12 ஜோதிர்லிங்க வழிபாடுகளும் அதன் நன்மைகளும்
சிவபெருமான் அவர் கர்ம வினைகளை அடியோடு அகற்றக்கூடியவர். எவர் ஒருவர் சிவபெருமானை வழிபாடு செய்ய தொடங்குகிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள பாவங்கள் எல்லாம் விலகி தெளிவான மனநிலையும், ஞானம் பிறக்கிறது.
அப்படியாக, சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி கொடுத்த பிறகு 12 வடிவங்களாக பிரிந்து, அருள் புரியும் தலங்கள் ஜோதிர்லிங்க தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களும் ஒவ்வொரு சிறப்புகள் கொண்டது.
சிவபக்தர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது 12ஜோதிர்லிங்க தலங்களில் ஏதேனும் ஒரு தலங்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட மாட்டோமா என்று எண்ணுவதுண்டு. நாம் இப்பொழுது சிவபெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த 12 ஜோதிர்லிங்க தலங்களை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்களும் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்.
1. பீமாசங்கர் ஜோதிர்லிங்கம் மகாராஷ்டிராவில் உள்ளது. இங்கு சென்று வழிபாடு செய்தால் மனதில் வாழ்க்கையை பற்றிய பயம் விலகுகிறது. கடந்த கால துன்பத்தில் இருந்து விடுபட இங்கு சென்று வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
2. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் எல்லோராவுக்கு அருகில் மகாராஷ்டிராவில் உள்ளது. பரம்பரை தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்தால் நல்லதோர் நிவாரணம் பெறலாம்.
3. காசி விஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் வாரணாசியில் உள்ளது. சிலருக்கு வாழ்க்கையின் உண்மை நிலையை புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். அவர்கள் வாழ்க்கையின் புரிதல் தெரிந்து கொள்ளவும் ஆன்மீக அறிவை வளர்த்து கொள்ளவும் காசி செல்வது ஞானத்தை வழங்கும்.
4. கேதார்நாத் ஜோதிர்லிங்கம் உத்தரகண்டில் உள்ளது. வாழ்க்கையில் தெரியாமல் செய்த பாவங்கள் கட்டாயமாக நம் வாழ்நாள் முழுவதும் நம்மை நிம்மதி இழக்க செய்யும். அவ்வாறு துன்பப்படுபவர்கள் கட்டாயம் ஒருமுறை இங்கு சென்று வர சிவன் அருளால் பாவங்கள் விலகி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
5. மகா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. சிலர் எதிர்மறை சக்திகளால் அதிகம் துன்பப்பட நேரிடும். அவர்கள் வாழ்நாளில் கட்டாயம் ஒருமுறை இங்கு சென்று வர அவர்களை சுற்றி உள்ள தீய சக்திகள் விலகி நேர்மறை ஆற்றல் பெருகும்.
6. மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்கம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. இங்கு சென்று வழிபாடு செய்தால் பிறவா வரம் அருள்கிறார் சிவபெருமான்.
7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம் குஜராத்தில் உள்ளது. சிலருக்கு வாழ்க்கையில் எதிரிகள் அதிக அளவில் இருப்பார்கள். திரும்பும் திசை எல்லாம் பிரச்சனைகளாக தான் இருக்கும். அவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்தால் கட்டாயம் எதிரிகள் தொல்லை விலகி நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
8. ஓம் கரேஷ்வர் ஜோதிர்லிங்கம் மத்திய பிரதேசத்தில் ஒரு தீவில் அமைந்துள்ளது. இங்கு சென்றால் நம்முடைய மனம் சமநிலையை அடைகிறது. ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
9. ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த கோயில் ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட சிறப்பு வாய்ந்த ஆலயம் ஆகும். இங்கு சென்று வர வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையாக அமையும். தடைகள் யாவும் விலகும்.
10. சோமநாத் ஜோதிர்லிங்கம் குஜராத்தில் உள்ளது. சிலர் காரணமே இல்லாமல் அடுத்த அடுத்த துன்பத்திற்குள் சிக்கி கொள்வார்கள். அதற்கு அவர்களின் கர்ம வினைகளே காரணம் என்று சொல்லலாம். அவர்கள் இங்கு சென்று வர கட்டாயம் அவர்களின் கர்ம வினை தீர்ந்து நல்ல மாற்றம் கிடைக்கும்.
11. திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம் நாசிக்கில் மகாராஷ்டிராவில் உள்ளது. சிலருக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதியை இழந்து நிற்பார்கள். அவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்து வர அவர்கள் வினைகள் யாவும் விலகி குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
12. வைத்தியநாதர் ஜோதிர்லிங்கம் ஜார்கண்டில் உள்ளது. இது 'சுகமளிக்கும் கடவுள்' என்று அழைக்கப்படுகிறது. அடிக்கடி ஆரோக்கிய குறைபாடுகளை சந்திப்பவர்கள் இங்கு சென்று வர அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |