பதினாறு செல்வங்களை பெற்றுத்தரும் திருவோண விரதம்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் இறைவனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது காலம் காலமாக பின்பற்றக் கூடிய முக்கிய விஷேசம் ஆகும். விரதங்களில் பல வகை உள்ளது. அதிலும் பதினாறு செல்வங்களையும் பெற்றுக்கொடுக்கும் விரதமாக திருவோண விரதம் இருக்கிறது.
இந்த விரதத்தை மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திர நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் பதினாறு செல்வங்களும் பெற்று நாம் நிறைவான வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுகிறது.
ஜோதிடத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கி ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே நட்சத்திரப் பெயருடன் ‘திரு’ எனும் அடைமொழியும் சேர்த்து சொல்லப்படுகிறது.
ஒன்று திருவாதிரை சிவபெருமானுடைய நட்சத்திரம் மற்றொன்று திருவோணம் பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய திருவோண நட்சத்திர நாளும் விரதத்திற்கு உரிய நாளாகும்.
அதேசமயம், சில மாதங்களில் வரக்கூடிய திருவோணம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, மார்க்கண்டேயனின் மகளாக அவதரித்த பூமாதேவியை, பங்குனி மாத திருவோண நட்சத்திர நாளில்தான், ஒப்பிலியப்பப் பெருமாள் மணந்துகொள்வதற்காக பெண் கேட்டார் என்கிறது புராணம்.
அதேபோல், ஆவணி மாத திருவோணம்தான், ஓணம் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. இத்தனை மகிமைகள் மிகுந்த திருவோண நட்சத்திர நாளில், பெருமாள் வழிபாடு செய்வதும் விரதம் மேற்கொண்டு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நமக்கு எண்ணற்ற பலன்கள் கொடுக்கிறது என்று சொல்கிறார்கள்.
இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். ஒவ்வொரு திருவோண நட்சத்திர நாளில் விரதம் இருந்தாலும், அல்லது மாதந்தோறும் வரும் திருவோண நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தாலும் சந்திர தோஷம் முதலான தோஷங்கள் விலகுகிறது என்று சொல்கிறார்கள்.
பொதுவாக, சந்திர தோஷம் இருபவர்களின் மனநிலை சீரற்ற தன்மையில் இருக்கும். எப்பொழுதும் இவர்கள் பயத்துடனும் பதட்டத்துடனும் காணப்படுவார்கள். இவர்கள் திருவோண நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் அந்த தோஷம் யாவும் விலகி நல்வாழ்வு கிடைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரங்கள்.
அதோடு, அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்வதும் நல்ல பலன் கொடுக்கும். மேலும், விரதம் என்பது உணவு உண்ணாமல் இருப்பது மட்டுமே அல்ல. நம்முடைய எண்ணங்களை அடக்கி இறைவனை மனதில் நிறுத்தி முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்வதும் விரதமே.
ஒரு சிலரால் உணவு எடுத்துக்கொள்ளாமல் விரதம் மேற்கொள்ளலாம், சிலர் உணவு உண்ணாமல் இருக்க முடியாது.
ஆதலால் அவர்கள் அன்றைய தினம் உணவை குறைத்து கொண்டு முழு மனதையும் இறைவனுக்கு செலுத்தி வழிபாடு செய்து வந்தால் அவர்கள் வாழ்க்கையில் எல்லா செல்வ வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |