கடவுள் ஏன் துன்பத்தில் உடன் நிற்பது இல்லை
நம் எல்லோருக்கும் ஒரு வருத்தமும் கோபமும் இருக்கும், அதாவது இன்பத்தில் உடன் நிற்கும் கடவுள் துன்பகாலத்தில் நிற்கதியாக தவிக்காவிட்டாரே, என் அழுகை அவர் செவிகளை எட்ட வில்லையே என்று ஒரு விரக்தி ஏற்படும்.
அப்படியாக, உண்மையாகவே துன்ப காலத்தில் கடவுள் நம்மை விட்டு விலகிவிடுவாரா என்று பார்ப்போம்.
ஒரு ஊரில் சிவபக்தன் ஒருவர் மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தவறாமல் விரதம் இருந்து சிதம்பரம் நடராஜப்பெருமானை வழிபாடு செய்து வந்தார்.
மேலும், அவனின் ஆயுட்காலம் முடிய சிவகணங்கள் அவனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிவபெருமான் அவன் மண்ணில் வாழ்ந்த காலம் முழுவதும் அவரின் பக்தனை விட்டு விலகாமல் உடன் இருந்ததை தன் தெய்வீக சக்தியால் எடுத்துக்காட்டினார்.
அந்த பக்தனுக்கு ஆச்சரியம். அதாவது அவன் கடந்து வந்த பாதைகள் எங்கும் அவனுக்கு பின்னால் இரண்டு பாதங்களின் தடயம் இருப்பதை சுட்டிக்காட்டினார் சிவபெருமான். பக்தனே பார், நான் எப்பொழுதும் உன்னை பின் தொடர்ந்து உனக்காக நின்றதை பார் என்றார்.
அதை நன்றாக உற்றுப்பார்த்த பக்தனுக்கு மகிழ்ச்சியை விட கவலையே சூழ்ந்தது. சிவபெருமானும் ஏன் என்னாயிற்று கவலை கொள்கிறாய், என்று கேட்கிறார். அதற்கு பக்தன் சுவாமி தாங்கள் எல்லா நேரமும் என்னை பின் தொடர்ந்து காத்தது உண்மை என்றால், சில இடங்களில் உங்கள் காலடிச் சுவடுகள் இல்லையே.
தாங்கள் காலடி சுவடுகள் இல்லாத நேரத்தில் நான் துன்பத்தில் தவித்த காலம் என்பதை என்னால் நன்கு உணரமுடிகிறது என்றார். மகிழ்ச்சியில் என்னுடன் இருந்த தாங்கள் ஏன் கஷ்ட காலங்களில் உடனில்லையே? இது நியாயமா? எந்த ஒரு காலத்திலும் தங்களை போற்றி துதிப்பதை நான் நிறுத்தவில்லையே, என்று பக்தன் கேட்டான்.
அவன் சொல்வதை கேட்டு பொன்சிரிப்புடன் எம்பெருமான் சொல்கிறார். பக்தனே, நான் எப்போது உன்னை தனியாக விட்டேன்? உன்னுடைய முன்வினையால் அனுபவிக்கும் துன்பத்தில் கூட, உன்னை தூக்கிக்கொண்டு அல்லவா நடந்தேன்.
நன்றாக பார், துன்ப காலத்தில் தெரிவது உன் காலடிகள் அல்ல. உன்னக்கு கஷ்டம் தெரியாமல் இருக்க உன்னை தோளில் தூக்கிக்கொண்டு சுமந்த என்காலடி தடயங்கள் என்றார் ஈசன். அதைக்கேட்டு பக்தி பரவசம் அடைந்து " நற்றுணையாவது நமச்சிவாயவே" என்று சிவபெருமானை வணங்கினார்.
ஆக, மனிதர்கள் நாம் துன்பம் இல்லாத வாழ்க்கையை எதிர்பார்ப்பதே தவறு. துன்பமோ, இன்பமோ அனைத்தையும் ஏற்றும்கொள்ளும் பக்குவம் வரவேண்டும். அதே போல் இறைவன் எப்பொழுதும் தன் பக்தர்கள் துன்பத்தில் தவிப்பதை பார்க்க விருப்பம் கொள்ளமாட்டார்.
விதியால் செய்த வினையை அனுபவித்தாகவேண்டியது ஒவ்வொரு உயிர்களுடைய கடமை என்றாலும், அதில் இருந்து துவண்டு போகாமல் பாடம் கற்றுக்கொடுத்து மோட்சம் அருள்பவர் தான் இறைவன்.
அவர் எப்பொழுதும் துன்பத்திலும் இன்பத்திலும் நம்மை விட்டு விலகுவதில்லை, நாம் தான் இறைவனை சரியாக புரிந்து கொள்வதில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |