சனிபகவானின் கொடிய தாக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஜோதிடத்தில் சனிபகவான் தான் ஒரு மனிதனுடைய கர்ம வினையை அடியோடு அழிக்க கூடியவர். மற்ற கிரகங்கள் நமக்கு சற்று சாந்தமான நிலையில் பாடங்களை கற்றுக் கொடுத்தாலும் சனி பகவான் எந்த ஒரு இரக்கமும் இன்றி கடுமையான தாக்கத்தை தான் கொடுப்பார். அந்த தாக்கமானது, சில நேரங்களில் மரணத்திற்கு நிகரான அளவிற்கு ஒரு மிகப்பெரிய வலியாக இருக்கும்.
அந்த வகையில், நம்முடைய ஜாதகம் எந்த ஒரு அமைப்பில் இருந்தாலும், நமக்கு நடக்கின்ற தசா புத்திகள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும், கோச்சார கிரகங்கள் நமக்கு எந்த அளவிற்கு பாதிப்பை கொடுக்கக்கூடிய அமைப்பில் வந்தாலும் நாம் இந்த ஒரு சில விஷயங்கள் செய்தால் நிச்சயம் கடினமான காலகட்டங்களிலும் நாம் வளமான வாழ்க்கையை வாழலாம்.

ஒருவர் பிறந்த ஜாதக கட்டம் என்பது எல்லாம் இறைவன் கொடுக்கின்ற வரம். அந்த கட்டங்களில் இருக்கக்கூடிய கிரகங்களை கட்டாயமாக நாம் மாற்ற முடியாது. இருந்தாலும், அந்த கிரகங்கள் கொடுக்கக் கூடிய தாக்கத்தை நாம் குறைக்க முடியும்.
ஜாதகம் என்பது இந்த நபருக்கு இதுதான் நடக்கும் என்று சொல்வதை கடந்து, நாம் யார் என்று புரிந்து கொண்டு அதிலிருந்து நாம் எவ்வாறு நம்மை சரி செய்து வாழ வேண்டும் என்று ஒரு வழிகாட்டக்கூடிய புத்தகமாகவே பார்க்கவேண்டும்.
ஜாதத்தில் தீய பலனே இருந்தாலும், நம் வாழ்வை மாற்ற எந்த ஒரு முயற்சியிலும் இறங்கவில்லை என்றால் நம் வாழ்க்கை ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய மோசமான நிலையை விட மிக மோசமான நிலைக்கு சென்று விடும். அதனால்தான் முன்னோர்கள் காலம் காலமாக இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள், தர்ம காரியங்கள் செய்து வாழ்க்கை வாழுங்கள் என்று நமக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.
ஆக உங்களுடைய ஜாதக அமைப்பு எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்களை சுற்றி இருக்கக்கூடியவர்கள் மிக கொடியவர்களாக கூட இருக்கட்டும். உங்களுடைய மனமானது தர்ம சிந்தனை நிறைந்ததாகவும் கடவுள் சிந்தனையோடும் இருந்து விட்டால் வருகின்ற ஆபத்துகளும் உங்களை காப்பாற்ற கூடிய கவசமாகவே மாறும்.

எப்படி பக்தன் பிரகலாதான் கொடிய அரக்கனுக்கு மகனாக பிறந்திருந்தாலும், எது சரி என்று சிறுவயதில் உணர்ந்து யாரைப் பற்றிக் கொண்டால் நம் ஆன்மாவிற்கு மோட்சம் கிடைக்கும் என்று உணர்ந்து எத்தகைய தீய செயல்கள் செய்ய தூண்டினாலும் அவன் அதை வலுவாக மறுத்து பகவான் நாமத்தை மட்டுமே உச்சரித்து, நல்லதை மட்டுமே செய்வேன் என்று போராடி பகவானுடைய பரிபூரண அருளை பெற்றானோ அதேபோல் தான் நாம் மனிதர்கள் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
எத்தனை பெரிய அதிர்ஷ்டமும் தவறு செய்வதனால் வருகிறது என்றாலும் அதை செய்ய மறுத்து தர்மத்தோடு நடக்கின்ற உள்ளம் இருந்துவிட்டால் சனி பகவான் உங்களின் நண்பராகவே இருப்பார். நீங்கள் பார்க்க தவறி விஷயங்களையும் உங்களை சூழ்ந்து இருக்கக்கூடிய எதிரிகளையும் அவ்வப்போது சரியான வெளிச்சத்தோடு உங்களுக்கு காட்டிடுவார்.
எந்த முன்னேற்றத்திற்காக ஏங்கிப் போராடிக் கொண்டிருக்கிறீர்களோ அந்த முன்னேற்றத்திற்கான சரியான பாதையை உங்களுக்கு போட்டுக் கொடுப்பார். இந்த அருளை நீங்கள் பெற வேண்டும் என்றால் நல்ல மனிதனாக வாழ வேண்டும். அந்த செயலால் மட்டும் தான் உங்களை எப்பொழுதும் காப்பற்ற முடியும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |