நாளை (8-5-2025) பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள்
ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தாய் மீனாட்சி மிக பெரிய சாட்சி. வீரமும் விவேகமும் அன்பும் நிறைந்தவள் தாய் மீனாட்சி. இவள் மதுரை ஆளும் அரசி மட்டும் அல்ல, பக்தர்களின் மனதை ஆளும் அரசியும் தான்.
மேலும், தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் தாய் மீனாட்சிக்கும் அப்பன் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபோகம் மிக சிறப்பாக நடைப்பெறும். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி தாய் மீனாட்சியின் திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடக்க இருக்கிறது.
இந்த நாளில் பெண்கள் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய சில முக்கியமான விஷயங்களை கடைப்பிடிப்பது சிறந்தது என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். இறைவன் திருக்கல்யாண வைபவம் பார்ப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல நன்மைகள் நடக்கிறது.
அப்படியாக, நாளை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைப்பெறும் பொழுது பெண்கள் திருமாங்கல்ய கயிறு மாற்றிக் கொள்ளலாம். எல்லோரும், கயிறு மாற்றி கொள்ளவேண்டும் என்பது அவசியம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் நாளை செய்யலாம்.
அவ்வாறு, மாற்ற வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் நாளை மே 8ம் தேதி காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மதுரையில் அம்பாளுக்கு நடக்கும் திருக்கல்யாண நேரத்தில் மாற்றி கொள்ளலாம்.
அதனால், காலை 8 மணிக்கு முன்பாக வீட்டில் பூஜைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து கொள்வது நல்லது. தற்பொழுது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியால் நாளை எல்லா தொலைக்காட்சிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்வார்கள்.
ஆகவே தொலைக்காட்சி வாயிலாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை பார்த்துவிட்டு மீனாட்சி கழுத்தில் மாங்கல்யம் ஏறிய பிறகு நாமும் கழுத்தில் திருமாங்கல்யத்தை எடுத்து போட்டுக் கொள்ளலாம். மேலும், திருக்கல்யாணம் முடிந்த பிறகு நம்முடைய கைகளால் விருந்து வைக்கும் பழக்கம் உண்டு.
அதனால், நாளை முடிந்த அளவு இரண்டு பேருக்கு நாம் உணவு பரிமாறி வாழ்த்து பெறலாம். நாம் அனைவரும் அன்னையின் சக்தியை தெரிந்து இருப்போம். அதாவது, அம்பாள் ஒன்று நினைத்து விட்டால் அதை நிச்சயம் நிறைவேற்றி வைத்து விடுவாள்.
அதே போல் பக்தர்கள் அம்பாளிடம் ஒரு வேண்டுதலை வைக்க அதையும் தாய் மறுக்காமல் நிறைவேற்றி வைப்பாள் என்பது ஐதீகம். அதனால், நாளை நடக்க இருக்கும் முக்கியமான நிகழ்வை தவறவிடாமல் வழிபாடு செய்ய அம்மை அருளாலும் சொக்கன் அருளாலும் நம் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |