ஜோதிடம்: விதியை வெல்ல பரிகாரம் இருக்கிறதா?
ஜோதிடம் என்பது நாம் தான். அதாவது, நம் வாழ்க்கையில் நடப்பது 12 கட்டத்தில் அமைந்து இருக்கிறதா? அல்லது 12 கட்டம் தான் நம் வாழ்க்கையாக இருக்கிறதா? என்பது ஒரு பெரிய ஆராய்ச்சி என்றாலும், விதியை வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதை பற்றி ஒரு பார்ப்போம்.
ஒரு ஊரில் ஜோதிடர் ஒருவர் மிக துல்லியமாக ஜோதிடம் கணித்து சொல்லும் ஆற்றல் பெற்று இருந்தார். அவரை காண பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் மக்கள் வந்து சென்றனர். அப்படியாக, தன்னுடைய எதிர்காலம் எப்படி அமைய போகிறது? தான் இன்னும் என்னவெல்லாம் துன்பம் அனுபவிக்க போகின்றேன் என்று தெரிந்து கொள்ள ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தார்.
அவர் ஜோதிடரை பார்த்து, ஐயா! நான் நீண்ட காலமாக தீராத வறுமையால் வாடி வருகின்றேன். கடன் வேறு தலைக்கு மேல் அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறது. எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் திருமண வயதில் இருக்கிறார்கள். அவர்களை எவ்வாறு கரை சேர்க்க போகின்றேன் என்று தெரியவில்லை. என் வாழ்க்கை மாறுமா? அதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? என்று பார்த்து சொல்லுங்கள் என்று அவருடைய ஜாதகத்தை கொடுத்தார்.
ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார், கட்டங்களை ஆராய்ந்து பார்த்தார். ஜாதகரின் நிலை பார்த்து செய்வதறியாது ஜோதிடர் “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை நான் இன்னும் ஆழமாக ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
அதனால், உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும். நீங்கள் சென்று நாளை இதே நேரத்திற்கு வாருங்கள் என்று சொன்னார். அவரும் ஜோதிடர் சொன்னதை கேட்டு கொண்டு “சரிங்க ஐயா நான் நாளைக்கு இதே நேரம் உங்களை வந்து பார்க்கின்றேன். நான் இப்போ உங்களுக்கு ஏதேனும் தரணுமா ஐயா என்று கேட்டார்.
அதற்கு ஜோதிடர் “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஐயா, நாளை வரும் பொழுது தாருங்கள், பார்த்து கொள்ளலாம் என்றார். தொழிலாளியும் சரிங்க ஐயா, ரொம்ப சந்தோசம் என்று அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், ஆமாம் எதற்காக அவரை உங்களுக்கு இன்று அவசர வேலை இருக்கிறது என்று அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்டாள். அதற்கு ஜோதிடர் இன்று எனக்கு மிக பெரிய வேலை என்று எதுவும் இல்லை.
அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போவதாக அவருடைய கட்டம் சொல்கிறது. நானும் சோழி உருட்டியும் பார்த்து விட்டேன். அவருக்கு இனிமேல் பரிகாரம் செய்யவும் நேரமில்லை. எனக்கு அவரிடம் என்ன பலன் சொல்லுவது என்று தெரியவில்லை அதனால் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன் என்றார்.
இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது வானம் இருண்டு பலத்த மழை பெய்தது. மழை அதிகம் கொட்ட, வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தார்.
அந்த வேளையில் ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த சிவன் கோவில் ஒன்று கண்களுக்கு தெரிந்தது. மழை நிற்கும் வரை அந்த தொழிலாளி அந்த கோயிலில் ஒதுங்கினார். இவ்வாறு அவர் அங்கு நின்று கொண்டு இருக்க, அந்த சிதிலமடைந்து கிடக்கும் கோயிலை கண்டு மனம் வருந்துகிறார். ஈசன் வாழும் இடமும் வறுமையால் வாடி கிடக்கிறதே.
நான் மட்டும் ஏழையாக இல்லாமல் இருந்திருந்தால் என் செல்வம் மொத்தமும் கொடுத்து இந்த கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று சிந்தித்து கொண்டு இருந்தார். அதோடு அவர் நிறுத்தவில்லை, பெய்யும் மழையில் அந்த ஏழை தொழிலாளி சற்று நேரத்தில் அந்த சிவன் கோயிலை புதுப்பித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து விட்டார்.
அதாவது, கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.
அந்த கற்பனையில் மனம் மகிழ்ந்து கொண்டு இருக்க, தற்செயலாக அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.
அவர் வெளியே வந்தது தான், அடுத்த நொடியே ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். அந்த நிகழ்வை கண்டு அதிர்ந்து போனார் தொழிலாளி. பிறகு எப்படியோ வீட்டிற்கு சென்று அவர் நடந்த சம்பத்தை குடும்பத்தினரிடம் சொல்கிறார்.
மறுநாள் பொழுதும் விடிந்தது, ஜோதிடர் அவரை சந்திக்க வர சொன்ன அதே நேரத்திற்கு அவரை சந்திக்க செல்கிறார் தொழிலாளி. அவரை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.
ஜோதிட நூல்கள், ஓலைச் சுவடிகள் என்று எல்லாம் புரட்டி பார்க்கிறார். அவர் கணிப்பு சரியாகவே இருந்தது. பின் எவ்வாறு அந்த தொழிலாளி பிழைத்தார் என்பது தான் இவ்வருக்கு ஆச்சரியம். மேலும், இவ்வாறான கண்டத்தில் இருந்த தப்பிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.
அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும். ஆனால், இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது என்று ஜோதிடர் “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.
அதற்கு அந்த தொழிலாளி, தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும், அங்கு அவர் அந்த கோயிலின் நிலையை பார்த்து மிகவும் மனம் வருந்தி தன்னிடம் பணம் இருந்திருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.
ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. அதாவது அவர் முழு மனதார சிவாலய பணிகளை செய்ய வேண்டும் என்று நினைத்ததே அவருக்கு மிக பெரிய பலனை கொடுத்திருக்கிறது என்று புரிந்து கொண்டார்.
பிறகு ஜோதிடர், அந்த தொழிலாளியிடம், ஐயா, உங்கள் ஜாதகம் அற்புதமாக உள்ளது. அந்த ஈசன் அருளால் உங்களுக்கு மறு ஜென்மம் இது. இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.
ஆக, விதி வலியது என்றாலும் மனதில் எப்பொழுதும் இறை சிந்தனை இருக்க கடைசி நிமிடம் கூட அவன் அருளால் பல மாற்றங்கள் நிகழும். ஆக்கமும் அழிவும் அவனுடையது.
ஓம் நமச்சிவாய.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |