பங்குனி உத்திரம் ஏன் அவ்வளவு விஷேசமானது? அன்று செய்யவேண்டிய வழிபாடு
தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருத்துப்படுகிறது. நம்மில் பலரும் பங்குனி உத்திரம் என்பது முருகப்பெருமானுக்குரிய விரத நாள் என்று தான் அறிவோம். ஆனால், நம்மில் பலரும் அறிந்திடாத பல விசேஷங்கள் இந்த பங்குனி உத்திர நாளில் இருக்கிறது.
அப்படியாக, நாம் பங்குனி உத்திர நாளில் என்ன செய்யவேண்டும்? மேலும் அன்றைய நாளில் உள்ள முக்கியமான நாம் அறிந்திடாத சிறப்பம்சம் பற்றி பார்ப்போம். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்ரல் 11ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
மேலும், ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய நட்சத்திரத்திற்கு ஒவ்வொரு சிறப்புக்கள் கொண்டு வழிபாடு செய்யப்படுகிறது. அதில் பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்திற்கு அதிக மகத்துவம் உண்டு.
காரணம், இந்தத் திருநாளில் தான் தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகிறது. பங்குனி உத்திர விரத நாளை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவதுண்டு.
1. மதுரை ஆளும் அரசி மீனாட்சியை கரம் பிடித்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி கொடுத்ததும், சிவபெருமான், அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி கொடுத்ததும், ஈசன் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டு, ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இந்த பங்குனி உத்திரம் தான்.
2. அதே போல் ஸ்ரீ ரங்கநாதர் ஆண்டாள் திருக்கல்யாண நடந்த நாளும் இதுதான். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தயார் பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
3. இந்த பங்குனி உத்திர நாளில், காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும். அப்பொழுது அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.
4. அனைவரும் போற்ற கூடிய ராமாயணத்தில் தசரத மன்னரின் மைந்தர்களான ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்று ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
5. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
6. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமேஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்று தான்.
பங்குனி உத்திரம் அன்று செய்யவேண்டியவை:
1.நீண்ட நாள் திருமண தடையை சந்திப்பவர்கள் இந்த பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் விரைவில் அவர்களுக்கு விரைவில் இறைவன் அருளால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
2. பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திரு விளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.
3. 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையார் பங்குனி உத்திரம் நன்னாளில் தான் முக்தி அடைந்தார்கள். ஆதலால் அன்றைய தினத்தில் நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம் கொடுக்கும்.
4. மேலும், அன்றைய தினம் கோயில்களில் திருமண வைபவம் நடைபெறும். அங்கு சென்று அந்த வைபவத்தில் விரதம் இருந்து கலந்து கொண்டு காண்பது மிக சிறந்த பலன் கொடுப்பதோடு, திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
5. பங்குனி உத்திரம் நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், திருமோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |