மகாபாரதம்: மனிதர்கள் ஏன் துரோகம் செய்கிறார்கள்?
உலகத்தின் நியதிபடி ஒவ்வொரு உறவும் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் உதவியாகவும் மிக முக்கியமாக அவர்களுக்கு எதிராக அவர்கள் சொன்ன உண்மையை வைத்து துரோகம் செய்யாமலும் வாழ வேண்டும் என்பதே. ஆனால் இந்த உலகம் அவ்வாறு இயங்குகிறதா என்று கேட்டால் கட்டாயம் இல்லை.
மனிதர்கள் சூழலுக்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்கிறார்கள். அதில் துரோகங்கள் பல நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த உலகத்தில் வலிகளில் மிகப்பெரிய வலி நம்பியவர்கள் நமக்கு எதிராக செயல்பட்டு எதிரியாக நம்முன் நின்று நமக்கு கஷ்டம் கொடுப்பதுதான்.
அப்படியாக நம்பியவர்கள் நமக்கு துரோகம் நிகழ்த்தும் பொழுது மனம் உடைந்து செய்வதறியாவது உடைந்து நிற்பார்கள். அந்த வகையில் துரோகத்தை மனிதர்கள் மட்டுமா சந்தித்திருக்கிறார்கள்? மகாபாரதத்தில் எல்லாம் அறிந்த பகவான் விஷ்ணுவிற்கும் துரோகம் நிகழ்ந்திருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

கிருஷ்ணரின் வாழ்க்கையில் நிகழ்ந்த வேதனைகள்:
மிகவும் அன்பான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய, அதோடு நினைத்தாலே மனதிற்கு இனிமை தரக்கூடிய கிருஷ்ண பகவானுக்கும் சூழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கை இருந்திருக்கிறது. கிருஷ்ண பகவான் அவர் பிறந்த குலமக்களுக்காக பல விஷயங்களை செய்தார். ஆனால் அவர்கள் அவர்களுக்குள்ளே சண்டை இட்டு அழிந்து கொண்டார்கள்.
கிருஷ்ண பகவானின் குழந்தை பருவ நெருங்கிய நண்பனான சுதாமன் பெரும் கஷ்டத்தில் இருந்தார். ஆனால் அவர் தயக்கத்தாலும் அகங்காரத்தாலும் கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் விலகிச் சென்றார். அனைவராலும் போற்றி மதிக்க கூடிய கர்ணன் துரியோதனன் மீது கொண்டுள்ள அன்பாலும் கடமையாலும் கிருஷ்ண பகவான் காட்டிய வழிகாட்டுதலுக்கு எதிராக நின்று தவறான முடிவை எடுத்து துன்பத்தை சந்தித்தான்.
இவை எல்லாம் கிருஷ்ணர் ஒருவருக்காக நின்ற வேளையில் அவர்கள் எதிராக செய்யும் பொழுது கிருஷ்ண பகவான் எவ்வளவு மன வேதனை அடைந்து இருப்பார். ஆக மனிதர்களுடைய மனம் மாறிக்கொண்டே இருக்கிறது. துரோகமும் மன வேதனையையும் இறைவனும் தான் சந்திக்கிறார். பக்தர்களுக்காக இறைவன் ஒன்று சிந்தித்து வைத்திருப்பார். ஆனால் அவருக்கு எதிராக செயல்பட்டு அவர் முன் நாம் துன்பப்படும் நிலையும் வந்திருக்கும்.
நிம்மதியான வாழ்க்கை வாழ:
மேலும், மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் எல்லோரிடத்திலும் அன்பாக பழகினார். ஆனால் யாரிடத்திலும் அவர் மிக இணக்கமாக பழகவில்லை. அவர் எல்லோருக்கும் உதவி செய்தார், அவர் எல்லோருக்கும் அன்பு பாராட்டினார்.
ஆனால் எதன் மீதும் அவர் அதிக பற்று வைக்கவில்லை. இங்கு மனிதர்கள் சந்திக்கக்கூடிய பல வேதனைகளும் கஷ்டங்களும் நாம் ஒருவர் மீது அளவு கடந்த பிணைப்பு வைப்பதனால் மட்டுமே வருகிறது. அதாவது தங்களை மீறி ஒரு அன்பும் பாசமும் ஒருவர் மீது வைக்கும் பொழுது அதை அவர்கள் புறக்கணித்து செல்லும் பொழுது ஏற்படக்கூடிய வலி வேதனை தான் இங்கு பல மனிதர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் பெரும்பாலான இடங்களில் மனிதர்கள் நம்மை போலவே நம்மிடம் அன்பும் பரிவும் காட்ட வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் இங்கு ஒவ்வொரு மனிதர்களுக்குள் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் சிந்தனைகள் இருக்கின்றது.
ஆதலால் நாம் இணக்கமாக இல்லாமல் அவர்களை அவர்களாக ஏற்றுக் கொண்டு பழகும் பொழுது அவர்கள் செய்யும் எந்த ஒரு நன்மை தீமையும் நம்மை பாதிக்காத அளவிற்கு அமையும்.

கர்ணனின் பயணம்:
சில நேரங்களில் ஒருவர் நமக்கு துரோகம் செய்யும் பொழுது இவர்கள் எப்படி எனக்கு துரோகம் செய்தார்கள்? தர்மத்தை மீறி விட்டார்களே என்ற கேள்விகள் வரும். உதாரணமாக மகாபாரதத்தில் கர்ணனை எடுத்துக் கொண்டால், பாரதப் போரில் கர்ணன் அவருடைய சகோதரர்களுக்கும் கிருஷ்ண பகவானுக்கும் எதிராக போரிட்டார்.
அந்த வேளையில் கர்ணன் கடமையின் காரணமாக தன்னுடைய நண்பன் துரியோதனனுக்கு அருகில் நின்று போரிடுவது தான் தர்மம் என்று எண்ணியதால் இவர்களுக்கு எதிராக அவனுடைய வாழ்க்கை அவனை கூட்டி சென்றது. அவன் அன்று செய்த யுத்தம் கர்ணனுக்கு தர்மமாக அமைந்தது. இருப்பினும் ஒவ்வொருவர் தங்களுடைய வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு ஏற்ற தர்மத்தின் படி செயல்பட்டாலும் இறுதியில் பிரபஞ்சத்தின் தர்மம் என்ற ஒரு நிலை இருக்கிறது.
அதன் முன்னால் அவர்கள் கட்டாயம் அவர்கள் செய்த செயலுக்கு ஏற்ப பலனை பெற்று தான் ஆக வேண்டும். அதனால் பிறர் எவ்வாறு வேண்டுமானால் இருக்கட்டும். நாம் நமக்கு உண்மையாகவும் தர்மம் நிறைந்த சிந்தனையோடும் கடவுளுக்கு ஒழுக்கமான பக்தராகவும் நாம் செயல்படும்பொழுது எந்த ஒரு அதர்மமும் நம்மை நெருங்குவதில்லை.
துரோகங்களும் வெறும் தூசியாக பறந்து போய்விடும். மேலும், இந்த உலகத்தில் சூழ்ச்சி செய்தவர்கள் அழிந்ததாக வரலாறு இருக்கிறதே தவிர்த்து தர்மம் செய்தவர்கள் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஆதலால் தர்மத்தை கடைபிடிப்போம் அவன் அருள் பெற்று வாழ்வோம்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |