2026-ல் தொடங்கிய சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாற்றில் இன்று என்ன நடந்தது?
ஜோதிடத்தின் மிக முக்கிய நிகழ்வான சனி பெயர்ச்சி 2026 மார்ச் 6ஆம் தேதி அன்று தொடங்கியது. இதனை அடுத்து திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சனிப்பெயர்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சனி பகவானை தரிசனம் செய்து அருள் பெற்றார்கள்.
ஒரு மனிதனுக்கு நன்மை தீமையை சரியாக கற்றுக் கொடுப்பதில் சனி பகவானுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. அவர் ஒரு ராசியில் இரண்டரை முதல் இரண்டே முக்கால் ஆண்டுகள் சஞ்சரிக்கிறார்.
அப்படியாக சனிபகவானுக்கு உரிய அற்புத தலமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் செண்பக தியாகராஜர் அருள்பாலிக்கும் தலமாகவும், நளன் சக்கரவர்த்திக்கு விமோசனம் கிடைத்த தலமாகவும் மிகச் சிறப்பாக விளங்கக்கூடிய இந்த தலத்தில் பக்தர்கள் பலரும் இன்று சனி பெயர்ச்சி நாளில் சனி பகவானை வழிபாடு செய்து அவருடைய தாக்கம் குறைய அருள் பெற்றனர்.

இங்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் அபய முத்திரையுடன் கிழக்கு நோக்கிய பார்வையில் அனுகிரக மூர்த்தியாக காட்சி கொடுக்கிறார். அனுகிரக மூர்த்தியாக இருக்கின்ற சனிபகவானுக்கு இந்த கோவிலில் சனி பெயர்ச்சி நாளில் மிக விமர்சையாக அபிஷேகம் அர்ச்சனை தீபாரதனை காட்டப்பட்டது.
2026 ஆம் ஆண்டு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8. 24 மணிக்கு சனி பகவான் இடம் மாறுகிறார். இந்த நேரத்தில் மங்கள வாத்தியங்கள் இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சனி பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன் தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
சுவாமிக்கு மலர்களால் மாலை சாற்றப்பட்டு தங்க அங்கியுடன் அலங்காரம் செய்யப்பட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்கள் பலரும் தங்களுடைய சனி தோஷம் நிவர்த்தி பெற நளன் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடினர்.
பிறகு சனீஸ்வரனை தரிசிக்க கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். பக்தர்களின் வசதிக்காக சனி பெயர்ச்சி நாளில் கட்டணம் இல்லாத தரிசனம் மற்றும் ரூபாய் 300 ரூபாய் 600 ரூபாய் 1000 ஆகிய வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது மட்டுமல்லாமல் பக்தர்களின் கூடுதல் வசதிக்காக திருநள்ளாற்றில் பல்வேறு இடங்களில் கட்டணத்துக்கான டிக்கெட் வழங்கும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பிலும் பிற அமைப்புகள் சார்பிலும் அன்னதானம் கூடமும் அமைத்து பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நளன் தீர்த்த குளத்தை சுற்றி தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். தீர்த்த குளத்தில் யாரேனும் மூழ்கி விட்டால் அவரை மீட்க நீச்சல் பயிற்சி பெற்றவர்களும் படகுமூலம் குளத்தை சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு வந்திருந்தனர்.
கோவிலில் தங்க காக வாகனத்தில் உற்சவர் ஆன ஸ்ரீ சனீஸ்வர பகவான் வடக்கு பிரகார மண்டபத்திற்கு வியாழக்கிழமை இரவு எழுந்தருள செய்தார். வரிசையில் செல்லும் பக்தர்கள்தங்க வாகனத்தில் அருள் பாலிக்கும் சனீஸ்வரனை தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
சனிப்பெயர்ச்சி நன்னாளில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்,மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் ஆகியர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |