கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்வு: உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவு
மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பது தொடர்பாக மதுரை ஆட்சியரின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.
உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் திகதி தொடங்கியது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் 23ம் திகதி நடைபெறுகிறது.
இதன்போது ஆட்டுத்தோலை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பைகளில் நறுமணத்துடன் கூடிய நீரை நிரப்பி கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக அதிக விசைத்திறன் கொண்ட பிரஷர் பம்புகள் மற்றும் வேதிப்பொருட்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் கள்ளழகர், தங்கக்குதிரை, ஆபரணங்கள் பாதிக்கப்படுவதாகவும், பக்தர்கள் பட்டாச்சாரியார்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து மதுரை ஆட்சியரான சங்கீதா, முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவானது நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, அதிக அழுத்தத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை தடுக்க வேண்டுமே தவிர, பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவதை எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.
மேலும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி 22ம் திகதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.