கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு
முந்தைய காலத்தில் குருகுலம் என்ற ஆசிரமம் போன்று இருக்கும் இடத்தில் சிறுவர்கள் தங்கி கல்வி கற்பதுடன், அனைத்துவிதமான போதனைகளையும் அங்கிருக்கும் குரு தன்னுடைய சீடர்களுக்கு கற்றுக்கொடுப்பார்.
இதில் ஒரு சீடரால் கடவுள் எங்கிருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலை இந்த பதிவில் கதையாக தெரிந்து கொள்ளலாம்.
கடவுள் எங்கே இருக்கிறார்?
குருகுலத்தில் திறமைசாலியும், புத்திசாலியுமான சைதன்யா என்பவர் மீது குரு கூடுதல் அன்மை காட்டி வந்துள்ள நிலையில், சைதன்யாவிற்கு 16 வயது நிரம்பியதால், கலைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டு முடித்துள்ளார்.
இறுதியில் வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்ட போது குரு சைதன்யாவை அழைத்து, நீ இனி உனது வீட்டிற்கு செல்லலாம்... இறைவன் உன்னோடு துணை இருப்பதாக ஆசி கூறி வழியனுப்பினார்.
ஆனால் இதனைக் கேட்ட சைதன்யா, குருவிடம் தனக்கு எல்லாம் கற்றுக்கொடுத்தீர்கள்... ஆனால் கடவுளை காணவில்லையே... தனது கண்ணில் தெரியாத ஒருவர் எவ்வாறு எனக்கு துணையிருப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளான்.
உடனே குரு உனது கேள்விக்கு நான் பதிலளிக்கின்றேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்றார். இந்த வழியாய் காட்டுக்குள் சென்றால் சுனந்தநகர் என்ற ஊரில் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவர்களிடம் நலம் விசாரித்து வர அனுப்பியதுடன், கையில் தனது மனைவியிடம் கூறி சில திண்பண்டங்களை செய்தும் சைதன்யாவிடம் குரு கொடுத்து அனுப்பியுள்ளார்.
குறித்த காட்டின் பாதையில் சைதன்யா நடந்து சென்று கொண்டிருந்த போது, வழியில் கண்தெரியாத நபர் ஒருவர் சில இலைகளை முகர்ந்து பார்த்து பறித்துள்ளார். அவரிடம் சைதன்யா ஐயா என்ன செய்கிறீர் என்ற கேட்ட போது, தனக்கு கண் தெரியாது... ஆதலால் மூலிகை இலைகளை முகர்ந்து பார்த்து பறிக்கிறேன். இது பாம்புக்கடிக்கான மூலிகை நீ செல்லும் வழியில் உனக்கு இது தேவை என்றால் பயன்படுத்திக் கொள் என்று சைதன்யாவிடம் சில மூலிகை இலைகளை கொடுத்துள்ளார்.
அதை பெற்றுக்கொண்ட சைதன்யா.. அங்கிருந்து செல்லும் முன்பு தாகமாக இருக்கின்றது தண்ணீர் கிடைக்குமா என்று அந்த வைத்தியரிடம் கேட்ட போது,, அவர் அருகில் கிணறு ஒன்று இருப்பதாக கூறிய நிலையில், தண்ணீர் அருந்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தான்.
ஓய்வெடுத்த போது திடீரென கேட்ட சத்தத்தில் எழுந்த சைதன்யா முயல் ஓடுவதை பார்த்துக் கொண்டிருந்த போது, மேலே இருந்த மரக்கிளை ஒன்று அவன் ஓய்வெடுத்த இடத்தில் விழுந்தது.
நூலிழையில் உயிர்தப்பிய சைதன்யா மீண்டும் தனது பயணத்தை தொடங்கி இரவில் ஊரை அடைந்த போது, சத்திரத்தில் பசியோடு இருந்த ஒருவர் தான் வைத்திருந்த பதார்த்தங்களை வழங்கி பசியாற்றினான்.
பின்பு இரவில் சத்திரத்தில் கண்ணயர்ந்த சைதன்யாவிற்கு மீண்டும் ஒரு சத்தம் கேட்ட போது, விஷப்பாம்பு தீண்டி வாயில் நுரைதள்ள ஒருவர் உயிருக்கு போராடிய போது தன்னிடம் இருந்த மூலிகையை சாறு எடுத்து அந்நபரை காப்பாற்றியுள்ளார்.
பின்பு குருவின் சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் தனது குருகுலம் திரும்பி குருவிடம் வழியில் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். அப்பொழுது குரு ஒருவழியாக கடவுளை பார்த்துவிட்டாய் என்று சைதன்யாவிடம் கேட்ட போது, சைதன்யா நான் எங்கே கடவுளை கண்டேன் என்றான்.
பாம்பு தீண்டி ஒருவரை நீ காப்பாற்றிய போது அவருக்கு நீ கடவுள், உனக்கு பாம்புக்கடி மூலிகையை கொடுத்தவர், கிணறு வெட்டி வைத்திருந்தவர், உனது உயிரைக் காப்பாற்றிய முயல் இவையும் கடவுள் தான். பசியாக இருந்த ஒருவருக்கு உணவளித்த போது அவருக்கு நீ கடவுள்... என்று குரு கூறியுள்ளார்.
அதன் பின்பு சைதன்யாவிற்கு எல்லாம் புரிந்துள்ளது. எங்கும் எதிலும் அரசாட்சி செய்பவர் இறைவன் என்பதை புரிந்து கொண்டுள்ளான்.