மகாபாரதம்: கர்ணனின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்த கிருஷ்ணர்
மனிதர்களுக்கு வாழும் வாழ்க்கையை தெளிவாக சிந்தித்து செயல்பட வழிநடத்தும் மிக பெரிய காவியம் தான் மகாபாரதம். மகாபாரதத்தில் எது நன்மை? எது தீமை? செய்த தவறுக்கும், செய்த புண்ணியத்திற்கு கட்டாயம் பலன் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு காட்சிகளும் அமைய பெற்று இருக்கும்.
மேலும், மகாபாரதத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் கர்ணன். இல்லை என்று சொல்லாது கேட்பவர்களுக்கு கேட்டதை கொடுக்கும் கர்ணன் நல்லவனாகவே இருந்த போதிலும், சேராத இடம் சேர்ந்து துன்பத்தை தழுவி கொண்டான்.
அப்படியாக, கிருஷ்ணர் கர்ணனின் கடைசி ஆசை ஒன்றை இறக்கும் தருவாயில் நிறைவேற்றி வைத்திருக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
முன்னோருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தினால் கர்ணனின் தேர் தக்க சமயத்தில் சகதியில் சிக்கிக் கொண்டது. அதோடு, பரசுராமரின் சாபத்தால் முக்கியமான தருணத்தில் அஸ்திரத்திற்கான மந்திரம் கர்ணனுக்கு மறந்து போகிறது.
அந்த சமயத்தை பயன்ப்படுத்தி கொண்ட அர்ஜுனன், அவன் வீசிய அம்புகள் கர்ணனின் உடலை தைக்கிறது. ஆனாலும், கர்ணனின் உயிர் பிரியவில்லை. அந்த நேரத்தில் கிருஷ்ண பரமாத்மா அந்தணர் வேடத்தில் கர்ணன் முன் தோன்றி தான் மலைகளில் தவம் கொண்டு இருப்பதாகவும், கர்ணனின் கொடை பற்றி அறிந்துதான் யாசகம் வேண்டி வந்துள்ளேன் என்று கூறினார்.
கர்ணன், வந்திருப்பது அந்தணர் அல்ல கிருஷ்ணர் பரமாத்மா என்று அறிந்து, ஐயா தாங்கள் என்னிடம் இல்லாத ஒன்றை கேட்டு, இல்லை என்று மட்டும் சொல்ல வைத்து விடாதீர்கள் என்றான். அந்தணர் வடிவில் இருந்த கிருஷ்ணரும் கர்ணனை பார்த்து, தாங்கள் செய்த புண்ணியங்கள் அனைத்தும் கொடுப்பாயா? என்று வினாவினார்.
அதற்கு கர்ணன் “நான் செய்த, செய்யும், செய்யப் போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்கு தருகிறேன்” என்று இதயத்தில் தைத்த அம்பை எடுத்து தனது குருதியின் வாயிலாக அந்த அந்தணருக்கு தர்மம் செய்கிறான்.
அந்த சமயத்தில் கிருஷ்ணரை பார்த்து "சர்வம் கிருஷ்ணார்பணம்" என்று கூறுகிறான். "சர்வம் கிருஷ்ணார்பணம்" என்று முதலில் சொல்லியதும் கர்ணன் தான். மேலும், கர்ணனிடம் யாசகம் பெற்று கொண்ட கிருஷ்ணர் கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுக்கிறார்.
கர்ணன் கிருஷ்ணரை பார்த்து பரவச நிலை அடைந்து, கிருஷ்ணா எனக்கு தாங்கள் முக்தி அருளவேண்டும், இல்லை நான் பிறக்கும் எல்லா பிறவிகளிலும் இல்லை என்று சொல்லாத இதயம் கொடுக்க வேண்டும் என்று வரம் கேட்கிறார்.
கிருஷ்ணரும் கர்ணன் கேட்ட வரத்தை அருள்கிறார். மேலும், இந்த இடத்தில் நாம் முக்கியமான விஷயம் ஒன்றை கவனிக்க வேண்டும். அதாவது கர்ணன் யாசகம் கொடுக்கும் பொழுது கர்ணனின் கைகள் உயர்கிறது, கிருஷ்ணரின் கை தாழ்கிறது.
இங்கு தான் பகவான் கர்ணன் ஆசை நிறைவேற்றிய இடம். அதாவது, கர்ணனுக்கு ஒரு ஆசை இருந்தது. கர்ணன் எல்லோருக்கும் யாசகம் செய்துவிட்டார், ஆனால் கிருஷ்ண பகவானுக்கு மட்டும் யாசகம் செய்யவில்லை என்பதுதான். அதனால், பகவான் கிருஷ்ணன் தன் பக்தனுக்காக இங்கே தன்னை தாழ்த்திக் கொள்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |