இந்த ஒரு விஷயம் தெரிந்து விட்டால் எதையும் சாதித்து விடலாம்
மனிதனுடைய பிறப்பு என்பது பல ஆச்சரியங்கள் நிறைந்தது. பல தேடல்கள் கொண்டது இந்த வாழ்க்கையின் தேடல்களில் நாம் சில நேரம் தொலைந்து போகிறோம், சில நேரம் மகிழ்ச்சியில் திளைக்கின்றோம், சமயங்களில் துன்பத்தில் மூழ்குகின்றோம். ஆக வாழ்க்கை தேடல் என்பது உணர்வு ரீதியாக நிரம்பி இருக்கிறது.
இங்கு ஒவ்வொரு தேடல்கள் முடிவிலும் நாம் ஒவ்வொரு விடையை எதிர்பார்க்கின்றோம். அதாவது நான் இதை செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று பலரும் பல விஷயங்களை எதிர்பார்த்தே செய்கிறார்கள்.
இதனால் வரக்கூடியது அந்தத் தேடலுக்கான விடை அல்ல மனதில் துன்பமே. பகவத் கீதையில் கிருஷ்ணர் பெரும்பாலான இடங்களில் சொல்லக் கூடிய ஒன்று கடமையைச் செய்யுங்கள் என்பதே.
இந்த கடமையை செய்யுங்கள் என்பதற்கு பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்திருக்கிறது. அதாவது உன்னுடைய கடமையைச் செய்வதனால் உன்னுடைய கர்ம வினைகள் குறைகிறது, உன்னுடைய கடமையை செய்வதனால் உன்னோட வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கிறது, உன்னுடைய கடமையைச் செய்வதனால் உனக்கு புண்ணியம் சேருகின்றது, மேலும் கடமையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதால் வெற்றி வசமாகிறது.
ஆக கடமை என்பதுதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கை. இங்கு பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையைப் பற்றி பயம் அதிகம் இருக்கிறது.சிலர் அந்த பயம் விலக ஆன்மீகப் பயணத்தில் செல்வார்கள், சிலர் ஜோதிடத்தை தேடி செல்வார்கள், இன்னும் சிலர் அவர்களுக்கு ஏற்றவாறு பல நிலைகளில் அவர்கள் வாழ்க்கையை தேடுதலை தேடிக்கொண்டு தன்னுடைய பயத்தை போக்கிக் கொள்வார்கள்.
உண்மையில், இந்த உலகத்தினுடைய ஒரே ஒரு தாரக மந்திரம் நீ எதுவாக வேண்டுமானாலும் இரு, என்ன வேண்டுமானாலும் செய், உனக்கு விதிக்கப்பட்டவை நீ வேண்டாம் என்று தடுக்கவும் முடியாது பிறர் அதை வேண்டுமென்றாலும் அதை எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த தாரக மந்திரத்தை கொண்டு தான் கிருஷ்ண பகவான் சொல்லுகிறார் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று. உன்னுடைய வேலையை சரியாக செய்து கொண்டிருக்கும் பொழுது நீ என்ன நினைக்கிறாயோ அதை இந்த பிரபஞ்சமும் உன் கைகளில் கொண்டு வந்து சேர்க்கும்.
இந்த உண்மை நாம் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் சமநிலை உருவாகிவிடும். மனதில் அமைதி வரும். எதற்கும் சலனம் கொள்ள மாட்டோம். என்ன நடக்கிறதோ அதை அவ்வாறே ஏற்றுக் கொள்வோம். எல்லாம் அவன் செயல் என்று ஒரு புரிதலுக்கு வருவோம். ஆக நடத்துபவன் அவன், நடத்தி முடிக்க கூடியவன் அவன் எல்லாம் அவன் கைகளில் இருக்க இங்கு எவரும் தப்ப முடியாது.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







