பஞ்சமுக ஆஞ்சநேயரின் 5 முகங்கள் சொல்லும் ரகசியம் என்ன?
அனுமன், இந்து தொன்மவியலில் வரும் ஒரு முக்கிய கடவுள் மற்றும் ராமரின் பக்தர் ஆவார்.
இராமாயணத்தில் வானரப் படையின் முக்கிய உறுப்பினராகவும், ராமரின் தூதராகவும் திகழ்கிறார்.
அவருக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் உண்டு. அனுமனின் தாய் அஞ்சனா, தந்தை கேசரி. வாயு பகவான் அனுமனின் ஆன்மீக குருவாகவும், தந்தையாகவும் கருதப்படுகிறார்.
அனுமனை ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக வழிபடப்படுவது சிறப்பு.
இந்த ஐந்து முகங்களும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேல் திசைகளை நோக்கியுள்ளன.
ஒவ்வொரு முகமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலையும், பலனையும் குறிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனுமனின் ஐந்து முகங்கள் நமக்கு சொல்லும் ரகசியம் குறித்து பார்க்கலாம்.
1. கிழக்கு முகம் (அனுமன் முகம்)
ஆஞ்சநேயரின் உண்மையான சுயரூபத்தைக் குறிக்கும் இந்த முகம் கிழக்கு, புதிய தொடக்கங்கள் மற்றும் ஞானத்துடன் தொடர்புடைய கிழக்கு நோக்கி உள்ளது. இது பக்தி, தீர்க்கமான அறிவு, புத்திக்கூர்மை, மற்றும் செயலில் வலிமை ஆகியவற்றைக் குறிக்கிறது.
2. தெற்கு முகம் (நரசிம்ம முகம்)
ஸ்ரீநரசிம்மரின் அம்சத்துடன் மரணம் மற்றும் மாற்றத்தைத் தரும் தெற்கு திசை நோக்கிய இந்த முகம் பயம், எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலுடன் அச்சத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது.
3. வடக்கு முகம் (வராக முகம்)
வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கும் வடக்கு முகம் வராகரின் அம்சத்தைக் குறிக்கிறது. விஷ்ணுவின் பன்றி அவதாரமான இது பூமிக்குரிய வலிமை, சாபங்கள் மற்றும் எதிர்மறையிலிருந்து ஒருவரை விடுவித்தல், செல்வ செழிப்பு, அமைதி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.
4. மேற்கு முகம் (கருட முகம்)
தீமைகளிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றைக் குறிக்கும் மேற்கு முகம் கருடனின் அம்சமாக சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தருகிறது.
5. மேல் முகம் (ஹயக்ரீவ முகம்)
ஆன்மீக விழிப்புணர்வைக் குறிக்கும் விதமாக மேல் நோக்கி காணப்படும் இந்த முகம் ஹயக்ரீவரின் அம்சத்தைக் குறிக்கிறது. இது அறிவு, தெளிவு, ஞானம், கல்வி மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







