பாவங்கள் யாரையும் சும்மா விடாது.. மகாபாரதம் உணர்த்தும் 5 கசப்பான உண்மைகள்
மகாபாரதம் என்பது மனிதர்கள் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்? வாழக்கூடாது என்பதற்கு சான்றாகவும் பிரபஞ்சத்தினுடைய உண்மை தத்துவத்தை அவ்வாறே வெளிப்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான நூலாகவும் இருக்கிறது. மேலும், மஹாபாரதத்தில் அரசர்கள், வீரர்கள், முனிவர்கள், தெய்வங்கள் என பலரும் இடம் பெறுகின்றனர்.
அப்படியாக, இந்த கதையின் மையத்தில் இருப்பது மனிதர்களுடைய வாழ்க்கையும் தர்மம், அதர்மம், கர்மா, கடமை, பழிவாங்குதல், மன்னிப்பு போன்ற உண்மைகள் தான். அப்படியாக, மகாபாரதம் நமக்கு மிகப்பெரிய அளவில் பாடத்தை கற்றுக் கொடுத்தாலும் 5 கசப்பான உண்மைகளையும் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதை பற்றி பார்ப்போம்.

1.கர்மாவிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது:
நாம் மனிதர்கள் செய்யக்கூடிய எந்த ஒரு செயல்களில் இருந்தும் தப்பிக்க முடியாது. அதாவது நல்லது செய்தால் அதற்கான பலனையும், கெட்டது செய்தால் அதற்குரிய தண்டனையும் இந்த பிரபஞ்சத்திடமிருந்து கட்டாயம் நாம் பெற வேண்டியது உள்ளது. இதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக சத்தியவதி சம்பவம் அமைகிறது. கங்கையின் மகனான பீஷ்மர் அஸ்தினாபுரத்தின் இயல்பான வாரிசாக இருந்தார்.
ஆனால், சத்தியவதி தனது எதிர்கால மகன்கள் அரசாட்சியை பெற வேண்டும் என பீஷ்மரிடம் மிகப்பெரிய வாக்குறுதியை பெற்றுக் கொண்டார். அதாவது ஒரு பொழுதும் பீஷ்மர் அரசராக கூடாது என்றும் அவர் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரிகாக இருக்க வேண்டும் என்று வாக்குறுதியை கேட்க பீஷ்மரும் தர்மத்தின் காரணமாக வாக்குறுதியை ஏற்றுக்கொண்டார்.
ஆனால், அதன் விளைவுகள் சத்தியவதியின் குடும்பத்தை மிகப்பெரிய அளவில் பாதித்தது. அவளது மகன்கள் இளம் வயதில் இறந்தனர். அரசாட்சியில் நிலையான தன்மை இல்லாமல் போனது. கௌரவர்களின் அழிவுடன் அந்த வம்சம் முற்றிலுமாக முடிந்துவிட்டது. இதன் வழியாக மகாபாரதம் நமக்கு தவறான ஆசையால் செய்யப்படுகின்ற எந்த செயல்களுக்கும் ஒரு நாள் கட்டாயம் அதற்குரிய விளைவுகளை பெற்றாக வேண்டும் என்பதே ஆகும்.
2. தர்மம் தாமதிக்கலாம் ஆனால் தோற்றுப் போகாது:
மகாபாரதத்தின் முக்கியமான ஒரு பாடமே தர்மம் தான். பாண்டவர்கள் வாழ்க்கையில் துன்பத்தைத் தவிர அவர்கள் வேறு எதுவும் அனுபவிக்கவில்லை. சிறிய வயதிலே காடுகளுக்கு சென்று வாழ நேர்ந்தது. அரண்மனை அரசியல் சூழ்ச்சிகளை எதிர்கொள்ள நேர்ந்தது. சூதாட்டத்தில் நாட்டையும் இழக்க நேர்ந்தது.
13 ஆண்டுகள் வனவாசம் அனுபவிக்க நேர்ந்தது. ஆனால், எவ்வளவு பெரிய இக்கட்டான நிலை வந்த போதிலும் அவர்கள் தர்மத்தை கைவிடவில்லை. இறுதியில் அவர்களுக்கு என்ன கிடைத்தது என்று பலருக்கும் யோசனை வரலாம்?
யுத்தத்தில் வெற்றியடைந்தனர். அவர்களுக்கு உரிய அரசாட்சியை மீண்டும் பெற்றனர். இந்த சம்பவம் நமக்கு உணர்த்தக் கூடியது தர்மம் காலதாமதமாக வந்தாலும் அது சரியான நேரத்தில் வெற்றி வாகையை சூடிவிடும் என்பதே ஆகும்.
3. அநீதியை கண்டு மௌனமாக இருப்பது மிகப் பெரிய குற்றம்:
மகாபாரதத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் பாஞ்சாலி. கௌரவர்களின் சபையில் பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்ட பொழுது அவையில் இருந்தவர்கள் எல்லோரும் சாதாரண மனிதர்கள் அல்ல. அங்கு இருந்தவர்கள் பீஷ்மர், துரோணர் கர்ணன், கிருபாச்சாரியார் என்று பல அறிஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் தர்மம் அதர்மம் பற்றிய அறிவுரை தேவை இல்லை.
ஆனால் அவர்கள் கண் முன் நடக்கின்ற அநீதியை யாரும் முன் வந்து தடுக்கவில்லை. தர்மத்தை விழுங்கிக் கொண்டு மௌனமாக இருந்தார்கள். அவர்களுடைய மௌனத்திற்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? குருசேத்திர போரில் அந்த மாபெரும் வீரர்கள் எல்லோரும் உயிரிழந்தன. இதன் மூலமாக உணர்த்தக்கூடிய மிகப்பெரிய உண்மை.
ஒருவர் அநீதி செய்தால் தான் அவர்களுக்கு பாவம் சேரும் என்பது அல்ல. அநீதி நடக்கின்ற இடத்தில் அமைதியாக இருப்பதும் அநீதிக்கு மறைமுகமாக துணைச் செல்வதுதான். பிறகு காலத்தினால் அவர்கள் அதற்குரிய தண்டனை பெற்றாக வேண்டும்.

4. போரில் வெற்றி கிடைத்தாலும் இழப்பு தவிர்க்க முடியாது:
போர் என்று வரும் பொழுது அங்கு ஒருவருக்கு தான் வெற்றி, மற்றொருவருக்கு தோல்வி என்றாலும் இழப்பு இரு பக்கங்களுக்கும் இருக்கும். குருசேத்திரப் போரில் கௌரவர்கள் முழுமையாக அழிந்து போனார். ஆனால், பாண்டவர்கள் பக்கமும் மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டது.
போரில் உயிரிழந்தவர்கள் பாண்டவர்களுக்கு உயிருக்கும் மேலானவர்களாக இருந்தனர். அபிமன்யு, கடோத்கஜன், பாஞ்சாலியின் ஐந்து மகன்கள் என பல ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிர் மடிந்து போனர்.
இதன் வழியாக மகாபாரதம் நமக்கு சொல்லக்கூடிய செய்தி போர் என்று வந்து விடுகின்ற பொழுது இங்கு யாருக்கும் முழுமையான வெற்றி கிடைப்பது இல்லை. அது இழப்புகளையும் கண்ணீரையும் மட்டும் அதிகமாக கொடுக்கும் என்பதே ஆகும்.
5. வெற்றி எப்போதும் மகிழ்ச்சியை தராது:
மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு பாண்டவர்கள் அரசாட்சியை பெற்றனர். ஆனால் அவர்கள் மனதில் துளி அளவு மகிழ்ச்சியில்லை. அவர்கள் மனதில் ஆட்சியைப் பிடித்ததை விட போரில் உயிரிழந்த உறவுகளும், அவர்களுடைய உண்மையான மூத்த சகோதரர் ஆன கர்ணனின் இழப்பும், போரின் அழிவுகள் என்று இது தான் அவர்களை வாட்டி வதைத்தது.
அதனால் அவர்கள் சில ஆண்டுகள் மட்டுமே அரசாட்சி புரிந்தனர். பிறகு அரசாட்சியை பரீட்சித்து மகாராஜாவிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் மோட்சத்தை தேடி இமயமலை நோக்கிய பயணம் செய்தனர். இதன் வழியாக மகாபாரதம் சொல்லக்கூடிய கடைசி உண்மை. வாழ்க்கையில் வெற்றிகள் கிடைத்தாலும் பல நேரங்களில் அவை மன அமைதியை கொடுப்பதில்லை.
ஆக, மகாபாரதம் ஒரு கதை மட்டும் அல்ல அது மனித வாழ்க்கையை பிரதிபலிக்க கூடிய ஒரு கண்ணாடி. தர்மம், கர்மா, நீதி, பொறுப்பு இவையெல்லாம் எவர் ஒருவர் மறந்து போகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் எதுவும் நிலைப்பதில்லை என்பதே ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |