உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் தவறுகள்
நம் வீட்டில் பின்பற்ற வேண்டிய சில சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
* ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க வேண்டும், வாங்க வேண்டும்.
* நம் வீட்டில் செல்வம் பெருகவும் தங்கவும் செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்.
* வாங்குபவராலும் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்பக் கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது விசேஷம்.
* மேலும் வாசல்படி, உரல், ஆட்டுக்கல் மற்றும் அம்மி இவற்றின் மீது உட்கார கூடாது. அதேபோல், இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. வெற்றிலை, வாழை இலை இவற்றை வாட விடக்கூடாது.
* வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக்கூடாது. எரியும் குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது.
* வாயால் ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால்தான் அணைக்க வேண்டும்.
* ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்து விடுவான். அதேபோல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில் அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்து விடுகிறார். ஆகவே, இல்லம்தோறும் காலை வேளையில் வேங்கடேச சுப்ரபாதமும் மாலை வேலைகளில் விஷ்ணு சஹஸ்ர நாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
* வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். மகாவிஷ்ணுவின் அம்சமாக நெல்லி மரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு, ‘ஹரி பலம்’ என்ற பெயரும் உண்டு.
* லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் இது திகழ்கிறது. நெல்லி மரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது. நெல்லி மரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
* சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூரணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை, தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லட்சுமிக்கு மிகவும் பிடித்தவை. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
* பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக்கூடாது. அமாவாசை அன்று எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
* வீட்டு வாசலில் போடும் கோலத்தில் பசு சாணம் போட்டாலும் கோமியம் பெய்தாலும் இல்லத்தில் செல்வம் பெருகும். மகாலட்சுமி வீடு தேடி வந்திருக்கிறாள் என்று பொருள்.