நள்ளிரவில் பக்தர்கள் தரிசனம்: அழகர் மலை நோக்கி புறப்பட்ட கள்ளழகர்
பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்த கள்ளழகர் தனது இருப்பிடம் நோக்கி புறப்பட்டார்.
மதுரை அழகர்கோயில் கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 19ம் திகதி தொடங்கியது.
21ம் திகதி தங்க பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்ட கள்ளழகர், 23ம் திகதி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது, அன்றிரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் தங்கினார்.
நேற்று முன்தினம் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார், இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் புறப்பட்டு மதிச்சியம், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
சந்தனம், மஞ்சள், வாசனை திரவியங்கள் உட்பட கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, நறுமண பூக்களை கொண்ட பூப்பல்லக்கில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன் எழுந்தருளினார்.
அங்கு தீபாராதனை காட்டப்பட்டு கள்ளர் திருக்கோலத்தில் அழகர் மலையினை நோக்கி புறப்பட்டனர்.
நள்ளிரவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர், கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட இருப்பிடம் நோக்கி புறப்பட்ட கள்ளழகர் நாளை காலை இருப்பிடம் சேர்கிறார்.