சுக்கிர தோஷத்தில் இருந்து விடுபட ஒருமுறை செல்ல வேண்டிய ஆலயம்
வேத சாஸ்திரத்தில் நவகிரகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அவற்றுள் ஆறாவது கிரகமாக சுக்கிர பகவான் திகழ்கிறார். ஒருவன் மனநிறைவோடு வாழ்வதில் சுக்கிர பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார்.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமடைந்து பலம் குன்றி இருந்தாலோ அல்லது சுக்கிரன் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஆதிபத்ய தோஷம் பெற்று இருந்தாலோ, அவற்றுக்கெல்லாம் பரிகாரத் தலமாக அமைந்துள்ளது திருகஞ்சனூர் தலம் திகழ்கிறது. இத்தகு சிறப்பு மிக்க திருகஞ்சனூர் தலத்தினை குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
அக்னீஸ்வரர் திருக்கோயில்:
தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூரில் அமைந்துள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் சுக்கிரனுக்குரிய தலமாகும். மூலவர் அக்னீஸ்வரர், தாயார் கற்பகாம்பாள். தல விருட்சம் பலா, புரசு. அக்னி தீர்த்தம், பராசுர தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் இத்தலத்தில் அமைந்துள்ளன.
பலாசவனம், பராசபுரம், பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திரிபுரி என்ற பெயர்களும் கஞ்சானூருக்கு புராணத்தில் உண்டு. கஞ்சமாரன் நாயனார் இவ்வூரில் பிறந்ததால் கஞ்சனூர் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
பராசர முனிவருக்கு சிவபெருமான் தாண்டவம் ஆடி முக்தியளித்த தலமாக இது விளங்குகிறது. எனவே இங்குள்ள நடராஜர் முக்தி தாண்டவ மூர்த்தி என அழைக்கப்படுகிறார்.
கோயில் அமைப்பு:
மிகப்பழமையான கோயிலான அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது.தெற்கு வாயில் வழியாக உள்ளே வந்தால் உள் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தை அடைந்தால் இடது புறம் விநாயகர் தரிசனம், வலதுபுறம் விசுவநாதர் சன்னதி, அடுத்து அம்பாள் சன்னதி.
உள் வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதிக்கு செல்லும் போது இடது புறம் விநாயகர், மயூரசுப்பிரமணியன், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார்.
தல வரலாறு:
கஞ்சனூரில் வாழ்ந்து வந்த வாசுதேவர் என்னும் வைணவர் அவருக்கு பிறந்த குழந்தைக்கு சுதர்சனன் என பெயர்சூட்டினார். வைணவத்தில் பிறந்த அந்த குழந்தை சிவபக்தராக வளர்ந்தது. திருநீரு, ருத்திராட்சம் அணிந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஓதியதுடன் அந்த ஊரில் உள்ள அக்னீஸ்வரர் திருக்கோயிலுக்கும் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தது.
தந்தை வாசுதேவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்த குழந்தை தந்தை சொல்லை கேட்கவில்லை. ஊர் மக்களுக்கும் சுதர்சன் செய்வது பிடிக்கவில்லை. எனவே அந்த ஊர் மக்கள் பழுக்க காய்ச்சிய இரும்பு முக்காலியின் அந்த குழந்தையை அமரச் சொன்னார்கள். குழந்தையும் அதன் மீது அமர்ந்து சிவமே பரம்பொருள் என மும்முறை கூறியதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர்.
இந்தக் காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியிலும் அமைக்கப்பட்டுள்ளது.
சுக்கிர பகவான்:
மும்மூர்த்திகளுள் ஒருவரான பிரம்மாவின் மானஸ புத்திரரான பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் பிறந்தவரே சுக்கிர பகவான். இதனால் இவர் பார்கவன் என்ற பெயரை பெற்றார். இவருக்கு கவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. சிறந்த சிவபக்தரான சுக்கிரன், சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை கற்றறிந்தார்.
வெள்ளை நிறம் கொண்டவர். ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையை குறித்துக் கூறும் கிரகமாக திகழ்வதால் களத்திர காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அவர் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அனுபவித்து விடுவார்.
சுக்கிரன் தலம்:
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் சுக்கிரனுக்குரிய தலமாக உள்ளது. சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இந்த தலமும் ஒன்று. மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியாரின் அருளை பெற மக்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபாடு செய்கின்றன. ஒருமுறை சுக்ராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது.
இந்த தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற நாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு சுக்கிர தோஷம் நீங்கப் பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு எனவும் கூறப்படுகிறது.
கல் நந்தி புல் உண்ட கதை:
பிராமணர் ஒருவர் கொடுத்த புல் கட்டை உண்ட பசுங்கன்று ஒன்று இறந்துவிட்டது. இதனால் அவருக்கு பசு தோஷம் ஏற்பட்டது. செய்வதறியாமல் திகைத்த அந்த பிராமணரும் ஹரத்தரிடம் முறையிட்டார். முறையிடும் போது பஞ்சாட்சாரத்தை சொல்லியவாறே சென்றார். அதைக் கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தை சொல்லியதால் அந்த தோஷம் நீங்கிவிட்டதாக கூறினார்.
பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களுக்கு நிரூபிக்க வேண்டினர். ஹரதத்தரும் உடனே அந்த பிராமணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அதை கல் நந்தியிடம் தருமாறு கூறினார். ஹரதத்தர், “கல் நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்” என்று புல்லைத் கல் நந்திக்கு தர, அந்த நந்தியும் அதை உண்டதாக வரலாறு கூறுகிறது.
தோஷத்தில் இருந்து விடுபட:
சுக்கிரனுக்கு வெண் பட்டாடை சாற்றி, வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் சுக்கிர தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.30 முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாட்டிற்காக கோயில் திறந்திருக்கும்.
கோயில் அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில் வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று, கோட்டூர் - கஞ்சனூர் என்று வழிகாட்டிப் பலகை உள்ள சாலையில் பிரிந்து இத்தலத்தை அடையலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |