ஏன் எனக்கு மட்டும் துன்பம் என்று வருந்துபவரா? கீதை சொல்லும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்
நம் வாழ்க்கையில் கட்டாயமாக ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம் என்று மனம் வருத்தம் அடைந்து இருப்போம். ஏன் இந்தக் கேள்விகள் அனைத்தும் இதிகாசங்களில் பலரால் கேட்கப்பட்ட ஒரு கேள்வியாக இருக்கிறது. அப்படியாக பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் குருஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு பல விஷயங்களை எடுத்துரைக்கிறார்.
அதில் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் என்ற கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்கிறார். அதைப் பற்றி பார்ப்போம்.
நாம் எப்பொழுதுமே நமக்கு நடக்கும் ஒரு துன்பத்தின் பொழுது எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று கேட்பதை கடந்து முதலில் "நான் யார்" என்றுஅறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் கிருஷ்ண பகவான்.
எப்பொழுதுமே கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு உண்மையை எடுத்து சொல்கிறார்.அதாவது இந்த உடல் மட்டும் தான் அழிவை பெறக்கூடியது இந்த ஆன்மா அழிவை பெறாதது. இந்த ஆன்மா அதனுடைய கடமையை செய்வதற்காக பிறப்பெடுத்திருக்கிறதே தவிர்த்து இந்த ஆன்மாவிற்கு எதுவும் சொந்தம் அல்ல என்கிறார்.
மேலும் நாம் இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பம் ஏதேனும் ஒரு பிறவியில் நாம் தவறவிட்ட கர்மவினையின் பலன்களாகவே இருக்கிறது. ஆக நாம் சந்திக்கும் துன்பம் அவை நம்மை துன்புறுத்துவதற்காகவோ நமக்கான ஒரு தண்டனையோ அல்ல மாறாக நம்முடைய கர்ம வினைகளில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கான ஒரு வாய்ப்புகள்.
அதோடு கர்ம வினைகள் நம்மை எந்த திசையில் இருந்து சூழ்ந்தாலும் தர்மத்தோடு நாம் நடந்து கொள்வது அவசியமாகும் என்கிறார் கிருஷ்ண பகவான். அதாவது தர்மம் என்பது நம்முடைய கடமை, நாம் செல்லும் சரியான பாதை, அதிலும் குறிப்பாக நமக்கு அநியாயங்கள் நடக்கும் பொழுதும் நாம் தர்மத்தின் பாதை செல்வது என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்கிறார் கிருஷ்ண பகவான்.
மேலும் அர்ஜுனன் பாரதப்போரில் எனக்கு மட்டும் ஏன் இத்தனை துயரம். சாத்தியமே இல்லாத போரில் நான் எவ்வாறு ஜெயிப்பது என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் வேளையில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு அவன் கேட்ட கேள்வியை அவனுக்கே திருப்பி விடுகிறார்.
கிருஷ்ண பகவான் அர்ஜுனனை நடக்கும் யுத்தத்தில் இருந்து கடந்து செல்ல விடாமல், இன்று பாரதப் போரில் போரிடுவது உன்னுடைய கடமையாகும். அது உன்னுடைய தர்மம். அந்த தர்மத்தை எந்த ஒரு பலனும் எதிர்பாராமல் செய்து விடு என்று அர்ஜுனனுக்கு அவர் எடுத்துரைக்கிறார்.
ஆக, நாம் இந்த பிறப்பை எதற்காக எடுத்திருக்கிறோம் என்பதே பல ஆச்சரியங்கள் நிறைந்தது. அதில் வருகின்ற துன்பமும் இன்பமும் நம் கைகளில் இல்லை. இன்பத்தை கண்டு யாரும் எதற்காக இந்த இன்பம் என்று கடவுளை சரணடைந்து வேண்டுவதில்லை. ஆனால் துன்பம் வருகிற பொழுது மட்டும் எதற்கு எனக்காக மட்டும் இத்தனை சோதனை என்று அழுது புலம்பி கொண்டிருக்கின்றோம்.
நாம் பிறப்பின் உண்மையை தெரிந்து கொண்டால் நாம் எதற்கும் வருந்த மாட்டோம். நம்முடைய வேலை தர்மத்தை கடைபிடிப்பது. நீங்கள் உண்மையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் நீங்கள் உண்மையில் நீங்க நினைத்தது போல் வாழ வேண்டும் என்று எண்ணினால் பலனை எதிர்பாராமல் கடமையை செய்து வாழ்ந்து விடுங்கள்.
இன்று செய்யும் கடமை உங்களுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் ஒரு நாள் பெற்றுக் கொடுக்கும். ஆக கிருஷ்ண பகவானிடமும் இந்த பிரபஞ்சத்திடமும் சரண் அடைந்து கடமைகளை செய்வது மட்டுமே நம்முடைய வேலை. மீதியை அவன் பார்த்துக் கொள்வான்
"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்"
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







