முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த கந்த சுக்கிர விரதம் பற்றி தெரியுமா?
இந்த கலியுகத்தில் அனைவரது நம்பிக்கையாக திகழ்பவர் முருகப்பெருமான். அப்படியாக, முருகப்பெருமானுக்கு சஷ்டி விரதம், தைப்பூசம் வழிபாடு என்று பல்வேறு சிறப்புக்கள் வழிபாடு இருந்தாலும், முருகனுக்குரிய முக்கியமான வழிபாடான கந்த சுக்கிர விரதம் மிகவும் சிறப்பானது.
பலருக்கும் இந்த விரதம் பற்றி தெரிவதில்லை. அதாவது கந்த சுக்கிர விரதம் முருகப்பெருமானுக்கு வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம் ஆகும். ஒரு மனிதன் அவனின் இழந்த விஷயங்களை மீட்டு எடுக்கும் விரதமாக இந்த கந்த சுக்கிர விரதம் இருக்கிறது.
நம் வாழ்க்கையில் சந்திக்கும் துன்பம் துரோகம் உடல் உபாதைகள் போன்ற விஷயங்களை வளமாக்கி அருளிச்செய்யும் விரதம் தான் இந்த கந்த சுக்கிர விரதம். பொதுவாக இந்த விரதத்தை ஐப்பசி முதல் வெள்ளிக்கிழமையில் தொடங்கி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூன்று ஆண்டுகள் விரதம் இருக்க வேண்டும்.
இந்த விரதம் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், கந்த குருக்கவசம் போன்ற பாடல்கள் பாடி வழிபடுவது கூடுதல் சிறப்பு கொடுக்கும். மேலும் விரத வேளையில் "ஓம் சரவணபவ" என்னும் மந்திரத்தை ஜெபித்து கொண்டு இருப்பது நம்முடைய மனதை சுத்தம் செய்து மன வலிமை அளிக்கிறது.
விரதம் இருப்பவர்கள் மதியம் ஒரு வேளை மட்டும் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். முடிந்தவர்கள் இரவு வேளையில் முருகன் கோயிலுக்கு சென்று விளக்கு ஏற்றுவது நல்ல பலன் கொடுக்கும்.
அதாவது பார்க்கவ முனிவரின் ஆலோசனைப்படி மூன்றாண்டு விரதம் இருந்ததால் பகீரதன் ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, நாமும் முழு மனதோடு விரதம் இருந்து வழிபாடு செய்ய நாம் நினைத்த காரியம் நடந்து வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |