாகும்.
வழிபாட்டு நேரம்
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 7.00
இடம்
அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவண்ணாமலை மாவட்டம். – 604410.
4.அருள்மிகு யோகராமர் திருக்கோயில், படவேடு
திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமர் கோயிலில் இது.இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்து யோக நிலையில் காட்சி தருகிறார்.
இது போன்ற அமைப்பை காண்பது அரிதாகும். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கிறார்.
ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், இவர் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் இல்லை.
வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார்.
இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோயில் இது. இவர் உலகின் நிரந்தரமான மெய்ஞான நிலையை உணர்த்தும் கோலத்தில் இருப்பவர் என்பதால், நிலையான இன்பமான மோட்சம் கிடைக்க மட்டுமே இவரை வழிபடுகிறார்கள்.
இதனால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.
வழிபாட்டுநேரம்
காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாலை 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை
இடம்
அருள்மிகு யோகராமர் திருக்கோயில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம் – 606905
5.அருள்மிகு கைலாசநாதர் கோயில், நார்த்தம்பூண்டி
இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றி இருக்கிறார்.ஒரு சமயம் அம்மன் வழைபந்தல் என்னும் இடத்தில் சிவனின் சரிபாதி வேண்டி சிவலிங்கம் செய்து வழிபட எண்ணினாள். மண்ணால் ஆன சிவலிங்கம் செய்ய தண்ணீர் தேவைப்பட்டது.
எனவே முருகனை வரவழைத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும்படி சொன்னாள். முருகன் தனது வேலாயுதத்தை மேல் திசைநோக்கி வீசினார். அங்கிருந்த மலைகுன்றுகளை பிளந்த வேல் செந்நீரை கொண்டு வந்தது.
அப்போது வேல் பட்டு மலையில் தவம் செய்துகொண்டிருந்த ஏழு முனிவர்கள் மாண்டனர். ஏழு பேரை கொன்ற பாவம் முருகனை பிடிக்க இந்த பாவம் தீர அம்பாளின் அறிவுரைப்படி முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் ஏழு கோயில்களையும், தென்கரையில் ஏழு கோயில்களையும் உருவாக்கினார்.
காஞ்சிபுரம், கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகியவை வடகரையில் உள்ள சப்த கரை கண்டங்கள் என அழைக்கப்பட்டன.
தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு, நார்த்தம்பூண்டி, தென்பன்றிப்பட்டு, பழங்கோவில், கரப்பூண்டி, மண்டகுளத்தூர் ஆகியவை தென்கரையில் உள்ள சப்த கைலாயங்கள் எனப்பட்டன.
சப்த கைலாயங்களில் மூன்றாவதாக திகழ்வது நாரதர் பூஜித்த நார்த்தம் பூண்டி சிவன் கோயிலாகும். கந்தபுராண வரலாற்றில் இந்த தலம் பற்றி கூறப்பட்டுள்ளது.
வழிபாட்டு நேரம்
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
இடம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நார்த்தம்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |