தமிழ்நாட்டில் ஆறு மாதம் ஒருமுறை நிறம் மாறும் அதிசய விநாயகர்.. எங்கு தெரியுமா?
தமிழ்நாடு பல புண்ணிய தலங்கள் இருக்கக்கூடிய அற்புதமான பூமியாகும். இன்னும் சொல்லப்போனால் நவீன அறிவியலுக்கே சவால் விடும் அளவிற்கு நிறைய அதிசயங்களையும் அற்புதங்களையும் அந்த கோவில் தாங்கி நிற்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆறு மாதம் ஒருமுறை நிறம் மாறக்கூடிய விநாயகர் கோவில் இருக்கிறது.
பலரும் அறிந்திடாத இந்த அதிசய விநாயகர் கோவில் நாகர்கோவில் அருகில் உள்ள கேரள புறம் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. அந்த கோவிலைப் பற்றி பார்ப்போம்.
நாகர்கோவிலிலிருந்து14 கிலோமீட்டர் தொலைவில், கன்னியாகுமரியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த அதிசய விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது.

இந்த கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பது வரலாற்று சிறப்பாகும். இங்கு அருள் பாலிக்கும் சிவபெருமான் மற்றும் விநாயகர் சிலை மிகவும் பழமையானது என்று சொல்கிறார்கள். குறிப்பாக விநாயகர் சிலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்று பலரும் நம்புகின்றன. இந்த சிலை வழக்கமாக ஆகம முறைகளின் அடிப்படையில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை.
பழமையான காலத்தில் கிடைத்தபடியே இங்கு வைத்து வழிபட்டு வருகிறார்கள். அப்படியாக இந்த கோவிலில் மிகப்பெரிய அதிசயம் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் விநாயகர் ஆண்டுக்கு இருமுறை நிறம் மாறக்கூடிய நிகழ்வு நடக்கும் என்கிறார்கள்.
உத்தராயண காலம் (மார்ச் முதல் ஜூன் வரை) – விநாயகர் சிலை கருப்பு நிறமாக காணப்படும்.
தட்சிணாயண காலம் (ஜூலை முதல் பிப்ரவரி வரை) – விநாயகர் சிலை வெள்ளை நிறமாக மாறும்.
இவ்வாறு விநாயகர் நிறம் மாறக்கூடிய காரணத்தினால் இந்த தலத்திற்கு "அதிசய விநாயகர்" கோவில் என்று பெயர் பெற்றது. நிறம் மாறும் கிணறு : இந்த கோவிலில் இன்னொரு அதிசயமும் இருக்கிறது. அதாவது நிறம் மாறும் கிணறு. கிணற்றின் நீரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறுவதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள்.

விநாயகர் வெள்ளை நிறமாக இருக்கும் காலத்தில் கிணற்றின் நீர் கருப்பு நிறமாக இருக்கிறது. விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும் காலத்தில் கிணற்றின் நீர் வெள்ளை நிறமாக மாறுகிறது. இதை மக்கள் அதிசய நிகழ்வாக கருதுகிறார்கள். மேலும் இந்த கோவிலில் உள்ள ஆலமரத்திற்கும் ஒரு விசேஷம் உள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இலை உதிர் காலம் அதிகமாக காணப்படாத நிலையில் இந்த ஆலமரம் தட்சிணாய காலத்தில் இலைகளை உதிர்க்கும். பின்னர் மார்ச் மாதத்தில் மீண்டும் துளிர் விடுகிறது. இந்த இயற்கை மாற்றத்தையும் மக்கள் ஒரு தெய்வீக அறிகுறியாக கருதுகிறார்கள்.
பல அதிசயங்களை கொண்ட இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால் திருமண தடை மற்றும் குழந்தை பிறப்பு தாமதம் சந்திப்பவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் தேங்காய் உடைத்து கொழுக்கட்டை படைத்து பிரார்த்தனை செய்தால் அவர்கள் பிரார்த்தனை உடனடியாக நிறைவேறும் என்று ஐதீகம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |