ஜொலிக்கும் நட்சத்திரப் பட்டியல்
இந்திய ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கு 27 நட்சத்திரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு (27x4 =108) ஒவ்வொரு ராசியிலும் நட்சத்திரங்களின் 9 பாதங்கள் இடம்பெறும்.
மேஷ ராசியில் அஸ்வதி 4, பரணி 4 மற்றும் கார்த்திகை முதல் பாதம் (4+4+1=9) இடம்பெறும். ஆக மொத்தம் (12x 9 =108).
யோகம் எப்படி வரும்?
ஒவ்வொரு ராசியிலும் 30 பரல்கள் உண்டு . மொத்தம் 360 பரல்கள். இந்த பரல்கள் பரவலாக ஒவ்வொரு ராசிக்கும் வகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ராசியில் பரல்கள் 35 என்று கூடுதலாகவும் ஒரு ராசியில் 21 என்று குறைவாகவும் இருக்கலாம். அப்போது கூடுதல் பரல் இருக்கின்ற ராசிக்கு பலன் அதிகம்.
அந்த ராசியில் இருக்கும் கிரகங்கள் அந்த ராசியைப் பார்க்கும் கிரகங்கள் கூடுதலாக பலன் அளிக்க வல்லன.
ஆக உலகில் ஆண்டிக்கும் அம்பானிக்கும் மொத்தம் 360 பரல்கள் தான். அது எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே யோகம் வருகிறது.
நட்சத்திரங்கள் வரிசை
அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை மூலம் பூராடம் உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை 27 நட்சத்திரங்கள் ஆகும்.
தெய்வங்களின் நட்சத்திரங்கள்
மனிதர்களைப் போலவே இந்து சமய தெய்வங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பதாக நம்பப்படுகிறது.
இவ் 27 நட்சத்திரங்களில் திருவோணம், திருவாதிரை ஆகிய இரண்டு மட்டும் திரு என்ற அடைமொழியுடன் விளங்குகின்றன.
காரணம், இவை இரண்டும் இறைவனுக்குரியன. திருவாதிரை என்பது சிவன் பிறந்த நட்சத்திரம். திருவோணம் பெருமாள் பிறந்த நட்சத்திரமாகும்.
அசுவதி சரஸ்வதி பிறந்த நட்சத்திரம் ஆகும். துர்க்கை பிறந்த நட்சத்திரம் பரணி. முருகனும் அக்கினி தேவனும் பிறந்தது கார்த்திகையில் என்பர்.
பிரம்மாவும் கிருஷ்ணரும் ரோகிணியில் பிறந்தனர். சந்திரன் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தான். அதிதி மற்றும் ராமரின் நட்சத்திரம் புனர்பூசம்.
பிரகஸ்பதி பூசம் நட்சத்திரத்தன்று பிறந்தார். விஸ்வகர்மா பிறந்தது சித்திரையில் வாயுதேவன் சுவாதி நட்சத்திரத்தில் உதித்தார்.
முருகப்பெருமானுக்கு உரியது விசாக நட்சத்திரம்.
லட்சுமி தேவி பிறந்தது அனுஷ நட்சத்திரம்.
இந்திரனின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை .
அனுமன் தோன்றியது மூல நட்சத்திரம்.
வருணன் பிறந்தது பூராடம் என்பர்.
கணபதி உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தார்.
ஆதிசேஷன் ஆயில்ய நட்சத்திரத்தில் தோன்றினார்.
சுக்கிர பகவான் உதித்தது மகம்.
பார்வதி தேவி பிறந்தது பூரம் நட்சத்திரம்.
சூரியனும் ஐயப்பனும் உத்திரத்தில் உதித்தனர்.
பிள்ளையார் பிறந்தது அஸ்த நட்சத்திரம் என்றும் கூறுவர்.
வசு தேவர்கள் பிறந்தது அவிட்ட நட்சத்திரமாகும்.
எமன் தோன்றியது சதயம் நட்சத்திரத்தில் என்பர்.
குபேரன் பிறந்தது பூரட்டாதி நட்சத்திரமாகும். காமதேனு பிறந்தது உத்திரட்டாதி நட்சத்திரம்.
சனி பிறந்தது கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திரம் ஆகும்.
நட்சத்திர கணங்கள்
மனிதர்களை அவர்களின் கோபதாபங்களுக்கு ஏற்ப தேவ கணம் மனுஷ கணம், ராட்சச கணம் என்று பகுத்துக் காண்பர். இருபத்தேழு நட்சத்திரங்களையும் ஒவ்வொரு கனத்துக்கும் ஒன்பது நட்சத்திரங்களாகப் பிரித்துள்ளனர்.
தேவகணத்துக்குரிய நட்சத்திரங்கள்
அசுவதி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகியன தேவ கணம் ஆகும். இவர்கள் சாந்தகுணம் உள்ளவர்கள் கோபதாபம் குறைவு
மனுஷ கணத்துக்குரியவை
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியன மனுஷ கணம் ஆகும். இவர்கள் சாந்தமும் கோபமும் நடுத்தரமாகக் கொண்டவர்கள்.
ராட்சச கணத்துக்கு உரியவை
கார்த்திகை, ஆயில்யம், மகம் சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கோப தாபம் மிகுதி.
கிரகங்களுக்கு உரிய நட்சத்திரங்கள்
ஒவ்வொரு கிரகத்திற்கும் இன்னென்ன நட்சத்திரங்கள் என்ற ஒரு பிரிவும் உண்டு. இப்பிரிவை திரிகோண (1,5,9 ராசிகள்) நட்சத்திரங்கள் என்று அழைப்பர். காரணம் ஒவ்வொரு கிரகத்துக்கும் மூன்று நட்சத்திரங்கள் உண்டு.
அசுபதி, மகம், மூலம் கேது கிரகத்திற்குரிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதன் முதலில் கேது திசை தொடங்கும்.
பரணி, பூரம், பூராடம் ஆகியன சுக்கிரனுக்குரிய நட்சத்திரங்கள் ஆகும். இவர்கள் சுக்கிர திசையில் பிறப்பார்கள்.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகியன சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள் ஆகும். இவர்கள் துரிய திசையில் பிறப்பார்கள்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியன சந்திரனுக்குரிய நட்சத்திரங்கள். இவர்கள் சற்று மென்மையான மனம் கொண்டவர்கள். இவர்கள் பிறக்கும்போது சந்திரதிசை நடக்கும்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள் ஆகும். செவ்வாய் திசையில் பிறக்கும் இவர்கள் வீரமானவர்களாக இருப்பார்கள்.
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் ராகுக்கு உரிய நட்சத்திரங்கள். ராகு திசையில் பிறக்கும் இவர்கள் உலக இன்பங்களில் பெருவிருப்பம் கொண்டவர்கள்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்கள் வியாழ பகவானுக்குரிய நட்சத்திரங்கள். இவர்கள் பொறுமையும் நிதானமும் விவேகமும் கொண்டவர்கள்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்கள் சனி பகவானுக்குரியன. இவர்கள் மற்றவர்களுக்குப் பணிந்து வேலை செய்வார்கள்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியன புதன் பகவானுக்குரியன. இவர்கள் புத்தி கூர்மையும் விவேகமும் நிதானமும் கொண்டவர்கள்.
நட்சத்திரப் பழமொழிகள் நட்சத்திரங்களின் பலனைக் குறிக்க காலங்காலமாக சில பழமொழிகள் நடைமுறையில் உள்ளன.
ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்
மூல நட்சத்திரம் குருவின் ராசியில் இடம்பெற்றுள்ளதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரம் படைத்தவர்களாகவும் சொல்வாக்கு செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
பூராடத்தில் பெண் பிறந்தால் நூலாடாது
பூராடம் போராடும். பூராட நட்சத்திரத்தினர் போராட்ட குணம் உள்ளவர்கள். எனவே பூராடத்தில் பிறந்த பெண் புகுந்த வீட்டில் பெரியோர்களுக்குக் கீழ்படியாமல் எதிர்த்து பேசுவாள். இருந்து வாழ மாட்டாள் என்பது அக்காலத்து மக்களுக்கு இருந்த ஒரு நம்பிக்கை.
கேட்டையில் பெண் பிறந்தால் கோட்டை எல்லாம் பொன்னாகும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண் அதிர்ஷ்டசாலி. எனவே அவள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் மகாலட்சுமியாக விளங்குவாள் என்பது ஒரு நம்பிக்கை.
ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது
ஆயில்ய நட்சத்திரம் புதன் ராசிக்குரிய நட்சத்திரம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண் மருமகளாக வரும்போது அவள் புத்திசாலியாகவும் அறிவுச்செருக்கு உடையவளாகவும் இருப்பாள். எனவே மாமியாருக்கு அடங்க மாட்டாள். மாமியாரோடு எப்போதும் சண்டையிடுவாள் என்று மக்கள் முற்காலத்தில் கருதினர்.
மகத்தில் பிறந்த பெண் ஜெகத்தை ஆள்வாள்
மக நட்சத்திரம் சுக்கிரனுக்குரிய நட்சத்திரம். அதன் ராசி சிம்மம் என்பதால் அழகிலும் அந்தஸ்திலும் அதிகாரத்திலும் மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பாக இருப்பார்கள். எடுத்துக்காட்டாக ஜெயலலிதா அவர்களைக் குறிப்பிடலாம்.
சித்திரை ஆண் தலை தட்டும் முன்னே தகப்பனை தூக்குவான் என்பது பழமொழி. சித்திரையில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு சூரியன் உச்சம், செவ்வாய் ஆட்சி என்பதால் அவன் உடல் வலிமையிலும் அதிகாரத்திலும் சிறந்து விளங்குவான். சற்று வளர்ந்ததும் குடும்பத்தின் பொறுப்பை அவன் ஏற்று செயல்படுத்துவான். அதனால் அவன் தகப்பனைத் தலைமை பொறுப்பிலிருந்து தூக்கி விடுவான்.
பரணியில் தரணி ஆளும்
பரணி நட்சத்திரம் சுக்கிரனுக்குரிய நட்சத்திரம் என்பதாலும் அதன் மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுவதாலும் மக நட்சத்திரத்தைப் போலவே அழகும் அதிகாரமும் உடல் வலிமையும் உள்ள பெண்ணாக இருப்பாள். எனவே பரணியில் பிறந்த பெண் தரணியை ஆள்வாள்.
திருவோணத்தான் உலகை ஆள்வான்
திருவோணத்தில் பிறந்த நட்சத்திரத்தினர் சனி ராசியில் சந்திரன் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் நீண்ட காலத் திட்டங்களை வகுத்துச் செயல்படுவதால் மிகுந்த பொறுமையுடன் நிதானமாக இருப்பார்கள்.
அதனால் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவருடைய செயல்பாடுகள் பிடிக்காமல் போகும். ஆனால் அவர் இறந்தாலும் புகழ் நிற்கும் வகையில் இவர் செயல்பாடுகள் இருக்கும். எனவே திருவோணத்தான் உலகை ஆள்வான் என்ற பழமொழி தோன்றியது.
இவ்வாறு நட்சத்திரங்களுக்கு இன்னும் பல பழமொழிகளும் உண்டு. மேனாட்டு ஜோதிடத்திலும் ந்டசத்திரங்கள் ராசிக்கு உண்டு . உலகம் முழுக்க ஜோதிடமும் நட்சத்திர பலனும் வழக்கில் உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |