இந்த ஒரு விஷயம் தெரிந்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.. என்ன தெரியுமா?
வாழ்க்கை மிகவும் எளிதானது. அதை நாம் புரிந்து கொள்ள தான் தயாராக இல்லை. அப்படியாக ஒரு இரக்க குணம் கொண்ட பெண் ஒருவள் தினம்தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாராவது வந்து எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச்சூழல் வைத்துவிடுவார். அந்த வழியாக வரும் ஒரு கூனல் முதுகு முதியவர் அந்த இட்லியை எடுத்துக்கொண்டு செல்வார்.
ஆனால் அவர் செல்லும் பொழுது ஏதோ புலம்பிக் கொண்டே செல்வார். அது வழக்கமாக இருந்தது. இந்த பெண்ணிற்கு அவள் வைக்கின்ற இட்லியை இந்த முதியவர் தான் எடுத்துச் செல்கிறார் என்று தெரியும். ஆனால் எடுத்துச் செல்லும் பொழுது ஏதோ புலம்பிக் கொண்டே இருக்கிறாரே என்று ஒருநாள் மதில் அருகிலேயே நின்று அந்த முதியவர் என்னதான் புலம்புகிறார் என்று கேட்க வேண்டும் என்று இருந்தார்.

அப்பொழுது அந்த முதியவர் புலம்பியது இதுதான் அதாவது "நீ செஞ்ச பாவம் உன்னிடம் இருக்கும், நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்" என்ன தினம் தோறும் இதைச் சொல்லிக் கொண்டே தான் இருந்திருக்கிறார். இதை கேட்டு அந்த பெண்ணிற்கு ஒரே கோபம். நான் தினமும் உணவு வைக்கிறேன், நல்லா இரு என்று வாழ்த்த வேண்டாம், கையெடுத்து கும்பிட வேண்டாம், நன்றி என்று சொல்ல வேண்டாம்.
ஆனால் "செஞ்ச பாவம் உன்னிடம் இருக்கும் செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும்னு" புலம்பிக் கொண்டே போறாரே, இவர் பித்தனா, இல்ல சித்தனா, இல்ல பரதேசியாக என அந்த முதியவரை திட்ட தொடங்கி விட்டாள். அவரை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளானாள். இப்படியே செல்ல ஒருநாள் அந்தப் பெண்ணிற்கு கோபம் தலைக்கேறி விட்டது.
இன்னும் சொல்லப்போனால் அது கொலை வெறியாக மாறியது. இப்படியாக ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து அவர் இறந்து விடட்டும் என மதில் மேல் வைக்கப் போனால். ஆனால் மனம் கலங்கியது. அந்த தவறை செய்ய கை தடுத்தது. சரி அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நாம் ஏன் இவ்வளவு மோசமானதாக செயல்பட வேண்டும் என்று அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டாள்.
பிறகு வேறு இட்லியை எடுத்து வந்து மதில் மேல் வைத்துவிட்டு மனம் அமைதியாகிவிட்டார். வழக்கம் போல் அந்த முதியவர் வந்தார், இட்லியை எடுத்துக்கொண்டு வழக்கம் போல் "நீ செஞ்ச பாவம் உன் கிட்டயே இருக்கும், நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்" என்று சொல்லிக் கொண்டே சென்றார். அந்த நேரமும் அந்த பெண்ணிற்கு கோபம் அடங்கவில்லை.

அன்று மதியம் அந்த பெண்ணின் வீட்டின் கதவு தட்டுகின்ற சத்தம் கேட்டது. வாசலில் வாலிபன் ஒருவன் கசங்கிய உடையுடன் தள்ளாடியபடி நின்றான். அதாவது வேலையோடு திரும்பி வருவேன் என்று சொல்லிவிட்டு ஒரு மாதம் முன்பாக வீட்டை விட்டுச் சென்ற ஒரே மகன்தான் அவன்.
கதவை திறந்த தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார் அம்மா வீட்டுக்கு திரும்பி வரும்போது என்னுடைய பர்ஸ் காணாமல் போய்விட்டது. கையில் பணம் இல்லை. தெரிந்தவர்கள் யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரமாக நடந்து கொண்டே இருக்கிறேன்.
நல்ல வெயில் பயங்கர பசி. மயங்கி விழுந்து விட்டேன். கண் முழித்து பார்த்த போது தான் கூன் முதுகு முதியவர் என்னை தூக்கி உட்கார வைத்து இரண்டு இட்லி கொடுத்து சாப்பிட சொன்னார். இட்லி சாப்பிட்ட பிறகு தான் எனக்கு நினைவு திரும்பியது. அதை கேட்ட பதறிப்போனால் அந்த பெண்.

விஷம் கலந்த இட்லியை வைத்து இருந்தால் அது அவனுடைய மகனுக்கே எமனாக போயிருக்கும். ஆண்டவா! என்று உள்ளம் கலங்கினார். இப்பொழுது அந்த பெண்ணிற்கு புரிந்தது "நீ செஞ்ச பாவம் உன் கிட்டயே இருக்கும், நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்" என்ற அந்த முதியவர் சொன்னதை முழுமையாக உணர்ந்தார்.
ஆக இந்த வாழ்க்கை ஒரு மெல்லிய கோட்டில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. இங்கு எல்லோருக்கும் எல்லாம் புரிந்து விடுவதில்லை. புரிகின்ற சமயத்தில் இங்கு யாரும் உயிருடன் இல்லை.
ஆதலால் நாம் செய்கின்ற தர்மமானது கட்டாயம் ஏதோ ஒரு உருவத்தில் நம்மை நிச்சயம் ஒரு கடினமான காலத்தில் வந்து காக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. தர்மம் செய்ய முடியாவிட்டாலும் தர்மம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை யே நம்மை காப்பாற்றும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |