முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாதத்தில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொள்வோம்
தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தை மாதவ மாதம் என்றும், விசாகம் என்றும் சொல்லுவார்கள். விசாகம் என்றால் "மலர்ச்சி" என்று பொருள். இந்த மாதம் இறைவழிபாட்டிற்கு உரிய மிக சிறந்த மாதம் ஆகும்.
அதில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் பௌர்ணமி திதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்கிறார்கள். அன்றுதான், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட அந்த ஒளிப்பிழம்புகள், சரவணப்பொய்கையின் தூய்மையான நீரில் ஆறு அழகிய குழந்தைகளாக அவதரித்தன. இந்த அற்புதமான நிகழ்வு வைகாசி மாதத்தில் தான் நடந்தாக சொல்லப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு எவ்வாறு பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை சிறப்பு வாய்ந்த நாளாக போற்றப்படுகிறதோ, அதே போல் வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.
அதே போல், இந்த வைகாசி மாதத்தில் தான், தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்மர் அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கிறது. ஆன்மீகத்தில், அமைதியின் ரூபமாக போற்றப்படும் புத்தர் அவதரித்த தினமும் வைகாசி பௌர்ணமி என்று வரலாறு சொல்கிறது.
அதே சமயம், அதே பௌர்ணமியில் தான் கயாவில் போதி மரத்தடியில் அவர் ஞானம் பெற்றதாகவும் சொல்கிறார்கள். சைவ மதத்தில் 63 நாயன்மார்களில் திருஞானசம்பந்தர், கழற்சிங்கர், சோமாசி மாறன், நமிநந்தி அடிகள், திருநீலநக்கர், முருக நாயனார், திருநீலகண்ட யாழ்பாணர் ஆகியோர் இந்த வைகாசி மாதத்தில் தான் பிறந்துள்ளனர்.
உலகத்தில் நீதிமானாக இருக்கும் எமதர்மராஜர் அவதரித்த மாதமும் வைகாசி மாதம் என்கிறார்கள். ஆகையால் எமதர்மராஜன் எழுந்தருளியுள்ள ஸ்ரீவாஞ்சியம் மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் நாம் இறைவழிபாடு செய்து நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை போக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |