2026 கிருஷ்ண ஜெயந்தி: நாளை கண்ணனை அழைத்து வழிபாடும் செய்யும் முறை
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண பகவான் அவதரித்த தினத்தை நாம் கிருஷ்ண ஜெயந்தியாக கோகுலாஷ்டமியாக கொண்டாடி வருகின்றோம்.
மேலும், புராணங்களின் அடிப்படையில் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், அஷ்டமி திதியும் ரோகினி நட்சத்திரமும் இணைந்த தினத்திலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாம் எவ்வாறு கிருஷ்ண பகவானின் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

கிருஷ்ணனை வீட்டிற்கு அழைக்கும் முறை :
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ண பகவானை வீட்டிற்கு அழைக்கும் முன்பாக நாம் முதலில் வீடுகளை நல்ல சுத்தம் செய்து வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். கிருஷ்ணர் படம் அல்லது சிலையை நன்றாக சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வாசனை மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
மேலும், வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவில் குழந்தை கிருஷ்ண பகவான் உடைய பாதங்களை நம்முடைய கைகளால் வரைந்து கொள்ள வேண்டும். இந்த பாத சுவடுகள் கிருஷ்ணரே நம்முடைய வீட்டிற்கு அவதரித்து நம்முடைய பூஜை ஏற்க வீடு தேடி வந்திருப்பதாக அர்த்தமாகும்.
மேலும், பாத சுவடுகள் வரைகின்ற பொழுது கிருஷ்ண பகவானை கோபாலகிருஷ்ணா வீட்டிற்கு வா என்று பாடிக் கொண்டே பூஜை இடம் வரை நாம் வரைவது அவசியமாகும். மேலும், ஒருவர் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களை எப்படி மெதுவாக கைகளை பிடித்து வீட்டிற்குள் அழைத்து வருவமோ அதேபோல் நாம் கண்ணனை அழைத்து வர வேண்டும்.

வழிபடும் முறை :
மேலும், கண்ணனின் திருவுருவ படத்திற்கு அல்லது சிலைக்கு முன்பாக நெய் விளக்கு ஏற்ற வேண்டும். கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்ய முடியாவிட்டால் இரண்டு துளசி இலைகளை மட்டுமாவது கிருஷ்ண பகவானுடைய பாதங்களில் சமர்ப்பித்து போற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு, தீப தூபம் ஆராதனை காட்ட செய்ய வேண்டும்.
அன்றைய தினம் கட்டாயமாக "ஓம் நமோ பகவத்தை வாசுதேவாய நமஹ" என்கின்ற மந்திரத்தையும் "ஜெய்ஸ்ரீ கிருஷ்ணா" என்ற மந்திரத்தையும் நாம் விடாது சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். கிருஷ்ண அஷ்டோத்திரம் கிருஷ்ண பகவானுடைய 108 போற்றி மந்திரங்கள் கிருஷ்ணருடைய சகஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

எப்போது வழிபட வேண்டும்?
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இரவு 11:45 மணி வரை கிருஷ்ண பகவான் அவதரித்ததாக சொல்லப்படும் ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் இணைந்து இருக்கின்றன.
அதனால் அவர்களுடைய வசதிக்கு ஏற்ப பூஜைகளை செய்து வழிபாடு செய்யலாம். ஆனால், கோவில்களில் பொதுவாக கிருஷ்ணர் அவதரித்த நேரமாக சொல்லப்படும் நள்ளிரவு நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடைபெறுகிறது. கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் நள்ளிரவு பூஜைக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |