கோவில் நகரமாம் மதுரையின் முக்கிய ஸ்தலங்கள் ஓர் பார்வை
தமிழகத்தின் கலாச்சார தலைநகராக போற்றப்படும் மதுரை மிக பழமை வாய்ந்ததும் புனிதமான நகரங்களில் ஒன்றாகும்.
தாமரை வடிவத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டதால் தாமரை நகரம் என்றும், ஸ்தலங்கள் அதிகம் என்பதால் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
பண்டைய காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய மதுரையில் அதன் சான்றுகளை எடுத்துரைக்கும் கட்டிடங்கள், பண்டைய கால சின்னங்கள் என முத்தமிழை வளர்த்தெடுத்து தமிழர்களின் பெருமையை பறைசாற்றுகிறது மதுரை.
இவ்வாறாக பாரம்பரியத்தை போற்றும் மதுரையில் அமையப்பெற்றுள்ள மிக முக்கியமான கோவில்கள் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
மதுரை என்றதுமே சட்டென நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் தான், இந்தியாவின் மிகப்பெரிய ஸ்தலங்களில் ஒன்றானதும், மிகப்பழமை வாய்ந்ததும் ஆகும், இக்கோவிலை மையமாக வைத்தே மதுரை நகரம் உருவானது.
கி.பி 1623- 1655ம் ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் மொத்தப்பரப்பு 65000 சதுரமீட்டர் ஆகும்.
இக்கோவிலை சுற்றி நான்கு வாயில்கள் உள்ளன, வண்ணமயமான சிற்பங்கள், ஆயிரங்கால் மண்டபம் என கலைநயமிக்க படைப்புகளால் இன்றளவும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
சிவபெருமான் சுந்தரேஸ்வரராக மீனாட்சி(பார்வதி தேவியை) வாழ்க்கை துணையாக ஏற்று மகிழ்ந்தார், இதன் தனிச்சிறப்பே சுந்தரேஸ்வரரையும், மீனாட்சியையும் ஒன்றாக வழிபடலாம் என்பதுவே.
வழிபாட்டு நேரம்- 5 AM - 12-30 PM, 4 PM - 9:30 PM
அருள்மிகு கூடலழகர் திருக்கோவில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான கூடலழகர் திருக்கோவில் திராவிட கட்டிடக்கலைநயத்தின்படி பாண்டியர்களால் கட்டப்பட்டது.
”பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என திருப்பல்லாண்டு இயற்றப்பட்ட ஸ்தலமும் இதுவே.
மதுரையின் மற்றொரு பெயர் ”கூடல்”, அழகர் என்றால் ”அழகான” விஷ்ணு பெருமானை குறிப்பிடும்படியாக கூடலழகர் என பெயர் பெற்றது.
கிருதயுகத்திலேயே இத்தலம் அமையப்பெற்று, நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குவதால் ”யுகம் கண்ட பெருமாள்” என போற்றப்படுகிறார்.
வைணவ சமய கோவிலாக இருந்தாலும், இங்கு நவகிரகங்களின் சன்னதி உள்ளது, மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
வழிபாட்டு நேரம்- 5:30 AM - 12 PM, 4 PM - 9 PM
அருள்மிகு கள்ளழகர் கோவில்
மதுரையிலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
இக்கோவிலில் மட்டும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார், மூவலர் தெய்வ பிரதிஷ்டை அணையாக விளக்கு எரிந்து கொண்டே இருக்கும்.
சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என பஞ்சாயுதத்துடன் நின்ற கோலத்தில் பெருமாள் அருள்புரிகிறார்.
வைணவம், சைவம் என பேதமில்லாமல் இங்கு ஆராதனைகள் நடைபெறும் என்பது கூடுதல் சிறப்பு இம்மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ உயரத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை முருகன் கோவில் உள்ளது.
வழிபாட்டு நேரம்- 6 AM to 12:30 PM and 4 PM to 8 PM
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
மதுரையின் தென்மேற்கே சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ளது சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்.
(திரு + பரம் + குன்றம்)பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான், குன்றம் என்றால் குன்று மற்றும் அதன் சிறப்பை உணர்த்தும் விதமாக திரு அடைமொழியாக சேர்க்கப்பட்டு திருப்பரங்குன்றம் என ஆயிற்று.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் இத்தலத்தில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார், இங்கு முருகனின் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
மலையை குடைந்து கருவறை அமைக்கப்பட்டுள்ளது, சுப்பிரமணியசுவாமி, துர்காதேவி, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் என ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன, பஞ்சதெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியே அருள்புரிவதை இங்கு மட்டுமே காணலாம்.
மற்றொரு அற்புதமாக வெள்ளை நிறை மயில்களை இங்கு காணலாம், சுவாமியை தரிசிப்பதற்காக தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிய நிற மயில் வடிவில் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வழிபாட்டு நேரம்- 5 AM - 11:30 AM, 4 PM - 7:30 PM
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில், இங்கு அம்மன் இடது காலை வலது காலின் மீது போட்டபடி, எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
இங்கு மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிகார தெய்வங்கள் கிடையாது, அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் மட்டும் இருக்கின்றனர்.
தைப்பூச தினத்தன்று, இங்கு மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஷ்வரருக்கும் தெப்பத்திருவிழா எடுக்கப்படுவது வழக்கம்.
இக்கோவிலின் எதிரே கட்டப்பட்டுள்ள தெப்பக்குளம் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது.
அரண்மனை கட்டுமானத்திற்காக மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் பள்ளம் தோண்டப்பட்டதாகவும், பின்னாளில் அப்பகுதியை சீரமைக்க எண்ணி சதுரவடிவில் வெட்டி, தெப்பக்குளமாக மாற்றியதாகவும் வரலாறு கூறுகிறது.
தெப்பக்குளத்தின் நடுவே மரங்களுக்கு மத்தியில் வசந்த மண்டபம் ஒன்றும் அமையப்பெற்றுள்ளது.
வழிபாட்டு நேரம் - 8 AM - 7 PM